பெங்களூரு: நடிகர் அம்பரீஷ் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 66 .
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் 1952 ல் மைசூர் மாவட்டம் மாண்டியாவில் பிறந்தார். நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான இவர், அவருடன் பிரியா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவரது மனைவி சுமலதாவும் நடிகையாவார்.
எம்.எல்.ஏ.,வாக தேர்வு
நடிகராக புகழ் பெற்ற நேரத்தில் அரசியல் கட்சியிலும் இணைந்தார். முன்னாள் சித்தராமையா தலைமையிலான அரசில் வீட்டு வசதி துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். கருத்து வேறுபாடுகாரணமாக ஜனதாதளத்திற்கு சென்ற அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
மூன்று முறை எம்.பி.,யாக தேர்வு
அம்பரீஷ் கடந்த 1998-99, 99-2004 மற்றும் 2004-2009 ஆண்டுகளில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 2006-2008 ம் காலகட்டத்தில் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். அப்போது எழுப்பப்பட்ட காவிரி நதி பிரச்னைக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
உடல் நல குறைவால் காலமானார்
கடந்த சில ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்து வந்த அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இரவு காலமானார்.
ரஜினி இரங்கல்
மறைந்த நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார். நல்ல மனிதநேயமுள்ளவரும், எனது நெருங்கிய நண்பருமான அம்பரிஷை இன்று இழந்துவிட்டேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் இவ்வாறு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நினைவுமண்டபம் :
மறைந்த அம்பரீஷ்க்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும், அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE