புதுடில்லி:அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சசிகலாவின் அக்கா மகன், தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இருந்து, தினகரனைவிடுவிக்க மறுத்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக, வரும், டிசம்பர், 4ல் நேரில் ஆஜராகும்படி, தினகரனுக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க., இரண்டாகப் பிரிந்தது. அதையடுத்து, கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தில், அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் கமிஷன் முடக்கியது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து, தேர்தல் கமிஷன் விசாரித்து வந்தது.சின்னத்தை மீட்பதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுக்க முயன்றதாக, தினகரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அதையடுத்து,கடந்தாண்டு ஏப்ரலில், கைது செய்யப்பட்ட, தினகரன்,
ஜாமினில் விடுவிக்கப் பட்டார்.இந்தவழக்கில், தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரன், தினகரனின் நண்பர் மல்லி கார்ஜுனா உள்ளிட்டோர் மீது, டில்லி போலீஸ் ஏற்கனவே குற்றச்சாட்டை தாக்கல் செய்தது.
இதற்கிடையே, சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.
தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, தினகரன் சார்பில், டில்லி பட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அஜய் பரத்வாஜ் முன், விசாரணைக்கு
வந்தது.அப்போது, நீதிபதி கூறியதாவது:
தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில், தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த, போதிய முகாந்திரம் உள்ளது.அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது, மோசடிசெய்தது, சாட்சியங்களை கலைக்க முயன்றது உள்ளிட்ட கிரிமினல் பிரிவு களில், தினகரன் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் முகாந்திரம் உள்ளது. அதனால், அவர்கள் மீதும், குற்றச்சாட்டு பதிவு செய்து, வழக்கின் விசாரணையை தொடர வேண்டும்.இந்த வழக்கில்,
குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக, வரும், டிச., 4ம் தேதி, தினகரன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.
'தினகரன் ஆதரவு, 18, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் தமிழக சட்டசபை சபாநாயகரின் உத்தரவு செல்லும்' என, உச்ச நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. தொடர்ந்து, அரசியலில் சரிவுகளை சந்தித்து வரும் நிலையில், டில்லி சிறப்பு நீதிமன்றத்தின் இந்தஉத்தரவு, தினகரனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
'பொய் வழக்கு'
டில்லி நீதிமன்ற உத்தரவு குறித்து, அ.ம.மு.க., துணைப் பொதுச்செயலர் தினகரன், 'டுவிட்டர்' சமூகதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:சிலரது சதி காரணமாக, இரட்டை இலையை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக, என் மீது வழக்கு தொடரப்பட்டது. அதிலிருந்து, என்னை விடுவிக்கக் கோரி, நான் செய்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது, பொய் வழக்குஎன்பதை, நீதிமன்றம் மூலமாக நிரூபிப்பேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (43)
Reply
Reply
Reply