சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

பிரம்மாவும், முதலாவது அடிப்படைவாத செயலும்

Added : நவ 16, 2018
Share
Advertisement
பிரம்மாவும், முதலாவது அடிப்படைவாத செயலும்

ஆன்மீகம் என்பது, நிச்சயத்தன்மையை நோக்கியது அல்ல, அது தெளிவை நோக்கிய ஒரு பயணம் என்று சத்குரு கூறுகிறார். எல்லையற்றதற்குக் குறுக்கே ஒரு எல்லைக்கோடு வரைய முயற்சித்து, முதல் அடிப்படைவாத செயலை வெளிப்படுத்திய, பிரம்மா பொய்யுரைத்த கதையை அவர் விவரிக்கிறார்.

சத்குரு:
சிவன் முக்கியக் கதாபாத்திரம் ஏற்கும் எண்ணற்ற புராணக்கதைகள் இருக்கின்றன ஏனென்றால் பிரபஞ்சத்தின் புதிர்களை விவரிப்பதற்கு ஒரே ஒரு உருவகம் ஒருகாலும் போதாது. என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய புராணமானது அடிப்படைவாதத்தின் அபாயங்களை நமக்கு நினைவூட்டுகிறது.


பிரபஞ்சத்தின் தூண்


படைப்புக்கடவுள் பிரம்மாவும், காக்கும்கடவுள் விஷ்ணுவும் ஒரு மாபெரும் நெருப்புத்தூண் ஒன்றைக் கண்டனர். முடிவற்ற இந்த பிரகாசமான தூணிலிருந்து 'ஆ உ ம்' என்ற ஒலி வெளிவந்துகொண்டிருந்தது. ஆச்சரியமடைந்தவர்களாக, இது என்னவென்று துப்புத்துலக்க முடிவு செய்தனர். பிரம்மா ஒரு அன்னத்தின் வடிவமெடுத்து, தூணின் உச்சியைத் தேடிக்கொண்டு நீலவானில் உயரே எழும்பிப் பறக்கத் தொடங்கினார். விஷ்ணு ஒரு காட்டுப்பன்றியின் உருவம் தாங்கி, தூணின் அடிமுடியைத் தேடிக்கொண்டு பிரபஞ்சத்தை ஆழமாகத் தோண்டியவாறு சென்றார்.

இந்த முயற்சியில் இருவருமே தோற்றுவிட்டனர். ஏனென்றால் சிவனே அண்டவெளியின் இந்தத் தூணாக நின்றான். அளவீடு செய்ய முடியாததை எப்படி ஒருவர் அளக்கமுடியும்? விஷ்ணு திரும்பி வந்து, தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இருப்பினும், தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத பிரம்மா மட்டும், தான் வெற்றிகரமாக உச்சியை அளந்துவிட்டதாகப் பெருமை பேசினார். சாட்சியாக, பிரபஞ்சத்தின் உச்சியின் கண்டெடுத்ததாக ஒரு வெண்ணிறமான தாழம்பூவை முன்வைத்தார். தாழம்பூவும் பிரம்மாவின் கூற்றை வழிமொழிந்தது.

இந்தப் பொய்யினால் பெருத்த துன்பத்திற்கு ஆளாகும்படி, பிரம்மா தன் பொய்யுரையை முடிப்பதற்குள் சிவன் ஆதியோகியாக அங்கே தோன்றினான். விஷ்ணுவும், பிரம்மாவும் அவரது காலடிகளில் வீழ்ந்தனர். பொய்யுரைத்த காரணத்தினால், பிரம்மா இனிமேல் வணங்குவதற்கு உரியவர் அல்ல என்று சிவன் அறிவித்தார். இந்தத் தந்திரத்திற்கு உடந்தையாக இருந்ததால், தாழம்பூ சிவனின் கருணையை இழந்தது. இனிமேல் தனக்கு அந்தப்பூவை அர்ப்பணமாக ஏற்பதற்கு ஆதியோகி மறுத்துவிட்டார். மஹாசிவராத்திரியின் மகத்துவமான இரவில் மட்டும் அதற்கு விதிவிலக்கு அளித்தார். மிக ஆழமான ஆன்மீக சாத்தியக்கூறு உடையதாகக் கருதப்படுகின்ற, வருடத்தின் அடர்த்தியான இருள் பொருந்திய அந்த இரவில் மட்டும்தான், இன்று வரையில் தாழம்பூவானது வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

பூமியின் முதல் அடிப்படைவாத செயலை, பிரம்மாவின் பொய் குறிக்கிறது. அடிப்படைவாத உந்துதலுக்கு மறைமுகமாகத் துணை நின்றதற்காக பூவும் தண்டிக்கப்படுகிறது. எல்லையற்ற ஒரு நிகழ்வுக்கு, எல்லைக்குட்பட்ட ஒரு முடிவை அறிவிப்பது, எல்லைக்கோடில்லாத ஒன்றுக்கு எல்லைகள் வரைவது, ஆழங்காணமுடியாத ஒன்றைக் குறித்துத் தீர்மானங்கள் செய்வது போன்றவைகள் எல்லாமே, எதுவும் இல்லாத ஒன்றில் நிச்சயத்தன்மை உருவாக்குவதற்கான மனித உந்துதலின் தொடக்கம். இது வலியின், மாயையின் பிறப்பு.


எல்லையற்ற நிச்சயமில்லாதது


ஆன்மீகப் பயணமானது தெளிவை நோக்கிய ஒரு பயணமேயன்றி, ஒருபோதும் அது நிச்சயத்தன்மையை நோக்கியதல்ல. நீங்கள் தொடக்கங்கள் மற்றும் முடிவுகள் குறித்து தீர்மானங்கள் இயற்றும்போது, நீங்கள் நம்பிக்கையாளராக இருக்கிறீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே எதுவும் தெரியவில்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளும்போது, நீங்கள் சாதகராக இருக்கிறீர்கள்.

ஞானமடைந்தவராக இருப்பதென்பது நிச்சயத்தன்மையின் நிலையல்ல. அது வரையறைக்குட்பட்ட அறிதலிலிருந்து எல்லையற்ற அறியாமைக்குள் நகர்ந்து செல்வது. எல்லையற்ற அறியாமை மற்றும் வரையறை இல்லாத நிச்சயமற்ற ஒரு நிலைக்குத் தட்டி எழுப்புவது. படைப்பின் வரையறைகளால் நீங்கள் பிணைக்கப்படாதபோது, படைப்பாளியின் விடுதலை உங்களுக்கு ஆசிர்வாதமாகிறது.

சிவனாகிய எல்லையற்ற தன்மையின் அற்புதமான நினைவூட்டலாக கைலாய மலை விளங்குகிறது. இதுதான் உலகத்தின் மாபெரும் மறைஞான நூல் நிலையம். இது உயிரோட்டமற்ற களஞ்சியமாக இல்லாமல், மனித விழிப்புணர்வின் உயிரோட்டமான ஒரு சோதனைக்கூடமாக இருக்கிறது.

சிவன் அங்கே வாழ்கிறாரா? - இது நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. இதற்கு “ஆம்” என்பதே பதில். மிகவும் நிதர்சனமான உணர்வு நிலையில், அவர் உயிர் வாழ்கிறார் - உடல் தன்மையில் அல்ல, ஆனால் அளப்பரிய சக்தி வடிவில். நூறு சதவிகிதம் அனுபவப்பூர்வமாக, நூறு சதவிகிதம் உயிர்வாழ்பவராக, நூறு சதவிகிதமும் இங்கு, இப்போது அறிந்துகொள்ளக்கூடியவராக சிவன் இருக்கிறார். அவரைத் தம் வயப்படுத்துவதற்கு எண்ணற்ற முயற்சிகள் இருந்தபோதிலும், எந்த வேதமோ அல்லது மதப்பிரிவோ, சித்தாந்தமோ அல்லது கொள்கையோ அவரை வெற்றிகொள்ள முடியவில்லை. அவர் கட்டுப்படுத்த முடியாதவராகவே இருக்கிறார். அவருக்குள் உங்களால் கரைந்து போகமுடியும். ஆனால் அவரை அறிந்து கொள்வதென்பதை நீங்கள் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. பொய்த்துப்போன நம்பிக்கையிலிருந்து அறிவுக்கெட்டாத வலி மிகுந்த தெளிவுக்கும் மற்றும் மதிப்பீடில்லாத சுய தம்பட்டத்திலிருந்து தனிமனித முக்கியத்துவமின்மைக்கும் செல்வது - இதுதான் உணர்தலுக்கான வழி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X