வேர்களை மறக்கும் விழுதுகள்!

Added : நவ 24, 2018 | கருத்துகள் (1) | |
Advertisement
இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோர், வேர்களை மறந்த விழுதுகளாய், பெற்றோரை தவிக்க விடுகின்றனர்.முதியோரை உதாசினப்படுத்துவதும், அவர்களை புறக்கணிப்பதும், இன்றைய அறிவியல் யுகத்தில் அதிகரித்து வருகிறது. அதனால் தான், 1990ம் ஆண்டு, அக்., 1ம் தேதியை, உலக முதியோர் தினமாக, ஐ.நா., சபை அறிவித்துள்ளது.கடந்த, 2008 நிலவரப்படி, உலக மக்கள் தொகையில், 80 கோடி பேர், 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக
வேர்களை மறக்கும் விழுதுகள்!

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோர், வேர்களை மறந்த விழுதுகளாய், பெற்றோரை தவிக்க விடுகின்றனர்.முதியோரை உதாசினப்படுத்துவதும், அவர்களை புறக்கணிப்பதும், இன்றைய அறிவியல் யுகத்தில் அதிகரித்து வருகிறது. அதனால் தான், 1990ம் ஆண்டு, அக்., 1ம் தேதியை, உலக முதியோர் தினமாக, ஐ.நா., சபை அறிவித்துள்ளது.கடந்த, 2008 நிலவரப்படி, உலக மக்கள் தொகையில், 80 கோடி பேர், 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். 2020ம் ஆண்டில், 100 கோடி பேர் முதியோராக இருப்பர்; இந்தியா போன்ற வளரும் நாடுகளில், எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என, உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.மருத்துவ முன்னேற்றம், மனிதனின் சராசரி ஆயுளை கூட்டியுள்ளது. மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், 2007ல் இயற்றப்பட்டது.இச்சட்டத்தின்படி, மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், உறவுகளால் அபகரிக்கப்பட்ட சொத்துகளை மீட்டுத்

தருதல், பெற்றோரை பாதுகாக்க தவறிய பிள்ளைகளுக்கு சிறைத்தண்டனை கிடைக்கிறது.


குடும்ப கவுரவம், பெருந்தன்மை, பிள்ளைகள் மேலான அன்பு காரணமாக, 90 சதவீத பெற்றோர், இச்சட்டத்தை கையில் எடுப்பதில்லை. பிள்ளைகளை சட்டத்தின் முன் நிறுத்த விரும்பாமல், தாமாகவே, முதியோர் இல்லங்களுக்கு சென்று விடுகின்றனர்.'தாயிற் சிறந்த கோயிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற பொன்மொழிகள், குழந்தைப்பருவத்திலே கற்பிக்கப்படுகின்றன. உலகத்தைப் படைத்தவன், இறைவன் என்றால், நம்மை பெற்றெடுத்த பெற்றோரும் கடவுள் தானே!மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், முதலிரண்டு இடத்தில் இருப்பவர்கள் பெற்றோரே! எந்த எதிர்பார்ப்பும் இன்றி, நம் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்கள், நம்மை பெற்றவர்கள் தான்!தாயின் கருவறையில், 10 மாதம் சுமக்கிறாள். தந்தையோ, வாழ் நாள் முழுவதும், உழைப்பாலும், உன்னதமான முயற்சியாலும், பிள்ளைகளை சுமந்து கொண்டிருப்பார். தாயின் அன்பு கண்ணீராக வெளிப்படும்; தந்தையின் அன்பு, உழைப்பாகவும், வியர்வையாகவும் வெளிப்படும்.ஊரார் துாற்றும், அயோக்கியனான மகனைக் கூட, குற்றவாளி என, தாய் ஒத்துக் கொள்ள மாட்டாள். தாம் பெற்ற பிள்ளைகளை கொஞ்சி மகிழும் இன்றைய இளைஞர்கள், தம்மைப் பெற்றவர்களை, முதுமை பருவத்தில் தவிக்க விடுவது நியாயமா?குழந்தையாக பிறந்த மனிதன், முதுமைப் பருவத்தில், மீண்டும் குழந்தையாகவே மாறி விடுகிறான். 20 வயதில் இருந்தே, மனித மூளையின் செல்கள் குறையத் துவங்குகின்றன. ஆண்டுக்கு, 1 கிராம் அளவிற்கு குறைவதால், செயல்பாடுகளும் குறைகின்றன.முதுமையில், கண் பார்வை, கேட்கும் திறன், ஞாபக சக்தி, நினைவாற்றல் போன்றவற்றில், வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். 70 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் செயல்பாடுகள், குழந்தைத் தனமாகவே இருக்கும்.பேசியதை மறத்தல், திரும்பத்திரும்ப பேசுதல், அசட்டுத்தனமாக சிரித்தல், திடீர் கோபம், அடம் பிடித்தல் போன்ற குழந்தைத் தன செயல்பாடுகள், முதியோரிடம் இருக்கும். தன்னால் முடியவில்லை என்றாலும், நானும் வருவேன் என, அடம் பிடிக்கும் பெரியோர்களும் உண்டு.சாப்பிடும் போது சிந்துதல், காபி, டீ பானங்களை குடிக்கும் போது, சட்டையில் வழிய விடுதல், பொது இடங்களில் ஆடைகளை சரி செய்ய முடியாத நிலையும், அவர்களிடம் காணப்படும்.கட்டுப்பாடில்லாத உணவும், இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்த முடியாத குழந்தைத் தனங்களும், இப்பருவத்தை கஷ்டப்படுத்தும். இவர்களை, 70 - 80 வயது என, எடுத்துக் கொள்ளாமல், 10 வயது குழந்தையாகவே கருத வேண்டும்.உணவு வேளைகளை காலை, மாலை என, பிரிக்கக் கூட தெரியாது. முதுமை உடையோரை, முழு மனிதனாக பார்க்காமல், குழந்தையாக நினைத்துக் கொண்டால், அவர்கள் மேல் கோபம் வராது. இதற்கு, பெருந்தன்மையும், பெற்றோர் மீது அன்பும் வேண்டும்.இன்றைய நவீன உலகில், தெருக்களில், ஆதரவற்று, அனாதைகளாய் திரியும் முதியோரின் எண்ணிக்கை அதிகம். அழுக்கு உடையுடன், அலங்கோலமான உருவத்தில், தள்ளாத வயதில், பசி, மயக்கத்தோடு அலையும்

முதியோரை, நாம் பார்த்தும், சும்மா தான் இருக்கிறோம்.


அவர்கள் யார்... ஏன் இப்படி திரிகின்றனர் என, விசாரித்தால், சொந்த பிள்ளைகளால் துரத்தி அடிக்கப்பட்டவர்கள் என்பதை அறியலாம். இவர்கள் எப்படி எல்லாம், தங்கள் பிள்ளைகளை வளர்த்திருப்பர்... காற்று, மழை, வெயில் என்பதை பாராமல் கஷ்டப்பட்டு, பிள்ளைகளுக்காக உழைத்திருப்பர்!ஆனால், இன்று, தெருவோரங்களில் காற்று, மழை, வெயிலுக்குக் கூட ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.குப்பைத் தொட்டியில் போட்ட எச்சில் இலைகளுக்காக, சண்டை போடும் வயதானவர்களும் உண்டு. அவர்கள், மனநலம் பாதித்தவர்கள் அல்லர். விருந்து முடிந்தவுடன் துாக்கி எறியப்படும் வாழை இலைகளைப் போல, இளமை முடிந்ததும், பிள்ளைகளால் துாக்கி எறியப்பட்டவர்கள்.பெண்களுக்கு சொத்துரிமை இல்லாத காலங்களில், நில, புலன்களை எடுத்துக் கொண்டு, பெற்றோரை காக்க வேண்டும் என்ற நியதி, ஆண் பிள்ளைகளுக்கு இருந்தது.சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு என்ற நிலை வந்த பிறகு, பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பு, இருவருக்கும் உண்டு என்ற நிலை வந்து விட்டது.ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள், எந்த மகனிடம் இருப்பது என்ற சூழலும் உண்டு.மருமகள்களாக வரும் பெண்களில் சிலர், 'உங்கம்மாவை வேண்டுமானால், நாம் வைத்துக் கொள்வோம். அப்பாவை, உங்கள் அண்ணனிடம் அனுப்பி வையுங்கள்' என்போரும் உண்டு.ஆரோக்கியமானவர்களை வைத்துக் கொண்டால், குடும்ப வேலைக்கு உதவுவர் என்ற மனப்பான்மையும், இன்றைய தலைமுறையிடம் உண்டு. வயதான காலத்தில், கணவன் - மனைவி, இரண்டு பேரும் இருந்தால், மனதளவில் நன்றாக இருப்பர். இருவரில் யாராவது ஒருவர் இறந்து விட்டால், மற்றொருவர் உடலாலும், மனதாலும் பாதிக்கப்படுவார்.

குறிப்பாக, மனைவியை இழந்த கணவனின் வாழ்க்கை மிகவும் சவாலாகவே இருக்கும். இளம் வயதில், கணவனை இழக்கும் பெண்கள், பிள்ளைகளுக்காக தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து விடுகின்றனர்.


பென்ஷன் வாங்கும் பெற்றோருக்கு, வாழ்க்கைத் தரம், ஓரளவு சுமாராக அமைந்து விடுகிறது. அவர்களால், பொருளாதார பாதிப்பு இல்லை என்றாலும், அவர்களையும் சுமையாக எண்ணி, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் பிள்ளைகளும் உண்டு.எந்த சொத்தும், வருமானமும் இல்லாத ஆண் முதியோர், சில ஆண்டுகளிலே மரணமடைகின்றனர்.இந்த நவீன காலத்தில், இன்னொரு காட்சியும், சத்தமில்லாமல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 70 வயதைத் தாண்டி, சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், அவர்களை, புண்ணிய தலங்களுக்கு அழைத்து சென்று, விட்டு வரும் கொடுமையாளர்களும் உள்ளனர்.மனித வாழ்வு, நீர்க்குமிழி போன்றது. இளமை, யாக்கை, உறவுகள், உடைமைகள் நிலையில்லாதது என உணர்ந்தவர்கள், முதுமையைக் கைவிட மாட்டார்கள்.தமிழக மக்களின் வாழ்க்கை கட்டமைப்பு, கூட்டுக் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இன்றைய தலைமுறையினர், தனிக்குடித்தனம் போவதையே விரும்புகின்றனர். பெரும்பாலான குடும்பங்கள், கணவன், மனைவி, குழந்தைகள் என்ற அளவிலேயே உள்ளன.இத்தகைய குடும்பங்களில் அறிவுரை, ஆலோசனை சொல்ல, பெரியவர்கள் இருப்பதில்லை. நன்மை, தீமைகள் எடுத்துச் சொல்ல, துன்பங்கள், தோல்விகளில் எதிர் நீச்சல் போடவும், அவர்களை ஆற்றுப்படுத்தவும், பெரியோர் வீட்டில் இல்லை. இதனால், இளைய தலைமுறையினர், விவாகரத்து, தற்கொலை என, விபரீத முடிவுகளை எடுக்கின்றனர்.வீட்டில் வயதானவர்கள் இல்லை எனும் போது, கொள்ளை, கொலை, பாலியல் வக்கிரங்கள் நடைபெற எளிதாகிறது. அக்கால பாட்டி வைத்தியம், இக்கால குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை.பணி நிமித்தம், குழந்தைகளின் படிப்பு என, சாக்குப்போக்கு சொல்லி, பெற்றோரை கிராமத்தில் விட்டு, நகரங்களை நோக்கி படை எடுக்கின்றனர்.கேட்டால், 'பணம் அனுப்புகிறேன்' என, சொல்லும் பிள்ளைகள் அவர்களை நகரங்களுக்கு கூட்டிச் செல்வதில்லை. அண்டை வீட்டில் யார் இருக்கின்றனர் என தெரியாத, நகர வாழ்க்கையில், நான்கு நாட்கள் கதவு பூட்டியிருந்தாலும், தட்டிக் கேட்பதற்கு நாதியில்லை.

