குடிசைகள் ஒழிப்பு திட்டத்தில் கிராமங்களில் ஜாதி வாரியாக பயனாளிகள் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிசைகள் ஒழிப்பு திட்டத்தில் கிராமங்களில் ஜாதி வாரியாக பயனாளிகள் தேர்வு

Added : ஜூன் 18, 2010 | கருத்துகள் (1)
Share
சென்னை : பயனாளிகள் தேர்வின் போது, அனைத்து கிராம ஊராட்சிகளும், அங்கு வசிக்கும் அனைத்து ஜாதியினரும் பயனடையும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில், புதிதாக ஓலைக் குடிசைகள் அமைத்து ஒருவரே பல்வேறு வீடுகளுக்கான பயன்களை அபகரிக்க வாய்ப்புள்ளதால், ஆரம்ப கட்டத்திலேயே பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. அனைத்து கிராமங்களிலும் உள்ள
குடிசைகள் ஒழிப்பு திட்டத்தில் கிராமங்களில் ஜாதி வாரியாக பயனாளிகள் தேர்வு

சென்னை : பயனாளிகள் தேர்வின் போது, அனைத்து கிராம ஊராட்சிகளும், அங்கு வசிக்கும் அனைத்து ஜாதியினரும் பயனடையும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில், புதிதாக ஓலைக் குடிசைகள் அமைத்து ஒருவரே பல்வேறு வீடுகளுக்கான பயன்களை அபகரிக்க வாய்ப்புள்ளதால், ஆரம்ப கட்டத்திலேயே பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. அனைத்து கிராமங்களிலும் உள்ள குடிசைகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றின் முன் பயனாளிகளை நிற்க வைத்து, புகைப்படம் எடுக்கப்படுகிறது. இதற்காக, கணக்கெடுப்பின் போது 22 வகையான தகவல்கள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள தகுதியுள்ள பயனாளிகள் பட்டியல், தகவலுக்காக கிராமசபை முன் வைக்கப்படும். தவறுதலாக விடுபட்ட குடிசைகள், தவறுதலாக சேர்க்கப்பட்ட குடிசைகள் அல்லது தகுதியற்ற குடிசைகள் இருந்தால், அவற்றை தீர்வு காணவும் திட்டம் வகுக்கப்பட உள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும், முதல் கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, வீடுகளின் எண்ணிக்கையை ஒதுக்கீடு செய்யும் முறை, இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு, மாநில அரசு நிதியில் மூன்று லட்சம் வீடுகளும், மத்திய அரசின் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளும் என நான்கு லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன. மொத்தமுள்ள 12 ஆயிரம் கிராம ஊராட்சிகளுக்கும் தலா 200 வீடுகள் என்ற கணக்கில் ஒதுக்கினால், மொத்தம் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் வீடுகள் வரும். இவை நிலையான பாகம் எனக் கூறப்படுகிறது.

மீதமுள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் வீடுகள், மாறுபாடுடைய பாகம் என்று குறிப்பிடப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள குடிசைகளின் விகிதாச்சார அடிப்படையில் இந்த வீடுகள் பகிர்ந்து நிர்ணயிக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில், ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒன்று முதல் நூற்றுக்கும் மேற்பட்டவை வரை குக்கிராமங்கள் உள்ளன. சராசரியாக ஒரு ஊராட்சிக்கு எட்டு குக்கிராமங்கள் உள்ளன. அனைத்து குக்கிராமங்களிலும் ஒரே நேரத்தில் பணியை துவக்கினால், 90 ஆயிரம் இடங்களில் பணியை துவக்க வேண்டும். இதை கண்காணிப்பது எளிதல்ல.

எனவே, ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள குக்கிராமங்களில் எண்ணிக்கை அதிகமுள்ள குடிசைகளுக்கு முன்னுரிமை அளித்து, "இறங்குமுகமாக' வரிசைப்படுத்தி, நிரந்தர வீடுகள் கட்டும் பணி துவக்கப்படும். இதுதவிர, ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதால், பல்வேறு ஜாதியினருக்கு சமமாக வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகும். எனவே, பல்வேறு ஜாதிகளுக்கு இடையே உள்ஒதுக்கீடு வழங்கும் முறை பின்பற்றப்பட உள்ளது.

உதாரணத்துக்கு, ஒரு கிராமத்தில் நான்கு வகை குக்கிராமங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த கிராமத்தில் தகுதியுள்ள குடிசைகள் 900. அவற்றில், ஜாதி வாரியாக ஆதிதிராவிடர் 300, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 250, பிற்படுத்தப்பட்டோர் 300, இதர வகுப்பினர் 50 என இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில், முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 150 என இருந்தால், ஜாதி வாரியான மக்கள் தொகைக்கு ஏற்ப 300: 250:300:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து அளிக்க வேண்டும். இதற்காக, ஆதிதிராவிடர்கள் 300 குடிசைகளை மொத்தமுள்ள 900 குடிசைகளால் வகுத்து, அதை 150 உடன் பெருக்கினால், 50 குடிசைகள் வரும்.

இதேபோல செய்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோரக்கு 42, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, இதர வகுப்பினருக்கு எட்டு என ஒதுக்கப்படும். ஒரு குடியிருப்பில் 50 வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டு, அங்கு 200 குடிசைகள் இருந்தால், கதவு எண் வரிசைப்படி முதல் 50 குடிசைகளுக்கு, வீடுகள் ஒதுக்கப்படும். வாக்காளர் பட்டியல் அடிப்படையில் கதவிலக்க எண் எடுத்துக் கொள்ளப்படும்.

ஒரே கதவிலக்க எண்ணில் வரிசையாக பல குடிசைகள் இருந்தால், ஒவ்வொரு இனத்துக்கும், ஒவ்வொரு குக்கிராமத்திலும், தெருவாரியான குடிசைகள் நிர்ணயிக்கப்படும். அதிக குடிசைகள் உள்ள தெருக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், ஒவ்வொரு பிரிவினருக்கான முன்னுரிமைப் பட்டியல் நிர்ணயிக்கப்பட்டதும், குறிப்பிட்ட இனத்தவர்கள் குடிசைகள் அதிக எண்ணிக்கையில் உள்ள குக்கிராமத்துக்கு முதலில் ஒதுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குக்கிராமத்தில் உள்ள குடிசைகள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்ட பின்பே, அதே இனத்தவருக்கான அடுத்த குக்கிராமம் தேர்வு செய்யப்படும்.

இந்த அம்சங்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டு தயாரிக்கப்படும் பட்டியல், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலக இணையதளத்தில் புதிய மென்பொருள் மூலம் பதிவு செய்யப்படும். பயனாளிகள், கிராமம், தெரு, ஜாதி போன்ற அனைத்து அம்சங்களும் பிரிக்கப்பட்டு, தகுதியுடைய பயனாளிகள் பட்டியல், கம்ப்யூட்டர் மூலமே தயாரிக்கப்படும். இதனால், முறைகேடுகளோ, தலையீடுகளோ இருக்க வாய்ப்பில்லை.

வன்னியர்களுக்கே அதிக வாய்ப்பு தென்மாவட்டங்கள் புறக்கணிப்பு : கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தால் அதிகளவில் பயன்பெறப் போகிறவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களே. அதுவும் வன்னியர்கள் அதிகம் பயன்பெறும் வாய்ப்பு உள்ளது. கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், பயனாளிகளை தேர்வு செய்ய, குடிசைகளை கணக்கிடும் பணி முடிந்துள்ளது. இதன்படி, மொத்தம் கணக்கிடப்பட்ட 22 லட்சம் குடிசைகளில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 13.1 சதவீத குடிசைகளும், அதற்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டத்தில் 9.6 சதவீதம், நாகை மற்றும் தஞ்சையில் தலா 6.8 சதவீதம் குடிசைகள் உள்ளன. தொடர்ந்து, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்கள் உள்ளன.

மிகவும் குறைவான குடிசைகள் உள்ள மாவட்டங்களில் நீலகிரியில் குடிசைகளே இல்லை. தேனியில் 0.1 சதவீதம் குடிசைகளும், விருதுநகரில் 0.3, கன்னியாகுமரியில் 0.4, கோவையில் 0.5, தூத்துக்குடியில் 0.6, நெல்லை மற்றும் திருப்பூரில் 0.7 சதவீதம் குடிசைகள் உள்ளன. ராமநாதபுரம், கரூர், சிவகங்கை, மதுரையில் தலா 1 சதவீதம் குடிசைகளே உள்ளன.

இவற்றில், ஜாதி வாரியாக பார்த்தால், அதிகளவு குடிசைகளாக 41.5 சதவீத குடிசைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வசிக்கின்றனர். ஆதிதிராவிடர்கள் 31.2 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் 23.8 சதவீதமும், பழங்குடியினர் 2.8 சதவீதமும், இதர வகுப்பினர் 0.7 சதவீதமும் உள்ளனர்.

அப்படி பார்த்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தான் அதிகளவில் இத்திட்டத்தால் பயனடைய உள்ளனர். அதுவும் குறிப்பாக, வன்னியர் அதிகமுள்ள வடமாவட்டங்களில் தான் குடிசைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதால், வன்னியர்கள் பெரிதும் பயனடைவர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X