ஐ.டி., ரெய்டுக்கு மூடுவிழா: சந்திரபாபு அடுத்த திட்டம்| Dinamalar

ஐ.டி., ரெய்டுக்கு மூடுவிழா: சந்திரபாபு அடுத்த திட்டம்

Added : நவ 19, 2018 | கருத்துகள் (106)
Andhra Pradesh, Chandrababu Naidu,Enforcement Department,CBI,ஆந்திரா, சந்திரபாபு நாயுடு, ஐடி ரெய்டு, வருமான வரித்துறை,  சி.பி.ஐ.,  தெலுங்கு தேசம், அமலாக்க துறை, சுப்ரீம் கோர்ட், ஆந்திரா சிறப்பு அஸ்தஸ்து,  பா.ஜ.,  
 IT raid, Income Tax Department,  Telugu Desam,  Supreme Court, Andhra Pradesh Special Status,

ஐ தராபாத்: ஆந்திர மாநிலத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த தடை விதித்துள்ள அம்மாநில முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறையின் அதிகாரங்களை குறைக்க, சுப்ரீம் கோர்ட்டை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மத்திய அரசு மீது கோபம்


பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருந்த சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அஸ்தஸ்து வழங்காததை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். அத்துடன் பா.ஜ., அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

தே.ஜ., கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறிய பிறகு, ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேச தலைவர்கள் வீடுகள், அலுவலங்களில் சி.பி.ஐ., சோதனை, ஐ.டி., ரெய்டு, அமலாக்க துறை சோதனை அடிக்கடி நடந்து வருகிறது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., மாநிலங்களில் சோதனை நடத்த சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பொது அனுமதி அளிக்கும். இந்த அனுமதியை சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ரத்து செய்து விட்டார். மேற்கு வங்கத்திலும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதன்படி, இந்த இரு மாநிலங்களிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய முடியாது. இதற்கு அடுத்தபடியாக வருமான வரித்துறை, அமலாக்க துறை அதிகாரங்களை குறைக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.


சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


தெலுங்கு தேச கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த துறை அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்க பயன்படுத்தப்படுகின்றனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த பிறகு குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்படும். அதன்பிறகு, 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், வருமான வரித்துறை, அமலாக்க துறையின் அதிகாரங்களை குறைக்க கோரி, சந்திரபாபு நாயுடு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X