புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன கட்டட வழக்கு தொடர்பாக, இம்மாதம், 22 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த, 'அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் சார்பில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில், மேலும் சில பத்திரிகைகளும் டிஜிட்டல் வடிவில் வெளியாகின்றன. இந்த நிறுவனத்தின் அலுவலகம், டில்லியில் மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது.
நிலம் தொடர்பான, 56 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தத்தை, மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, அந்த கட்டடத்தை காலி செய்யும் படி, அக்., 30ல் மத்திய அரசு உத்தரவிட்டது. இம்மாதம், 15க்குள், கட்டடத்தை ஒப்படைக்கும் படி, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இதை அவசர வழக்காக விசாரிக்க கோரியது. எனினும், இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க, நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்கள், கைக்கு வராததால், இவ்வழக்கை, 22ல் விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, 'வரும், 22 வரை, கட்டடம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை' என, மத்திய அரசு சார்பில் உறுதிஅளிக்கப்பட்டுள்ளது. காங்., தலைவர் ராகுல் மற்றும் அவரது தாய் சோனியா ஆகியோர், அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பதால், இந்த வழக்கின் போக்கு, அவர்கள் இருவருக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (11)
Reply
Reply
Reply