சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

வெற்றிக்கு தேவை - கஷ்டமா? இஷ்டமா?

Added : நவ 26, 2018
Share
Advertisement
வெற்றிக்கு தேவை - கஷ்டமா? இஷ்டமா?

கஷ்டப்படாமல் வெற்றிக்கனியை சுவைக்க முடியாது என்று சிறு வயதிலிருந்தே அட்வைஸ் மழையில் நனைந்திருப்போம். அப்படியே கஷ்டப்பட்டாலும் அனைவருக்கும் வெற்றி கிட்டிவிடுகிறதா? கஷ்டப்படாமல் வெற்றியை எட்டிப் பிடித்தவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்! இங்கே சத்குருவின் சில சிந்தனைகள் உங்களை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சேர்க்கும்...

சத்குரு:
உங்களுடைய ஆசை என்ன? எதைத் தொட்டாலும் வெற்றி கிடைக்க வேண்டும்என்பதுதானே?
மேல்நாட்டு உளவியல் நிபுணர்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள்? 'ஜெயிக்க வேண்டும். ஜெயிக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். வெற்றியைக் குறிவைத்தே உங்களுடைய ஒவ்வொரு செயலும் இருக்கட்டும்' என்கிறார்கள்.
பெரும்பாலும் இந்த முயற்சி உங்கள் ரத்தக் கொதிப்பைத்தான் அதிகரிக்கும். ஏன்?
வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தால் படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராளமான பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும்.

இலக்கின் மீது ஒரு கண்ணைப் பதித்துக் கொண்டால், அவன் பாதிக் குருடனாகி விடுகிறான் என்கிறது, ஜென் தத்துவம். மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும்?

அப்படி அரைகுறை கவனத்துடன் செயலாற்றாதீர்கள். இந்தக் கணம் செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். எட்டிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லாமல், வெற்றி இலக்கை சுலபமாகத் தொட்டுவிட முடியும். புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர, கடுமையாக உழைக்கத் தேவையில்லை. இதை விளக்க ஜென்னில் ஓர் அழகான சம்பவம் உண்டு.

சான்ஸூ என்றொரு ஜென் குரு இருந்தார். மிகச் சிறந்த வாள் வீரர். அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். "இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா?" என்றான்.

"அதற்கென்ன... பத்து வருடங்களில் உன்னை அப்படித் தயார் செய்து விடுகிறேன்" என்றார் குரு. 'என்னது, பத்து வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும் குருவே. மற்றவர்களை விட இரண்டு பங்கு அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்'.

"அப்படியானால் இருபது வருடங்களாகும்" என்றார் சான்ஸூ.

சீடன் திகைத்தான். 'போதாது என்றால், இன்னும் நான்கு பங்கு கடுமையாக உழைக்கிறேன்' என்றான்.

'அப்படிச் செய்தால், நாற்பது வருடங்களாகுமே' என்றார் குரு. ஆம், உங்களை வருத்திக் கொள்ள வருத்திக் கொள்ள - நீங்கள் நினைத்ததை அடைவதற்கு அதிகக் காலமாகும். இதைத்தான் சான்ஸூ அந்தச் சீடனுக்குப் புரியவைத்தார்.

கடுமையாக உழைப்பவர்கள் சில சமயம் வெற்றி பெறலாம். ஆனால், அதன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது.

உலகின் மிக அற்புதமான கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள் ஓய்வாக இருந்தபோதுதான் நிகழ்ந்திருக்கின்றன.

மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருந்தபோதுதான் ஆப்பிள் விழுவதைக் கவனித்தார் நியூட்டன். புவியீர்ப்பு பற்றிய விதியைக் கண்டுபிடித்தார்.

'பாத் டப்'பில் ஓய்வாகக் குளித்துக் கொண்டிருந்தபோதுதான், மிதப்பது பற்றிய விதிகளைக் கண்டுணர்ந்தார் ஆர்க்கிமிடீஸ்.

டென்ஷனில்லாமல், ரசித்து முழு ஈடுபாட்டுடன் பணிகளைச் செய்யும்போதுதான், மூளை அதன் உச்சத் திறனுடன் செயலாற்றும்.

கவனித்துப் பாருங்கள். விளையாட்டில் கூட, வெற்றியை நினைத்து அதிகப் படபடப்புடன் விளையாடும் குழுதான் பெரும்பாலும் தோற்கிறது. விளையாட்டை அனுபவித்து ஆடுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

வெற்றி... வெற்றி.. என்று உங்களை நீங்களே வருத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் பலவீனமாகிப் போவீர்கள்.

வெற்றியைப் பற்றிய அச்சத்தை விட்டுவிட்டு, மனதை அமைதியாக வைத்திருங்கள். உடல் தானாக வேகமாக உழைக்கும்.

ஆனால், உங்களில் பெரும்பாலானவர்கள் நேரெதிராக அல்லவா இருக்கிறீர்கள்? உங்கள் மனம் நிலையில்லாமல் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், உடலில் வேகம் குறைந்துவிடுகிறது.

இப்படித்தான் சங்கரன்பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு வேடிக்கை நடந்தது.
'ஒரு வேலையை, மாலையில் வீட்டுக்குப் போனதும் மறக்காமல் செய்ய வேண்டும்' என்று கைக்குட்டையில் அவர் முடிச்சு போட்டுக் கொண்டார்.

ஆனால், வீட்டுக்குப் போனதும் எதற்காக அந்த முடிச்சைப் போட்டோம் என்பது அவருக்குச் சுத்தமாக மறந்துவிட்டது.

படப்படப்பானார். மூளையைக் கசக்கினார். மொட்டை மாடியில் உலாத்தினார். நெற்றியில் தட்டிக் கொண்டார். நோட்டில் என்னென்னவோ கிறுக்கினார். ஊஹூம்... நினைவுக்கு வரவே இல்லை.

'பேசாமல் படுத்துத் தூங்குங்கள். எதுவாயிருந்தாலும் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்' என்று அவரது மனைவி அறிவுரை சொன்னார்.

'மாட்டேன். ஏதோ முக்கியமான விஷயமாயிருக்கும். அதைக் கண்டுபிடிக்காமல் எப்படித் தூங்குவது?" என்று படுக்கையில் உட்கார்ந்தே இருந்தார்.

இதுவா... அதுவா... என மண்டைக்குள் நூறாயிரம் யோசனைகள் பூச்சிகள் போல் பறந்தன. கடைசியில் இரவு இரண்டு மணிக்கு சலித்துப்போய் கைக்குட்டையைத் தூர எறிந்தார். சடக்கென்று ஞாபகம் வந்தது.

'இன்றைக்கு ஒன்பது மணிக்கே தூங்கப்போக வேண்டும்' என்று நினைவுப்படுத்திக் கொள்ள போடப்பட்ட முடிச்சு அது!

படபடப்பாக மூளையை இயங்கவிட்டால், சங்கரன் பிள்ளைக்கு நேர்த்ததுதான் உங்களுக்கும் நேரும்.

முடிவைப் பற்றிய கவலையை விடுங்கள். ஒவ்வொரு முறையும் முழுமையான ஈடுபாட்டுடன் செயலாற்றுங்கள். வெற்றி தானாக உங்கள் கதவை வந்து தட்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X