உரத்த சிந்தனை | Dinamalar

உரத்த சிந்தனை

Added : நவ 17, 2018 | கருத்துகள் (5)
Share
    உரத்த சிந்தனை

புரிந்து கொள்ளாமல் புறக்கணிப்பு ஏன்?
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைப் பற்றி புரிய வைக்கவும், நாட்டின் இன்றைய முக்கியமான பிரச்னைகளில், ஆர்.எஸ்.எஸ்., நிலைப்பாடு குறித்து விளக்கவும், அந்த அமைப்பின் தலைவர், மோகன் பாகவத் பங்கேற்ற, மூன்று நாள் சொற்பொழிவு, டில்லியில் சமீபத்தில் நடந்தது.அந்த கலந்துரையாடலில் பங்கேற்றவர்களில் பலரும், சங்கத்தின் கருத்து களை அறிந்திருக்காமல், தவறான பிரசாரங்களால், சங்கம் பற்றிய தவறான கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் பேச்சால், வாயடைத்துப் போன, சங்க எதிர்ப்பாளர்கள், அந்த சொற்பொழிவில், ஏதாவது குறை காண முயற்சித்தனர்.எனினும், குற்றம் சாட்டும் வகையில், அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்.,சின் இரண்டாவது தலைவர், குருஜியின் சொற்பொழிவுகள், சிந்தனைகளின் தொகுப்பான, 'பஞ்ச் ஆப் தாட்ஸ்' நுால் குறித்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் தெரிவித்த விளக்கம், சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.

குருஜியிடம் இருந்து சங்கத்தை, மோகன் பாகவத், துாரமாகக் கொண்டு சென்று விட்டார் எனும் அளவுக்கு, அந்த ஆய்வு, நீண்டு கொண்டிருக்கிறது; அது, முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.உண்மையில், அந்த சொற்பொழிவுத் தொடரின், இரண்டாவது நாளில், ஹிந்து மற்றும் ஹிந்துத் வா குறித்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் ஆற்றிய சொற்பொழிவு முழுவதும், சங்கத்துக்கு, குருஜி வழங்கிய, ஆக்கப்பூர்வ அறிவுரைகளின் அடிப்படையிலானது.

'பஞ்ச் ஆப் தாட்ஸ்' நுாலை, அதன் காலத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டியது அவசியம். தேசம், தேசிய அடையாளம், தேசத்துடன் சேர்ந்திருத்தல் பற்றிய விரிவான விவாதங்களுக்கு, வழி வகுத்த சூழல்கள் நிறைந்த காலத்தை சேர்ந்தது, அது.ஆர்.எஸ்.எஸ்., தலைவராக அவர் பொறுப்பேற்ற போது, பாகிஸ்தான் ஆதரவுக்குரல் பிரதான பிரச்னையாக மாறி, நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

'வெள்ளையனே வெளியேறு' இயக்கமும் தீவிரமாகி, ஸ்வயம் சேவகர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டதோடு, சிலருக்கு, மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. கொந்தளிப்பான அந்த கால கட்டத்தில், பாகிஸ்தான் தனி நாடு என்ற கோரிக்கையோடு, 1946ல் தேர்தல் நடத்தப்பட்டது.முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில், ஹிந்துக்கள், வன்முறைக்கும், ஒடுக்குதல்களுக்கும் ஆளாக்கப்பட்டனர்.

நேரடி நடவடிக்கையில், பாகிஸ்தானை வலியுறுத்தி, முஹமது அலி ஜின்னா எழுப்பிய, ஆவேச அழைப்பு விளைவாக, வங்காளத்தில் இருந்த ஹிந்துக்கள், பயங்கர வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது; அதே வேளையில், துண்டாடப்பட்டது. சொல்லொண்ணா வன்முறைகளை எதிர்கொண்டு, அனைத்தையும் இழந்து, அந்த நாடுகளின் ஹிந்துக்கள், இந்தியாவில் தஞ்சம் கோரிய, மிகப்பெரிய மனித குல இடப்பெயர்வு நடந்தது.

அந்த மக்களின் வேதனைகளுக்கு சாட்சியாக இருந்து, அவர்களுக்கு ஆதரவளித்து, பாதுகாத்த ஒரே அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்., மட்டும் தான். அந்த ஆண்டுகள் ஏற்படுத்திய மன ரீதியான தாக்கம், மிகவும் விரிவானது. ஹிந்து சமூகத்திலும், நாட்டிலும், அந்த தாக்கம் இன்னும் நீடிக்கிறது.காந்தியின் படுகொலையில், தவறான வகையில், ஆர்.எஸ்.எஸ்., குறி வைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளை அரசால் நிரூபிக்க முடியாத நிலையிலும், ஆர்.எஸ்.எஸ்., மீது தடை விதிக்கப்பட்டது. இது தான், சுதந்திர இந்தியாவில், மோசமான வெறுப்பு அரசியலின் துவக்கம்.

விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, அரசு தயாராக இருக்கவில்லை. பேச்சுக்கு எந்த கதவும் திறக்கப்படவில்லை. தவறான குற்றச்சாட்டுகளால், குருஜி, சிறையில் அடைக்கப்பட்டார்.அந்த அநீதிக்கு எதிராக, முன்னுதாரணமே இல்லாத வகையில், ஒரு அமைதியான சத்தியாக்கிரஹத்தை, ஸ்வயம் சேவக்குகள் நடத்தினர். கடைசியில், நியாயமற்ற அந்த தடை நீக்கப்பட்டது.

அதே வேளையில், கம்யூனிச சித்தாந்தம் விரிவாகி, தேசிய அடையாளத்தை சீர்குலைக்கும், பிரிவினைவாத சிந்தனை, திட்டமிட்டு முன்னிலை படுத்தப்பட்டு வந்தது.இந்தியாவை, கம்யூனிசசீனா, 1962ம் ஆண்டு தாக்கிய போது, கம்யூனிஸ்ட்கள் வெளிப்படையாகவே, சீனாவைப் புகழ்ந்து, தேசத்தை விட, சித்தாந்தத்துக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு, பிரிவினைவாத சிந்தனை, தீவிரமாக வளர்ந்திருந்தது.அதே வேளையில், மத மாற்ற நடவடிக்கைகளும் தீவிரமடைந்தன. அது தொடர்பாக, நீதிபதி, நியோகி கமிஷன் பரிந்துரை அடிப்படையில், காங்கிரஸ் ஆட்சி நடந்த, ஒடிசா, ம.பி.,யில், மத மாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிராக, அந்த மத, சமூகத்துக்குள் மிகப்பெரிய போராட்டம்பரவியது.கொந்தளிப்பு நிறைந்த அந்த கால கட்டத்தில், குருஜி, நாடு முழுக்கப் பயணம் செய்து, தேசிய மனசாட்சியைச் சீர்குலைத்து வந்த பிரச்னைகள் குறித்து, விரிவாக விளக்கி வந்தார்.கடந்த, 1965ம் ஆண்டு வரை நிலவிய சூழல்களை, எதிர்கொள்வதற்கான சிந்தனைகள் மற்றும்மறுமொழிகள் தான், 'பஞ்ச் ஆப் தாட்ஸ்' நுாலில் இடம் பெற்றுள்ளன.

எனினும், இந்த நுாலின் கால கட்டத்தைத் தாண்டி, மேலும், 18 ஆண்டுகளுக்கு, குருஜி, பொது உரையாடலில் ஈடுபட்டார். ஆர்.எஸ்.எஸ்., தலைவராக அவர் இருந்த போது, வெளியிட்ட சிந்தனைகளின் அதிகாரபூர்வ தொகுப்பு, 2006ம் ஆண்டு, 12 பகுதிகளாக, வெளியிடப்பட்டன.குருஜி மற்றும் அவரது கருத்துகளை, பெரும்பாலும், அந்தந்த காலகட்ட பிரச்னைகள் குறித்த, அவரது கருத்துகளை, தெளிவாகப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள், அதை படிப்பது நல்லது.குருஜிக்கு எதிராக எழுதுவதற்கு முன், அவரையும், அவரது கருத்துகளையும், ஆழமாகப் படித்துணர்வது அவசியம் என்ற, அறிவு ஜீவித முயற்சியை, எதிர்ப்பாளர்கள் வெளிப்படுத்தவில்லை.ஸ்ரீ குருஜி - அவரது பார்வையும் வழிகாட்டுதலும் என்ற, 'திருஷ்டி அண்ட் தர்ஷன்' என்ற நுால் இருக்கிறது. அந்த நுாலும், குருஜி மற்றும் அவரது கருத்துகளைவிரிவாக விளக்கும்.

