துாள் கிளப்பிய நாராயணசாமி!

Updated : நவ 25, 2018 | Added : நவ 24, 2018
Share
Advertisement
டில்லி உஷ், நாராயணசாமி, முதல்வர், பழனிசாமி,புதுச்சேரி, காங்கிரஸ், ராகுல், சந்திரபாபு

சமீபத்தில் டில்லியில் ஒரு தொலைக்காட்சி, சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இதில், தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர்நாராயணசாமி, குஜராத் மற்றும் அசாம் மாநில முதல்வர்கள்பங்கேற்று, விருது பெற்றனர். ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததை அப்படியே படித்தார், பழனிசாமி. 'அமைதியாக முன்னேறி வரும் மாநிலம் மற்றும் அமைதி காக்கும் மாநிலம்' என, தமிழகத்தைப் பற்றி சொன்ன பழனிசாமி, அத்துடன், 'அம்மா அம்மா' என, ஜெயலலிதா புகழ் பாடினார்.இவருக்கு அடுத்தபடியாக பேசிய, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ஹிந்தியிலும்; அசாம் முதல்வர் சர்பானந்த சோனவால் ஆங்கிலத்திலும் எழுதி வைத்து, படித்தனர். இவர்கள் இருவரும், நரேந்திர மோடி புகழை இடையில் பாடினர்.கடைசியாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசினார். 'எங்க மாநிலம் சிறியது; ஆனால், எங்கள் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளில், 40 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தோர் தான்; தமிழகத்தில் பல வசதிகள் இருந்தாலும், புதுச்சேரிக்குத் தான் வருகின்றனர்' என, பேசி, கை தட்டல்களை அள்ளினார்.'என்னவோ, வளர்ச்சி வளர்ச்சி என மார் தட்டுகிறீர்கள்; நீங்கள் முதல்வராவதற்கு முன், காங்கிரஸ் முதல்வர் கோகோய், 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார்; அவர் செய்த வேலைகளைத் தான், இப்போது நீங்கள் வளர்ச்சி என்கிறீர்கள்' என, அசாம் முதல்வரைப் பார்த்து, நாராயணசாமி சொல்ல, கூட்டத்தினர் மறுபடியும் கை தட்டினர்.அதை பார்த்து, அசாம் முதல்வர் தர்மசங்கடத்தில் நெளிந்தார். நீண்ட நேரம், காமெடியாக பேசி கூட்டத்தில் கலகலப்பு ஏற்படுத்திய நாராயணசாமி, தன் முழு பேச்சிலும், சோனியா, ராகுல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.


ஹிந்தி பெயர் வேண்டாம்!

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்பதற்காக, தன்னை எதிர்த்து கண்டபடி பேசியவர்களை ஒன்று சேர்த்து, மாபெரும் கூட்டணியை ஏற்படுத்த முயன்று வருகிறார், காங்கிரஸ் தலைவர், ராகுல்.ராகுலுக்கு அடுத்தபடியாக, இந்த கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக்க பாடுபட்டு, நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வருகிறார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு.இந்த கூட்டணியை, 'மஹா கட்பந்தன்' என, ஹிந்தியில் காங்கிரசார் அழைக்கின்றனர். இதற்கு, மாபெரும் கூட்டணி என பொருள்.ஆனால், இந்த பெயர், சந்திரபாபுவுக்கு பிடிக்கவில்லையாம்.'அதென்ன, மஹா கட்பந்தன்; இந்த பெயர் ஹிந்தியில் உள்ளது; தென் மாநிலங்களில் இதற்கு பிரச்னை ஏற்படும். தமிழகத்தில், தி.மு.க.,வோடு கூட்டணி; ஹிந்தி எதிர்ப்பைவைத்து ஆட்சியைப் பிடித்த கட்சி, தி.மு.க., அதோடு, மற்ற தமிழக கூட்டணி கட்சிகளுக்கும், ஹிந்தி பெயர் ஆகாது. கூட்டணிக்கு வேறு பெயர் வைக்க வேண்டும்' என்கிறாராம்,சந்திரபாபு.'மஹா கட்பந்தன்' என்ற பெயரை ஆங்கிலத்தில், எம்.ஜி.பி., என சுருக்கி அழைத்துக் கொள்ளலாம் என, ராகுல் சொன்னாராம்; ஆனாலும், அதுவும், சந்திரபாபுவுக்கு பிடிக்கவில்லையாம்.இவரோடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா உட்பட வேறு சில தலைவர்களும், 'பெயர் மாற்றம் தேவை' என சொல்ல ஆரம்பித்து விட்டனராம். முந்தைய காங்கிரஸ் கூட்டணிக்கு, ஐக்கிய முன்னணி கூட்டணி எனப்படும், யு.பி.ஏ.,- - 1 மற்றும் யு.ஏ.பி.ஏ., - -2 என அழைக்கப்பட்டது.அதே போல், இம்முறையும் ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும், என்கிறார், சந்திரபாபு.'கூட்டணிக்கு பெயர் வைக்கவே தடுமாறும் இவர்கள், மோடியை தோற்கடித்த மாதிரி தான்' என, பா.ஜ., கிண்டலடிக்கிறது.


தமிழக அதிகாரி மீது புகார்

டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில், தமிழக அதிகாரி ஒருவரைப் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. இவர் ஒரு சீனியர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி; வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அவருடைய அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சருக்கு செயலராக பணியாற்றியவர். இப்போது, தமிழகத்தில் ஒரு முக்கிய பதவியில் உள்ளார்.மிகவும் சீனியரான இவர் பதவி ஓய்வு பெற, இன்னும் சில ஆண்டுகள் உள்ளதாம்; தமிழக அரசின் தலைமைச் செயலராக வரவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.ஆனால், இவருக்கு எதிராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கோஷ்டி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது... இந்த கோஷ்டி, பிரதமர் அலுவலகத்திற்கு புகார் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், 'இந்த சீனியர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பிறந்த தேதியை தவறாகக் கொடுத்துவிட்டார்' என, புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக இப்போது விசாரணை நடந்து வருகிறதாம். இதனால், அந்த அதிகாரி நொந்து போயுள்ளாராம்.எதற்கு இவர் மீது புகார்? 'இந்த அதிகாரியின் நடவடிக்கை சரியில்லை... அமைச்சர்கள் வாங்குவதைப் போல வாங்கி அடுக்கிக் கொண்டிருக்கிறார்' என்கின்றனர், எதிர் கோஷ்டியினர்; 'இவரை இப்படியே விட்டால், அந்த முக்கிய பதவிக்கு வந்துவிடுவார். அதைத் தடுக்கவே இந்த புகார்' என, அவர்கள் சொல்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X