டிரைவர்க கிட்ட ஓட்டுறாங்க மீட்டரு...

Added : நவ 27, 2018
Advertisement
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருள் சேகரிப்பு பல இடங்களில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. மித்ரா தன் வீட்டருகே ஒரு முகாமில், மும்முரமாக பட்டியல் எழுதி கொண்டிருந்தாள். வண்டி சத்தம் கேட்கவே நிமிர்ந்து பார்த்து, ''அக்கா... வாங்க! நானே போன் பண்ணலாமுன்னு இருந்தேன்,'' என்றாள்.''பொது சேவையெல்லாம், பலமாக இருக்குதே மித்து.வெரி குட்,''அப்போது, இரண்டு
 டிரைவர்க கிட்ட ஓட்டுறாங்க மீட்டரு...

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருள் சேகரிப்பு பல இடங்களில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. மித்ரா தன் வீட்டருகே ஒரு முகாமில், மும்முரமாக பட்டியல் எழுதி கொண்டிருந்தாள். வண்டி சத்தம் கேட்கவே நிமிர்ந்து பார்த்து, ''அக்கா... வாங்க! நானே போன் பண்ணலாமுன்னு இருந்தேன்,'' என்றாள்.''பொது சேவையெல்லாம், பலமாக இருக்குதே மித்து.வெரி குட்,''அப்போது, இரண்டு பள்ளி மாணவர்கள், பென்சில், நோட்டு அடங்கிய பெட்டியை கொடுத்து, நோட்டில் எழுதி சென்றனர்.இருவரையும் பாராட்டிய மித்ரா, ''தமிழகத்தில் புயல் பாதிப்பு வந்தும், ஆளும்கட்சி நிர்வாகிகள், நிவாரண முகாம் பக்கம், தலைவச்சே படுக்கலையாம்,'' என்றாள்.''யாரை சொல்கிறாய்?''''அக்கா... பேரிடர் மேலாண்மை பிரிவுல இருக்கற கொஞ்சம் பேர்தான், முகாமில், உட்கார்ந்து, ரொம்ப பாடுபட்டிருக்காங்க. மத்த யாருமே தலைகாட்டாம இருந்துட்டாங்களாம். இதே கேரளாவுக்கு புயல் சேதம் ஏற்பட்டப்ப, அமைச்சர், எம்.எல்.ஏ.,னு எல்லா ஆளுங்கட்சிக்காரங்களும், பரபரப்பாக வேலை செஞ்சாங்க. கஜா புயலுக்கு, திருப்பூரில் ஆளுங்கட்சிக்காரங்க, ஒண்ணுமே செய்யலை,''''அவங்களுக்கு எங்கடி நேரம். 'ஏசி' காரில் ஜாலியா சுத்திட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுக்கவுமே நேரம் சரியாயிருக்கு,''''தி.மு.க., கூட்டத்துக்கு, தாசில்தார்கள் போன காமெடி தெரியுமா?''''இல்லையேக்கா''''நான் சொல்றேன் கேளு. ராமசாமி முத்தம்மாள் மண்டபத்துல, மாவட்ட நிர்வாகத்தோட நிவாரண முகாம் நடந்தது. அப்போ, அதே மண்டபத்துல, பக்கத்தில இருக்கிற ஹாலில், தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டமும் நடந்திருக்கு. காலையில, வழக்கம் போல், மண்டபத்துக்கு போயி, வருவாய்த்துறையினர் நிவாரண முகாம் பணிய துவக்கியிருக்காங்க''''அப்புறமாத்தான், தி.மு.க., மீட்டிங்னு தெரிஞ்சிருக்கு. ரெண்டு, உதவியாளர்களை நியமிச்சிட்டு, தாசில்தார்கள் தெறிச்சுட்டாங்களாம். மீட்டிங் முடிஞ்ச கடைசியிலதான், உள்ளே போனாங்களாம்,''''இது, நல்ல.. கூத்தா இருக்குதேக்கா!''அப்போது, முதியவர் ஒருவர், ரவை, மைதா மாவு கொண்டு வந்தார்.அதைப்பார்த்த, சித்ரா, ''கூட்டுறவுத்துறைக்கு யார் 'மணி' கட்டுவாங்கன்னு தெரியலப்பா...''''என்னக்கா சொல்றீங்க... ''''ரேஷன் கடைகளில், மளிகை பொருள் விற்பனை செய்றது, ஊழியருக்கு கட்டாயமாகிடுச்சு. இதுவரைக்கும், அவிநாசிக்கு பக்கத்துல இருக்கிற ஒரு மில்லில் ரவை, மைதா மாவு கொள்முதல் பண்ணி, ரேஷன் கடையில விற்பனை செஞ்சிருக்காங்க. இப்ப, ரொம்ப துாரத்துல இருக்கற மாவட்டத்துல இருந்து கொள்முதல் பண்ண உத்தரவு போட்டு, அதுவும் நடைமுறையில் இருக்காம்,''''துாரமும் அதிகம், விலையும் அதிகமாயிடுச்சாம். முன் இருந்ததை காட்டிலும், அஞ்சு ரூபா வரைக்கும் விலை அதிகமா இருக்குதாம். எந்த எதிர்பார்ப்பில, இவ்வளவு துாரம்போயி ரவை வாங்கறாங்கன்னு தெரியலை,''''அதேமாதிரி, சின்னதா இருக்கற சுக்குகாபி பாக்கெட்ட, எல்லா ரேஷன் கடையிலயும் விற்பனை செய்யோணும்னு, உத்தரவு போட்டிருக்காங்களாம். மக்கள் வாங்கலைனா, நீங்க பணம் கட்ட வேண்டியிருக்கும்னு மிரட்டியிருக்காங்கனா பார்த்துக்கோடி'' என்றாள் சித்ரா.''கெடுபிடி' வேலைன்னு கேள்விப்பட்டிருக்கேன். இது என்னமோ, 'கொடுபிடி'ங்கற மாதிரியில இருக்கு'' என்றாள் மித்ரா.தெருவில், ஆடுகள் சத்தம் கேட்டது,. ஒரு பெண் வெள்ளாடுகளுடன் சென்றாள். ஆடுகளை பார்த்த மித்ரா, ''வெள்ளாடு வாங்க போன பயனாளிகளுக்கு, திடீர்னு, 4 ஆயிரம் செலவு வச்சுட்டாங்களாம்'' என்றாள்.''என்னடி சொல்றே. இலவசமா தானே ஆடு கொடுக்கறாங்க''''இலவசம்தான்... இருந்தாலும் செலவு பண்ணித்தான் ஆகோணுங்கறாங்களாம். பயனாளிகளை, குண்டடம் சந்தைக்கு, ஆடு வாங்கிட்டு வரலாம்னு கூட்டிட்டு போயிருக்காங்க. அங்க போனதும், நாலு வெள்ளாட்டை பிடிச்சு கொடுத்துட்டு, 4 ஆயிரம் கொடுங்கனு கேட்டிருக்காங்க''''கவர்மென்ட் கொடுக்கறது, 10 ஆயிரம் ரூபாய் மட்டும்தான். நாலு ஆடு விலை, 13 ஆயிரம் ஆகுது. அதனால, மீதி காச நீங்கதான் கொடுக்கனும்னு குண்ட துாக்கி போட்டுட்டாங்க. கைச்செலவுக்கு இருக்கட்டும்னு, எடுத்துட்டுப்போன வசதியான பயனாளிங்க கொடுத்துட்டாங்க; மத்தவங்க, என்ன செய்றதுனு தெரியாம, கடன் வாங்கி கொடுத்துட்டு வந்திருக்காங்க...''''அப்புறம், மீதி அந்த ஆயிரம் பாக்கெட்டுக்குள்' தானே போச்சு... இவங்களை எல்லாம் திருத்தவே முடியாது,'' என்று சித்ரா சலித்து கொண்டாள்.மாற்றுத்திறனாளி ஒருவர் கொடுத்த அரிசி சிப்பத்தை, வாங்கி உள்ளே வைத்த சித்ரா, நோட்டில் கையெழுத்து பெற்று அனுப்பினாள்.அதைப்பார்த்த மித்ரா, ''ஊனமுற்றோர் என்ற சொல், அவர்களை புண்படுத்துகிறது என்று, மாற்றுத்திறனாளிகள் என்று அரசே அறிவித்துள்ளது.


ஆனால், அவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில், அதிகாரிகள் அதனை 'பாலோ' செய்யவில்லை,'' என்றாள்.''எப்படி சொல்கிறாய்?''''மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட விளையாட்டு போட்டியில், ஜெயிச்சவங்களோ பேர் அறிவிச்சாங்க. அதில், 'காதுகேளாதோர், குள்ளமானவர்கள், கண்பார்வை குறைந்தவர்கள், மனநலம் குன்றியவர்கள்' என்று சொல்லி பரிசு கொடுத்துள்ளனர்,''''இது சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மன வருத்தத்தை கொடுத்ததோ இல்லையோ, அவர்களது பெற்றோருக்கு ரொம்ப சங்கடமா போச்சுங்க்கா. இனி மேலாவது, அதிகாரிங்க இப்படி நடந்துக்கக்கூடாது,'' என்று மித்ரா வேதனைப்பட்டாள்.''நல்லா இருக்கிறவங்களை விட, மாற்றுத்திறனாளிகளுக்கு திறமை ஜாஸ்தி. அதிலும், இப்போது பலரும், நல்லா முன்னேறி மற்றவங்களுக்கு முன்னுதாரணமாக இருக்காங்க. அதிகாரிகள் திருந்தினா சரிதான்,'' என்றாள் சித்ரா.''ஏக்கா... கார்ப்ரேஷன் டிரைவர்களின் சம்பளத்தில், 'லவட்டறது' தெரியுமா?''''ம்...ஹூம்,''''கார்ப்ரேஷனில், ஒப்பந்த டிரைவராக, 75 பேர் உள்ளனர். இவர்களுக்கு, தினமும் 462 ரூபாய் சம்பளம். ஆனால், கொடுப்பது என்னவோ, 322 ரூபாய் மட்டும்தானாம். டிரைவரிடம் 'சைன்' வாங்கும் தனியார் நிறுவனம், ரிஜிஸ்டரில், சரியாக எழுதிவிட்டு, மாசாமாசம், 3,15,000 ரூபாய் 'ஸ்வாகா' செய்கின்றனராம்,''''அவங்களையும் விட்டு வைக்கலையா?'' என்று சித்ரா ஆதங்கப்பட்டாள்.முகாமுக்குள் வந்த மித்ராவின் அம்மா, ''ரெண்டு பேரும், வீட்டுக்கு போய் டீ குடிச்சிட்டு வாங்க. நான் கொஞ்ச நேரம் பார்த்துக்கறேன்,'' என்றார்.இருவரும் உள்ளே சென்றனர். டேபிளில் தயாராக இருந்த ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, டீ குடிக்க ஆரம்பித்தனர். அருகிலிருந்த, பத்திரப்பதிவு பேப்பரை பார்த்த, சித்ரா, ''திருப்பூர் சப் ரிஜிஸ்டர் ஆபீசில், புது ஆபீசர் வந்ததுக்கு அப்புறம், ஊழியர்கள் 'மேற்படி' வசூலை நிறுத்திட்டாங்க தெரியுமா?'''பரவாயில்லைங்களே. புது ஆபீசர் அவ்வளவு ஸ்டிரிக்ட்டா?'' ஆச்சரியப்பட்டாள் மித்ரா.''அப்படி ஏதாவது நெனைச்சுக்காதேடி. 'எனக்கு வர்றதை நானே வசூல் பண்ணிக்கிறேன். யாரும் வாங்க வேண்டாம்,'னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாராம். இதனால் கடுப்பான ஊழியர்கள், 'சரிங்க ஆபீசர். இனி 'ப' வசூலிப்பதில்லை'ன்னு சொல்லி, பைல்களை மட்டும் அனுப்பி வருகின்றனராம்'''சரிக்கா... ஆபீசர் என்ன செய்கிறார்? பைல்களை உடனுக்குடன் முடிச்சு தர்றாருங்களா?''''அதுக்கப்புறம் நடந்த கூத்தை கேளு. இந்த முடிவுக்கு அப்புறம், ஆபீசர் டேபிளில் பைல் எக்கச்சக்கமா தேங்கிடுச்சாம். ஊழியரிடம், பத்திரம் பதிஞ்சவ கேட்டா,

'இத பாருங்க. எங்க வேலை முடிஞ்சுது. பைல் ஆபீசருக்கிட்ட இருக்குது. அவர்கிட்ட பேசிக்கோங்கோ,' என்று பதில் கூறி அனுப்பி விடுகின்றனராம்,''''இதனால், 'ஆனந்தமான' ஆபீசர் தன்னோட முடிவை மறுபரிசீலனை செய்யலாமுன்னு இருக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.''ஏக்கா... மங்கலத்துக்கு பக்கத்தில், 'சரக்கு' விற்பனை சக்கை போடு போடுதாமா?'' என்று 'டாபிக்' மாற்றினாள் மித்ரா.''ஆமாண்டி... உண்மைதான். திருப்பூர் மாவட்ட எல்லையான செம்மாண்டம்பாளையத்தில் நொய்யல் ஆற்றையொட்டி உள்ள தோட்டத்து சாலைகளில் சில இடங்களில் 'கள்' ஜோராக விற்றனர். கோவை ரூரல் எல்லை என்பதால், 'நமக்கு வராது'ன்னு, மங்கலம் போலீஸ் போறதே இல்லையாம். இதனால, இப்ப, 'கள்'ளுடன், 'சரக்கு'ம் விற்கிறாங்களாம்,''''எல்லை பிரச்னை சரி. ஆனா, அங்க போய், 'வைட்டமின்' 'ப' மட்டுமே வாங்குறாங்களே. அப்ப எல்லை தெரியலீங்களா?''''பணத்துக்கும் உண்டோ எல்லையின் தாழ்'' என்று சித்ரா, ''என்னக்கா... திருக்குறளை 'உல்டா' பண்ணீட்டீங்க,'' சிரித்த மித்ரா, ''ஏக்கா... காங்கயம் ஸ்டேஷனில், 1.23 லட்சம் பணம் திருட்டு போன விவகாரம் என்னாச்சு?''''ஆமாண்டி.. மறந்தே போச்சு. அதைப்பத்தி, விஷயம் 'லீக்' ஆனவுடன், இன்ஸ்பெக்டரை, எஸ்.பி., வெளுத்துட்டாராம்.
இதனால, ஏதாவது பிரச்னை வந்துடுமோ'ன்னு, பயத்தில், மறுநாளே பணத்தை ரெடி செய்து, 'திருட்டு போகல, உள்ளதான் இருந்ததுன்னு, 'மேக்கப்' பண்ணிட்டாங்களாம்,''''ஆனாலும்கூட, இதைப்பத்தி, உளவுப்பிரிவு போலீசார் என்கொயரி பண்ணிட்டு, சென்னைக்கு ரிப்போர்ட் அனுப்பறாங்களாம். இதனால, போலீசார் பீதியில் இருக்காங்களாம்,'' என்று சித்ரா சொல்லி முடித்தவுடன், ''அக்கா... வாங்க முகாமுக்கு போகலாம்,'' என்று மித்ரா எழுந்தாள். இருவரும் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X