'ஒவ்வொருவரும் இந்த நுாலைப் படிக்க வேண்டும்' என, மோகன்பாகவத் வலியுறுத்தியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், இரண்டாவது தலைவரின் சிந்தனைகளில் இருந்து விலகுதல் என்ற கேள்வி எங்கேவருகிறது?பஞ்ச் ஆப் தாட்ஸ் நுாலின், சில பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மோகன் பாகவத் அளித்த பதிலுக்கும், குருஜியே தெரிவித்துள்ள கருத்துக்கும் வேறுபாடு இல்லை.

கடந்த, 1970ம் ஆண்டுகளில், டாக்டர் ஜிலானிக்கு, குருஜி அளித்த ஒரு பேட்டியில், இந்த நேரடி கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.விமர்சகர்களுக்கு, 'செலக்டிவ் அம்னீசியா' இருப்பதால் அல்லது இதெல்லாம் அவர்களது உள்நோக்கப் பிரசாரத்துக்கு எதிராக இருப்பதால், இது மிகவும் அரிதாக மேற்கோள் காட்டப்படும் பேட்டியாக இருந்து வருகிறது.அந்த பேட்டியின், முக்கிய பகுதிகள்:டாக்டர் ஜிலானி: 'இந்தியராக்குதல்' பற்றி அதிகமாகப் பேசப்பட்டுள்ளது.

இது குறித்து, நிறைய குழப்பங்கள் எழுந்துள்ளன. இந்த குழப்பத்தை எப்படி நீக்குவது என, கூற முடியுமா?குருஜி: இந்தியராக்குதல் என்பது, ஜனசங்கம் வழங்கிய கோஷம். அதில் எதற்காக குழப்பம்? இந்தியராக்குதல் என்பதற்கு, அனைவரையும் ஹிந்துக்களாக மாற்றுதல் என்று அர்த்தம் அல்ல
.நாம் அனைவரும், 'நாம் இந்த மண்ணின் குழந்தைகள்; இந்த நாட்டுக்கு, நாம் விசுவாசமாக இருக்க வேண்டும்' என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.நாம், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; ஒரே மூதாதையரின் சந்ததிகள்; நமது லட்சியங்களும் பொதுவானவை. இதையெல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான்,இந்தியராக்குதல் என்பதன் உண்மையான அர்த்தம்.இந்தியராக்குதல் என்பதற்கு, ஒருவரை, அவரது மதத்தை கைவிட வேண்டும் என்று அர்த்தம் அல்ல; அப்படி நாங்கள் சொன்னதும் இல்லை; சொல்லப் போவதும் இல்லை. மாறாக, ஒட்டு மொத்த மனித சமூகத்துக்கும், ஒரே ஒரு மத அமைப்பு மட்டுமே இருப்பது, பொருத்தமாக இருக்காது என, நாங்கள் நம்புகிறோம்.

டாக்டர் ஜிலானி: நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். இது, 100 சதவீதம் சரியானது. இந்த தெளிவுக்காக, உங்களுக்கு நன்றி. உங்கள் தரப்பிலிருந்து தெளிவு படுத்தி விட்டீர்கள். சிந்திக்கும் திறன் கொண்ட, எந்த ஒரு நபரும், எந்த ஒரு நேர்மையான நபரும், உங்கள் கருத்துடன் முரண்பட மாட்டார்கள்.

மதவாத பிரச்னைக்கு, நிரந்தரமாக முடிவு கட்டும் வழிகளை கண்டறிய வேண்டும். அதற்காக, உங்களுடன் ஒத்துழைக்கக் கூடிய, முஸ்லிம் இந்தியத் தலைவர்களுடன், நீங்கள் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும்.அதற்கு, இது தான் சரியான வேளை என்ற நீங்கள் கருதவில்லையா... அப்படிப்பட்ட தலைவர்களைச் சந்திக்க, நீங்கள் விரும்புகிறீர்களா?

குருஜி: அப்படி ஒரு சந்திப்பை, நான் விரும்புகிறேன் என்பது மட்டுமல்ல; வரவேற்கிறேன்.இவ்வாறு அந்த பேட்டி இருந்தது.குருஜியை, பிரபல பத்திரிகையாளர், குஷ்வந்த் சிங்கும், 1972ல் பேட்டி எடுத்துள்ளார். அந்த பேட்டியை படித்தால், குருஜியை தவறாகச் சித்தரிக்க, கம்யூனிஸ்ட்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளில் தெளிவு கிடைக்கும்.

ஆரம்பத்தில், குஷ்வந்த் சிங், இப்படி எழுதுகிறார்:'சில நபர்களைப் பற்றி அறியாத நிலையிலேயே, அவர்களைப் பற்றி மோசமான கருத்துகளை வளர்த்துக் கொள்கிறோம். நான் வெறுப்பவர்களின் பட்டியலில், குருஜி கோல்வால்கர், நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்தார்.எனினும், ஒரு பத்திரிகையாளர் என்ற வகையில், அவரை சந்திக்கும் வாய்ப்பை, என்னால் தடுக்க இயலவில்லை.முடிவில், குஷ்வந்த் சிங், இப்படி எழுதுகிறார்:

நான், தாக்கம் பெற்றேனா... ஆம் என, ஒப்புக் கொள்கிறேன். குருஜி, தன் கருத்தை ஏற்க வேண்டும் என, என்னை வலியுறுத்த வில்லை. கலந்துரையாட லுக்கு அவர் தயாராக இருக்கிறார் என்ற உணர்வைத் தான், எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்.இந்த இரு பேட்டிகளும், முழுமையாகப் படிக்க வேண்டியவை. எனினும், குருஜி பற்றிய விரிவான தகவல்களை படிக்காமலேயே, அவரைப் பற்றி விவாதிப்பதையும், அவதுாறு செய்வதையும், கம்யூனிஸ்ட்கள் ஒரு கலையாகவே மாற்றியிருக்கின்றனர்.

இப்படிப்பட்ட பிரசாரத்தில், உலகளவில் அவர்கள், முன்னிலை பெற்று உள்ளனர்.'பஞ்ச் ஆப் தாட்ஸ்' நுாலில், குருஜி, குறிப்பிட்டு விவாதித்துள்ள, அதேபிரச்னைகள் தான், இன்றைய உலகிலும், நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.குறிப்பாக, அடிப்படை வாதத்தை வலியுறுத்தும் சித்தாந்த மன நிலையும் தான், பயங்கரங்களுக்கும், ஒடுக்குதல்களுக்கும் வழி வகுக்கின்றன.இந்தியாவிலும் அப்படிப்பட்டவர்கள் இல்லை என, கூறி விட முடியாது.

மேலும், மிஷினரி அமைப்புகளின் சட்டத்தை மீறிய, மத மாற்றங்களும், மாவோயிசத்திற்கு சர்வ தேச அளவிலான ஆதரவும், சமீபத்தில் நடந்த, சில சம்பவங்களில் வெளிப்பட்டுள்ளன.சமூகத்தில் அமைதியின்மை மற்றும் வன்முறையைப் பரப்பும், இந்த செயல்பாடுகளுக்கு நீண்ட வரலாறு உண்டு.

தேசத்தைக் கட்டமைக்கும் நடைமுறையில், பாரதத்தின் ஹிந்துக்கள் தவிர மற்ற மதத்தினரையும், சேர்ப்பது அவசியம். எனினும், சிறுபான்மையினர் என்ற பெயருடன் இயங்கும் தீவிரவாதிகள், பிரிவினைவாத சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதுமுக்கியம்.இந்த வகையில், நாட்டுக்கான அச்சுறுத்தல் குறித்த, குருஜியின் எச்சரிக்கை, இன்றளவும் பொருந்துகிறது.

கால மாற்றங்களுக்கு ஏற்ப, ஹிந்து வாழ்க்கை முறை, தானாக தகவமைத்துக் கொள்கிறது. இது, சங்கப் பணிகளின் இயல்புக்கும் பொருந்தும். சங்கத்தின், 92 ஆண்டு பயணத்தில், பல ஏற்ற, இறக்கங்கள் இருந்துள்ளன.எதிர்ப்பு, ஒடுக்குமுறை, தீவிர பொய் பிரசாரம் என, பல முயற்சிகள் நடந்துள்ளன. இவை எல்லாவற்றையும் மீறி, அனைவரையும் அரவணைத்து, மிக விரிவாக அணுகி, சங்கத்தின் சிந்தனையும், பணியும், வளர்ந்து கொண்டே வருகிறது.

'நெகிழ்வுத்தன்மை இணைந்த உறுதி' என்ற சிறப்புத்தன்மை கொண்ட, ஹிந்து தத்துவத்தின் உள்ளார்ந்த பண்புகளும், காலத்திற்கு ஏற்ற மாற்றங்களும் தான், இதன்பின்னணியில் உள்ள உண்மையான வலிமை.
மன்மோகன் வைத்யாஆர்.எஸ்.எஸ்., இணை பொதுச் செயலர்


இ - மெயில்:mmohanngp@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X