'கஜா' புயல் காட்டும்உண்மைகள்...

Added : நவ 18, 2018
Advertisement

தமிழகத்தை தாக்கிய, 'கஜா புயல்' பாதிப்புகளை முற்றிலும் கண்டறிந்து, நடவடிக்கைகள் முடிய, நிச்சயம், 10 நாட்களாகும். புயல் பாதிப்பு அல்லது சூறைக்காற்று அல்லது அதிக அளவில் திடீரென கொட்டும் மழை ஆகியவை, சுற்றுச்சூழல் பாதிப்பின் அடையாளங்கள். வடமாநிலங்களான உத்தரகண்ட் போன்ற சில பகுதிகளைப் பார்க்கும் போது, தமிழகம் அதிக விழிப்புணர்வு கொண்ட மாநிலம். ஆனால், கடற்கரை ஓரங்களில் அமைந்த மாவட்டங்கள் மற்றும் சிறிய குன்று கூட இல்லாத நெய்தல் அல்லது மருதப் பரப்பு ஆகியவை புயல் காற்றை உள்வாங்கும்போது, பேரழிவைச் சந்திக்க நேரிடும்.இதற்கு முன், 'வர்தா' புயல் வந்தபோது, சென்னை மாநகரம் தவித்ததை அனைவரும் அறிவர். இத்தடவை, இப்புயலில் சென்னை தப்பியது நல்லதே. ராமேஸ்வரத்தின் கடற்கரை சீற்றம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.மலைகள் அடங்கிய பகுதிகளில் சூறைக்காற்று, வாழை போன்ற பயிரை அழித்துவிடும். அதன்படி, வேதாரண்யம், நாகை, திருவாரூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இப்புயல், அதிக அழிவை ஏற்படுத்தி விட்டது. புதுச்சேரியும் தப்பவில்லை.இன்றுள்ள நிலையில், வானிலைத் தகவல்கள் ஒரு வாரத்திற்கு முன்பே எளிதாக மதிப்பிடப்படுகின்றன. அதனால், இந்திய வானிலை மையம், சென்னையில் உள்ள வானிலை மண்டல அலுவலகம் ஆகியவை, இப்புயலை சிறப்பாக, முன்கூட்டியே கண்டறிந்து, அதன் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தின. ஆகவே, பொய்ச் செய்திகள், சமூக வலைதளங்களில் வர இயலாத நிலை ஏற்பட்டது, இத்தடவை ஏற்பட்ட மாறுதலாகும்.ஆனால், புயல் நகர்வின் போது, அதன், 'கண்' என்ற மையம் எங்கு தாக்கி, அதன்பின் அதிக காற்று, மழை வேகத்துடன் தாக்கும் என்பதை, இரு நாட்களுக்கு முன் கணிக்க முடியும். அந்த விஷயத்தில், இத்தடவை முன்னதாகவே மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதால், அவர்களில் பலர், ஆந்திர கடலோரத்தில் ஒதுங்கினர்.ஆனால், ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது, வேதாரண்யத்தில் படகுகள் புரட்டிப் போட்ட காட்சிகள், இத்தொழில் எந்த அளவு அதிக பாதிப்புகளை கொண்டது என்பதை அறியலாம். தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு, மின்துறை, பேரிடர் துறை அமைப்பினர் மேற்கொண்ட பணிகள் பாராட்டுக்குரியவை. உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் முன்கூட்டி எடுத்த நடவடிக்கை ஆகியவை, அதிக இறப்பைக் குறைத்தன என்றே கூறலாம்.மின்துறை ஏற்கனவே, 70 ஆயிரம் மின் கம்பங்களை வைத்திருந்த செய்தி, மின்மாற்றி மற்றும் ஒயர் பாதிப்புகளை அகற்ற, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, அத்துறை செயல்படுவதால், இந்த வாரத்தில் மின் பாதிப்பு பிரச்னை குறையும்.உதாரணமாக, முன்னர் மழை, வெள்ளத்தில் கடலுார் தத்தளித்த போது, அதற்கான மின் இணைப்புகளை சீர்செய்த, ககன்தீப் சிங் பேடி இத்தடவை, இப்புயல் ஆய்வுக்குழுவில் இடம்பெற்றிருக்கிறார். அதேபோல் சில அதிகாரிகள் குழு, எவ்வித பாரபட்சமும் இன்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக நிவாரணப் பணிகள் நடக்க உதவலாம்.முதல்வரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் முன்கூட்டியே, எடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக அமைந்தன. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத், பாதிப்பு விபரங்களை கேட்டறிந்தது, நிவாரணத்திற்கு எளிதாக உதவிடும். தவிரவும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அரசு எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், தன் கட்சியினரையும் நிவாரணப் பணியில் ஈடுபடச் சொல்லியிருப்பது, தமிழக அரசியல், மாற்றத்தை காண்பதின் அடையாளம் எனலாம்.குறிப்பாக நாகை, வேதாரண்யத்தில், புயல் காற்று வேகத்தில், பனை மரங்களும் வீழ்ந்தன என்றபோது, மாவட்டம் தோறும் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களில், எந்த ரக மரங்கள் ஓரளவு சமாளிக்கும் என்பதை, இனி ஆய்வு செய்ய வேண்டும். தவிரவும், இனி பேரிடர் என்பது, நாம் விரும்பா விட்டாலும் ஏற்படுகிற நிகழ்வு என்பதால், அடுத்த ஐந்து அல்லது, 10 ஆண்டுகளில், மின் இணைப்புகளை தரைவழி கேபிள் வழியாக ஏற்படுத்துவது குறித்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். சாலைப் போக்குவரத்தை சீரமைக்கும் போது, அதன் தரம் மேம்பாடு உடையதாக இருக்க இனி புதிய திட்டங்கள் தேவை.வடகிழக்கு பருவமழைக் காலத்தில், இன்னும் சில புயல் வரலாம்; வராமல் போகலாம். அது இயற்கையின் நியதி. ஆனால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர்ச்சேதம் பற்றிய அவசர மதிப்பீடும், எந்த வகை நிவாரணம் என்றாலும், வங்கிக் கணக்கில், பாதிக்கப்பட்டோருக்கு சென்றடைய வேண்டும். அதை விட தமிழகத்தில் இனி, 'பேரிடர் நிதி' என்ற முன்கூட்டி சேமிக்கப்படும் நிதி, அதிக அளவு இருக்க பட்ஜெட் வழிகாட்ட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X