புதுடில்லி : ஏ.ஜே.எல்., எனப்படும் அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம், டில்லியில் இயங்கி வரும் இடத்தில் இருந்து காலி செய்யும்படி, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வழக்கு தொடர்ந்துள்ளது. 'இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை' என, டில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான, ஏ.ஜே.எல்., எனப்படும் அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட், டில்லியில், ஐ.டி.ஓ., மெட்ரோ பகுதியில் உள்ளது. இந்த இடத்துக்கான, 56 ஆண்டு கால குத்தகையை முடித்துக் கொள்வதாக கூறி, அதை காலி செய்யும்படி, ஏ.ஜெ.எல்.,லுக்கு, மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம், 'நோட்டீஸ்' அனுப்பியது.
இதை எதிர்த்து, ஏ.ஜே.எல்., நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அப்போது, ஏ.ஜே.எல்., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுனில் பெர்னாண்டஸ்
கூறியதாவது: டில்லி, மெட்ரோ, ஐ.டி.ஓ., பகுதியில், 1962 முதல், 56 ஆண்டுகளாக, ஏ.ஜே.எல்., அலுவலகம் உள்ளது. இந்த இடத்திலிருந்து, 'நேஷனல் ஹெரால்டு' ஆங்கில பத்திரிகை, 'நவ்ஜீவன்' ஹிந்தி பத்திரிகை, 'காவ்மி அவாஸ்' உருது பத்திரிகை ஆகியவை, 2016 - 17ம் ஆண்டுகளில், டிஜிட்டல் பதிப்புகளாக வெளியாகின்றன.
நேஷனல் ஹெரால்டு வாரப்பத்திரிகை, ஞாயிற்று கிழமைகளில், கடந்த ஆண்டு, செப்., 24 முதல், வெளியாகி வருகிறது. இந்த இடத்தை, 15ம் தேதிக்குள் ஒப்படைக்கும்படி, ஏ.ஜே.எல்.,லுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவு, அக்., 30ல் வழங்கப்பட்டது. அதன்பின், நீதிமன்றம் விடுமுறைக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான, ராஜேஷ் கோக்னா, ''அரசு இடத்தில் இருந்து காலி செய்ய வைப்பற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கெடு தேதிக்குள் காலி செய்யாவிட்டால், அந்த இடத்திற்குள் அதிகாரிகள் நுழைய வேண்டி வரும்,'' என்றார்.
பின் நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தப்பட்ட இடத்தில், அரசு தரப்பில், வலுக்கட்டாயமாக நுழைய மாட்டார்கள். ஆவணங்கள் ரீதியில், அந்த இடத்தை, தங்கள் கட்டுப்பாட்டில் அரசு கொண்டு வரும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
ஏ.ஜே.எல்., நிறுவனத்தில், காங்., தலைவர் ராகுல், அவரது தாய் சோனியா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவன இடத்தை காலி செய்யும் உத்தரவை எதிர்த்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க, டில்லி உயர் நீதிமன்றம் மறுத்தது, ராகுலுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
ஏ.ஜே.எல்., நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள, காங்., தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா, காங்., மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர், 2011 - 12ல் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் முறைகேடு நடந்து உள்ளதாக கூறி, வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கும்படி, இவர்கள், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான இறுதி வாதங்கள், டிச., 4ல் நடக்கும் என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.அப்துல் நஸீர் அடங்கிய அமர்வு, நேற்று அறிவித்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (25)
Reply
Reply
Reply