சமீபத்தில், நாகர்கோவில் அருகே, வயல் காட்டில், வயதான ஆண், பெண் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர்.


இறந்தது எப்போது என, தெரிய வில்லை. பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் என்பது மட்டும் தெரிகிறது. மனிதம் எங்கே போனது என தெரியவில்லை!கணவன், மனைவி வேலைக்குச் செல்வதால், வேகமாக இந்த இல்லங்கள் வளர்ந்து வருகின்றன. சுதந்திரம், ஆடம்பரம், தனிமையான, கட்டுப்பாடில்லாத குடும்ப வாழ்க்கை என்பதற்காகவே, முதியோர் இல்லங்களில், பெற்றோர் இறக்கி விடப்படுகின்றனர். இயந்திரத்தனமான வாழ்க்கையில், இதயமும் இரும்பாகிறது.கிராமங்களில் வசிக்கும் பெற்றோரிடம், தொலைபேசியில் பேசி வருபவர்கள் பலர். அந்த பெற்றோர் இறந்து விட்டால், இறுதிக்கடன் செலுத்தவரும்பட்டணத்து பிள்ளைகளும் உண்டு.வெளிநாடுகளில் வசிக்கும் மகன்களோ, அஸ்தியை மட்டும் எடுத்துக் கொண்டு, புண்ணிய தலங்களில் கரைப்பதும் உண்டு. இருக்கும் போது ஆதரிக் காமல், இறந்த பிறகு, காகத்திற்கு சோறு வைப்பது, தினசரி பத்திரிகைகளில், அஞ்சலி விளம்பரம் கொடுத்து, தம்மை விளம்பரப்படுத்தும் மகன்களும் உண்டு.தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்களும், சென்னையில் மட்டும், 150க்கும் மேற்பட்ட முதியோர் காப்பகங்களும் இருப்பதாக தெரிகிறது. அனாதையாக உள்ள முதியோர்களுக்கு செய்யும் தொண்டு, கடவுளுக்குச் செய்யும் தொண்டாகும்.வேர்களை மறந்த விழுதுகளாக இல்லாமல், முதுமையைப் போற்றுவோம்; முதியோர் இல்லங்களை தவிர்ப்போம்!மொபைல் எண்:94869 44264இ - மெயில்: mariyappan27041971@gmail.com ச.மாரியப்பன்சமூக ஆர்வலர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (1)

Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
25-நவ-201809:59:00 IST Report Abuse
Chanemougam Ramachandirane உண்மை தகவல்கள் முதியோர்களை தாய் தந்தையரை அரவணைத்து செல்ல வேண்டும் இன்றைய சமுதாயம் அதிக படிப்பு படித்து விட்டால் சம்பாதித்தால் மட்டும் போதாது மனித நேயம் ஒன்று ஒண்டு என்பதினை இனிமேல் கல்வி துறை மூலமாக வரும் சமுதாயத்திற்க்கு கண்டிப்பாக வகுப்பு நடத்தணும் இதற்கு ஒரு மாற்று வழி என்னவென்றால் தாய் தந்தையரி பிரிந்து இருப்பவர்கள் கட்டாயம் அவர்கள் பெரும் ஊதியத்தில் 5 to 10% கட்டாயமாக குறைந்தது 3000 மேல் பிடித்தம் செய்து அவர்களுக்கு வசங்க வேண்டும் இதற்கான சட்டத்தை மத்தியில் மாநிலத்தில் ஏற்ற வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X