சென்னை, பெரும் சேதங்களை ஏற்படுத்திய, 'கஜா, ஒக்கி, வர்தா' புயல்களின் பெயர்களை, புயல்களுக்கான பட்டியலில் இருந்து நீக்க, வானிலை மையம் முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும், பல்வேறு நாடுகளில் ஏற்படும் புயல்களை, அதன் ஆண்டு மற்றும் நாடுகள் வழியாக தெரிந்து கொள்ள, பெயர்கள் வைக்கப்படுகின்றன. மேலும், புயல்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும், புயல்கள் வருவதை அறிவித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் எளிதாக, பெயர்வைக்கும் பழக்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்பட்டது.
இந்தியாவில் உருவாகும் புயல்களுக்கு, வடக்கு இந்திய பெருங்கடல் புயல் கமிட்டி பெயர் வைக்கிறது. இந்த கமிட்டி, 2,000த்தில், ஓமன் நாட்டின், மஸ்கட் நகரில் கூடி, பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தது. இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, ஓமன் மற்றும் மாலத்தீவு நாடுகள் இணைந்து, பெயர்களை வழங்கியுள்ளன.
இந்த பெயர் பட்டியல் விதிகளின்படி, பேரழிவு அல்லது பெரும் வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுத்தும் பெயர்களை, மீண்டும், புயல்களுக்கு வைக்க கூடாது. அந்த பெயர்களை, புயல் பெயர் பட்டியலில் இருந்து அகற்றி விட வேண்டும்.இதன்படி, இந்திய பெருங்கடலில் உருவாகி, பெரும் சேதங்களை உருவாக்கிய வர்தா, தானே, ஒக்கி மற்றும் கஜா புயல்களின் பெயர்களை, பட்டியலில் இருந்து நீக்க, வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, புயல்களின் பாதிப்பு குறித்த அறிக்கையை, புயல்களுக்கான பெயர் பட்டியல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் உலக வானிலை நிறுவனத்திடம் தாக்கல் செய்யப்படும். அந்த அமைப்பு, புயல்கள் தாக்கியதன் அளவு, அதன் விளைவுகளை ஆய்வு செய்து, எந்த பெயர்களை நீக்குவது என்பது குறித்து, முடிவு செய்யும் என, வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE