மோதல் முடிந்து வந்தது திருப்பம்!

Added : நவ 23, 2018 | கருத்துகள் (1)
Advertisement


ஒருவழியாக, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், மோதல் போக்கை மேற்கொண்ட விஷயம், முற்றுப் பெற்றிருக்கிறது. இனி, ரிசர்வ் வங்கியின் தனித்தன்மைக்கு, எந்த மாறுபட்ட நிலையும் ஏற்படாது என்பதுடன், தகுந்த அளவு பொருளாதார வளர்ச்சிக்கு, ரிசர்வ் வங்கியின் உதவிகள் படிப்படியாக அணுக வழி ஏற்படும்.தொழில்நுட்ப வசதிகளால், சிறிய தகவல் என்றாலும், அதற்கான பின்னணிகளை அலசும் சுபாவம், இன்றைய மீடியாவில் எளிதானது. இதற்கு முன், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த, ஒய்.வி.ரெட்டி, சுப்பாராவ் ஆகியோர், பதவிக் காலங்களில் பல்வேறு விஷயங்களில், மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் ஓய்வு பெற்ற பின் தெரிவித்த கருத்துக்களில், அது வெளியானது.அமெரிக்காவின் தலைமை வங்கிப் பணிகளைப் போல், நமது ரிசர்வ் வங்கி அல்ல. பொதுத்துறை வங்கிகள் அதிகளவில் இருப்பதாலும், நிதி குறித்த சில முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, அரசின் வளர்ச்சி திட்டங்களையும் ஆராய வேண்டிய பொறுப்பில் இருக்கும் அமைப்பு.பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன், முந்தைய ஆட்சியில், நிதியமைச்சர் சிதம்பரத்துடன் ஒத்துப் போகவில்லை. இப்போது அவர் தெரிவிக்கும் கருத்துக்கள், வேறு விஷயம்.ஆனாலும், அவர் இந்திய சீர்திருத்த வரிச்சட்டமாக உருவான, ஜி.எஸ்.டி.,யை, 'அதிர்ச்சி ஏற்படுத்திய முடிவு' என, வர்ணித்திருக்கிறார். அவருக்கு, தனிப்பட்ட சில கருத்துக்கள் இருந்தாலும், இந்த புதிய வரி அமலாக்க தொடக்கத்தில், 'ரிசர்வ்' வங்கி கவர்னராக இருந்தவர். அதன் நுணுகிய அணுகுமுறைகளில் தவறு என்று சுட்டிக்காட்ட, அவருக்கு தகுதி இருந்தது. ஆனால், ஒரேயடியாக அதை, செல்லாத கரன்சி நடவடிக்கையுடன் ஒப்பிட்டது, பலரைக் குழப்பியிருக்கிறது.அது மட்டும் அல்ல... அவரும், அவரை அடுத்து பதவிக்கு வந்த, உர்ஜித் படேலும், நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதில் காட்டிய அக்கறையை, எளிதில் குறை கூறுவதற்கு இல்லை.ஆனால், பொதுத்துறை வங்கிகள் கட்டுக்கடங்காமல், 'வாராக்கடன் அதிகரிப்பை' தடுக்க ஏன் உரிய நடவடிக்கை இல்லை என்ற கேள்வி இப்போது எழுகிறது. அதற்கு காரணம், சில உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து எடுக்கும் வங்கி முடிவுகளை மேற்பார்வையிட, நுணுக்கமான அமைப்புகள் செயல்படுவதில் ஏற்பட்ட சுணக்கம் அதிகம் என்று தெரிகிறது.அதிக மக்கள் வாழும் நாட்டில், பொதுமக்களின், 'டிபாசிட்'களை காக்க வேண்டிய பொறுப்பு, வங்கிகளுக்கும், அதிலும் தலைமையாக உள்ள, ரிசர்வ் வங்கிக்கும் இருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது, ஒவ்வொரு வங்கியும், தன்னிடம் கடன் வாங்கி, அதை வேண்டுமென்றே கட்டாமல் மோசடி செய்வதை, ஏன் அனுமதிக்கிறது என்ற கேள்வியும், இப்போது தான் எழுந்திருக்கிறது.பொதுமக்களிடம் இத்தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம், வங்கிகளுக்கு ஏன் என்பதை, இன்று மக்கள் கேட்கின்றனர். இம்மாதிரி முன்பு கேட்டதில்லை. இனி, மல்லையா, நிரவ் மோடி போன்றவர்களிடம் பணத்தைப் பறித்து, மக்களுக்கு செலவழிப்பதாக உறுதி கூறும் தலைவர்கள், இந்த சமயத்தில், இருப்பது வியப்பு.இன்று, ரிசர்வ் வங்கியிடம் முறையாக சேர்ந்திருக்கும், 9.5 லட்சம் கோடி ரூபாயை, மோடி அரசு கையாளப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டை, கடந்த சில நாட்களாக பார்த்தோம். அதற்குப் பின் அரசுக்கு, 3.5 லட்சம் கோடி ரூபாயை, ரிசர்வ் வங்கி தர நிர்ப்பந்தம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.ஆனால், ரிசர்வ் வங்கி கவர்னர், அவருக்கு கீழ் பணியாற்றும், நான்கு துணைநிலை கவர்னர்கள், அத்துடன் பல்வேறு தொழிலதிபர்கள், துறை நிபுணர்கள் அடங்கிய, 18 பேர் மத்தியக்குழு இருக்கிறது. அவர்கள் முடிவு என்ன என்பதை ஆராயாமல் ஏற்பட்ட விவாதம் அதிகம்.ரிசர்வ் வங்கியுடன், நிதியமைச்சகம் மோதல் போக்கை மேற்கொள்ளவில்லை. ஆனால், வளர்ச்சி திட்டங்கள், பொதுத்துறை வங்கிகளில் பணமில்லாததால் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றை, ரிசர்வ் வங்கி கையாள வேண்டிய நேரம் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், பிரதமர், நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோர் சந்திப்பும் நடந்திருக்கிறது.அதை ஒட்டி, ரிசர்வ் வங்கியின் முக்கியக்குழு கூட்டம், தன் ஒன்பது மணி நேர ஆலோசனையில், சில முடிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மோதல் இல்லை என்பது தெளிவானதுடன், கட்டமைப்பு சிறப்பாக உள்ள சிறு தொழில்களுக்கு, 25 கோடி ரூபாய் தர அனுமதி, அரசு கடன் பத்திரங்கள், 8,000 கோடி ரூபாய் வரை வாங்க முடிவு என்பது, நிதிக் கொள்கைக்கு உரமூட்டும் தகவல்.வளத்திற்கு வழிகாட்டும் விதத்தில் ரிசர்வ் வங்கி, சட்டப் பாதுகாப்புகளுடன் முன்வர ஏற்படுத்திய இந்த விவாதங்கள், ஒரு திருப்பமாகும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.S. ANNAMALAI SWAMI - CHENNAI,இந்தியா
23-நவ-201808:41:39 IST Report Abuse
A.S. ANNAMALAI SWAMI A . S . ANNAMALAI SWAMI , GST CONSULTANT , Chennai -600021 . 23 -11 -2018 நம்முடைய ருபாய் மதிப்பு ஒரே நாளில் 2 .20 அளவில் உயர்ந்திருப்பதை T V செய்தியின் மூலம் நேற்று தெரிந்து கொண்டேன். தினமலரின் தலையங்கத்தின் வாயிலாக இன்று புரிந்து கொண்டேன். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் "மீடியா" க்கும் பொறுப்பு இருப்பதை சந்தோஷப்படுகிறேன். நன்றி தெரிவிப்பதே எனது கடமையாகும். முக்கியமாக, பொருளாதார வளர்ச்சிக்கு வரி, ரொக்கப்பரிவர்தனை அவசியமாகும். அதனை கையாளுவதில் வணிகர்களுக்கும் பங்கு இருக்கிறது. இதனை அரசு எப்படி செயல்படுத்துகிறது என்பதுதான் இன்றைய நிகழ்வு. ஒரே நாளில் ரோம சாம்ராஜ்ஜியம் உருவானதல்ல என்பது சரித்திரம். அதுபோல GST யும், பண நடவடிக்கைகளும் நல்ல திட்டமாகும். அதன் பலன் இரண்டரை மணி காட்சியிலும், 5 ஆண்டு நிர்வாகத்திலும் வரையறுக்க முடியாது. பொறுமை முக்கியமாக ஒவ்வொரு இந்தியனுக்கும் தேவை. கருத்துக்கள் வேறுபடலாம். நீண்டகால நல்லத்திட்டத்திற்கு மக்களின் பங்கும் அவசியமாகிறது. அரசு, ரிசர்வ் வங்கி, மீடியா மற்றும் மக்கள் அனைவருக்கும் கடமை இருக்கிறது. இதனை வெளிப்படுத்திய தினமலருக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X