மதுரையில் இவர் நடக்காத வீதிகள் இல்லை. பார்க்காத பகுதிகள் இல்லை. மதுரையை சொந்த ஊராக கொண்ட ராசியோ என்னவோ, இன்று இவரும் சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர், அரசியல்வாதி என பன்முகங்களில் நடித்த இவர் இப்போது தந்தை கேரக்டர்களில் ரொம்பவே பிஸி. சினிமா, சின்னத்திரைகளில் நடித்து வரும் வெங்கடேஷ் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்.
''நான் விருதுநகர் மாவட்டம் அழகியநல்லுாரில் பிறந்தவன். எங்கப்பா மதுரையில் பொதுப்பணித்துறை அதிகாரியாக இருந்ததால், இந்த ஊரில் எனது இளமை காலம் கழிந்தது. பார்மஸி படிப்பை முடிச்சேன். ஆனால் நான்கு சுவருக்குள் அடைப்பட்டு கிடக்க என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் வேலை தேடி சென்னை சென்றேன்.
வடபழநியில் ஒரு அறையில் சிலருடன் தங்கி வேலை தேடினேன். அப்போது சத்தியபாமா என்ற பெண்ணை காதலித்தேன். வீட்டில் எதிர்ப்பு. ஒரு வேலையில் சேர்ந்தபிறகுதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவோடு இருந்தேன். நண்பர் மூலம் கூரியர் கம்பெனியில் வேலை கிடைத்தது. மறுநாளே நண்பர்கள் சூழ திருப்பதியில் திருமணம் செய்து கொண்டோம். அன்றிரவே சென்னை திரும்பி ஏற்கனவே நான் வாடகைக்கு பிடித்த வீட்டில் தங்க வைத்தேன்.
பிறகு சில ஆண்டுகள் கூரியர் தொழிலில் இருந்தேன். ஒரு கட்டத்தில் நானே சொந்தமாக கூரியர் தொழில் ஆரம்பித்தேன். சில ஆண்டுகளில் அது கையை 'சுட்டது'. இதனால் இன்னொரு கூரியர் நிறுவனத்தில் மேலாளராக சேர்ந்தபோது, அங்கு நண்பர் ஒருவர் மூலம் அ.தி.மு.க., எம்.பி., ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டது. அவருடன் பயணிக்க ஆரம்பித்தேன். ஆட்சி மாற்றத்திற்கு பின் 'டல்' அடிக்க, எனது ஆரம்பகால அறை நண்பரான ஜீவனை சந்தித்தேன். அப்போது அவர் சினிமாவில் வளர்ந்து வரும் ஒளிப்பதிவாளராக இருந்தார். அவரிடம் நடிக்க சான்ஸ் கேட்டேன்.
அவர் ஒளிப்பதிவாளராக இருந்த துாத்துக்குடி படத்தில் முதன்முதலாக நடித்தேன். முதலில் அந்த படத்தில் வில்லன் கேரக்டருக்கு தேர்வானேன். ஆனால் வயது பிரச்னையால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு பதில் ஹீரோ ஹரிகுமாருடனே பயணிக்கும் கேரக்டர் கிடைத்தது. அது எனக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது. பிறகு ஜீவன் இயக்கிய மயிலு படத்தில் வில்லனாக நடித்தேன். இதைதொடர்ந்து மைனாவில் இன்ஸ்பெக்டர், சாட்டையில் ஹீரோயின் தந்தை, மாயக்கண்ணாடியில் நேர்முக உதவியாளர், குற்றம் 23, நோட்டாவில் அரசியல்வாதி என பல கேரக்டரில் நடித்துவிட்டேன். இதுவரை 60 படங்களில் நடித்துவிட்டேன். இப்போது ரஜினியின் பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். அப்பா கேரக்டரிலும் நடித்து வருகிறேன்.
ஒரு காட்சியில் வந்தாலும் அது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக இருந்தது. இதற்கிடையே சரவணன் மீனாட்சி தொடரில் என்னை நடிக்க அழைத்தார்கள். தயங்கினேன். விடாமல் என்னை 'பாலோ' செய்தார்கள். அந்த தொடரில் நடிக்க என்னை எல்லோருக்கும் தெரிந்தது. இப்போது ஈரமான ரோசாவே என்ற தொடரில் நடித்து வருகிறேன். இன்னும் சினிமாவிலும், சின்னத்திரையிலும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது, என சிரிக்கிறார் வெங்கடேஷ்.இவரை வாழ்த்த: venkatesh.v.waran@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE