வேர்களை மறந்த விழுதுகள்| Dinamalar

வேர்களை மறந்த விழுதுகள்

Added : நவ 29, 2018
Advertisement
 வேர்களை மறந்த விழுதுகள்அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது- அதிலும்கூன்குருடு செவிடு நீக்கிப்பிறத்தல், அதனினும் அரிது - என்ற அவ்வை வரிக்கேற்ப மனிதனாக பிறத்தல் சிறப்பு. மனிதனுடைய வாழ்க்கையை குழந்தை, வளரிளம், இளமை, நடுத்தர, முதுமை பருவமாக பிரிக்கலாம். அரும்பு, மொட்டு, மலர், காய், கனியாகி தானாக உதிர்வதை போல, மனிதனும் முதுமையை அடைந்து மண்ணில் கரைகிறான். குழந்தையாய், இளைஞனாய் வாழ்வை சுவைத்த மனிதன் முதுமையை மட்டும் கசப்போடு கழிக்கிறான். இன்றைய தலைமுறையினர் வேர்களை மறந்த விழுதுகளாய் பெற்றோரை தவிக்க விடுகின்றனர். முதுமையை கண்டு வருந்துவதற்கு இதுவே முக்கிய காரணம். முதுமையை புறம் தள்ளுவதும், அவர்களின் உரிமையை மறுப்பதும், முதியோரை சுமையாக எண்ணி உதாசீனப்படுத்துவதும் இன்றைய அறிவியல் யுகத்தில் கண்கூடாக காண்கிறோம். மனித வாழ்வில் ஏதோ ஒன்றை தேடுவதற்காக ஓடுகின்ற ஓட்டத்தில் பெற்றோர்களை முதுமை பருவத்தில் திரும்பிக்கூட பார்க்க மறுக்கின்றனர். இதனாலேயே 1990 அக்.,1 ஐ முதியோர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

2020ல் முதியோர் 100 கோடி

2008 நிலவரப்படி உலக மக்கள் தொகையில் 60 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். 2020 ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 100 கோடி. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இது போன்ற நிலை அதிகம் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. மருத்துவ முன்னேற்றம் மனிதனின் சராசரி ஆயுளை கூட்டியுள்ளது. மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2007ல் இயற்றப்பட்டது. இதன்படி மூத்தகுடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், உறவுகளால் அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டுத்தருதல், பெற்றோரை பாதுகாக்காத பிள்ளைகளுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. குடும்ப கவுரவம், பெருந்தன்மை, பிள்ளைகள் மேல் பெற்றோர் கொண்டுள்ள அன்பு காரணமாக 90 சதவீத பெற்றோர் இச்சட்டத்தை கையில் எடுக்காமல், தானாகவே முதியோர் இல்லங்களை நாடி செல்கின்றனர்.

பெற்றோர்

தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற பொன்மொழிகளை குழந்தை பருவத்திலேயே கற்பித்தாலும் மனைவி, குழந்தைகளுக்கு அடுத்த நிலையில் தான் பெற்றோர் மதிக்கப்படுகின்றனர். நம் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் அவர்கள் என்பதை மறந்து விடுகிறோம். தாயின் அன்பு கண்ணீராகவும், தந்தையின் அன்பு உழைப்பு, வியர்வையாகவும் வெளிப்படும். அந்தளவிற்கு கண் துஞ்சாது கூலிவேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்த பெற்றோர் ஏராளம். தாம் பெற்ற பிள்ளைகளை அன்பு, ஆசையுடன் வளர்க்கும் பெற்றோரை முதுமை காலத்தில் தவிக்க விடுவது நியாயம் தானா.மனிதன் முதுமையில் ஒரு குழந்தையாகவே மாறிவிடுகிறான். மனித மூளையானது 20 வயதிற்கு மேற்பட்டு அதன் செல்கள் குறைய துவங்குவதால் செயல்பாடு, கண்பார்வை, கேட்கும் திறன், ஞாபக சக்தி, நினைவாற்றலில் வித்தியாசம் தெரிய வரும். 70 வயதிற்கு மேற்பட்டவர்களின் செயல் குழந்தை தனமாகவே இருக்கும். முதுமையில் கட்டுப்பாடில்லாத உணவு, இயற்கை உபாதைகளை அடக்க முடியாத நிலை ஏற்படும். முதுமை பருவத்தை முழு மனிதனாக நினைக்காமல் குழந்தையாகவே அவர்களை நினைத்து பாவிக்க வேண்டும். இதற்கு பெற்றோர் மேல் அன்பும், பெருந்தன்மையும் தேவை.தெருவோர முதியோர்இன்றைய நவீன உலகில் தெருக்களில் ஆதரவற்று திரியும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகம். அழுக்கு உடையுடன், அலங்கோலமான உருவில் தள்ளாத வயதில் பசிமயக்கத்தோடு அலையும் முதியோர்களை அன்றாடம் நாம் பார்க்கிறோம். இவர்கள் பற்றி விசாரித்தால் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருப்பர். காற்று, மழை, வெயில் என பாராமல் பிள்ளைகளுக்காக உழைத்தவர்கள் இன்று தெருவோரம் கிடக்கின்றனர். பெண்களுக்கு சொத்து உரிமை இல்லாத காலங்களில், ஆண் பிள்ளைகள் நிலபுலன்களை எடுத்துக்கொண்டு பெற்றோர்களை காக்க வேண்டும் என்ற நியதி இருந்தது. ஆண்,பெண் இருவருக்கும் சொத்துரிமை வந்த பின் பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு என்ற நிலை வந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை பெற்றவர்கள், யாரிடம் இருப்பது என்ற பிரச்னை வருவது உண்டு. வேலை வாங்கும் நோக்கில் ஆரோக்கியமான பெற்றோரை வீட்டில் வைத்துக்கொள்வது, பென்ஷன் வாங்கும் பெற்றோருக்கு பிள்ளைகளிடம் ஓரளவுக்கு மதிப்பு இருப்பது எல்லாம் சமூகத்தின் அவலம்.எந்த வருவாய், சொத்து இல்லாத பெற்றோர் சில ஆண்டில் மரணத்தை தழுவிவிடுகின்றனர். சிலர் பெற்றோரை புண்ணியஸ்தலங்களில் விட்டுவிட்டு வருவதும் உண்டு. 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்'-என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க, தமக்கும் தன் பிள்ளைகளால் இதே நிலை வரும் என்று அவர்கள் எண்ண வேண்டும்.மனித வாழ்வானது நீர்க்குமிழி போன்றது. இளமை, செல்வம், உறவுகள், உடமைகள் நிலையில்லாதது என்பதை உணர்ந்தோர் முதுமையானவர்களை கைவிட மாட்டார்கள்.கூட்டுக்குடும்பம்தமிழக மக்களின் வாழ்க்கை கட்டமைப்பு கூட்டுகுடும்பத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் இன்றைய தலைமுறையில் தனிக்குடித்தனத்தையே விரும்புகின்றனர். இதுபோன்ற குடும்பங்களில் நல்லது, கெட்டதை எடுத்து சொல்ல முதியோர் இருப்பதில்லை. துன்பம், தோல்வியை எதிர்கொண்டு வாழ்வில் எதிர்நீச்சல் போடவும் ஆற்றுப்படுத்தவும் பெரியோர்கள் வீட்டில் இல்லை. இதனால் இளைய தலைமுறை விவாகரத்து, தற்கொலை முடிவை எடுக்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் இல்லாத சூழலில் தான் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் எளிதாக நடக்கின்றன. அக்கால பாட்டி வைத்தியம் இக்கால குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. முதியோருடன் இருக்கும் குடும்பங்களில் அன்பு, பாசம், ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், வாழ்க்கை அனுபவம் கிடைக்கும். ஆனால் பணி நிமித்தம், குழந்தைகள் கல்வி என்ற போர்வையில் கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கிசெல்கின்றனர். அப்படியே பெற்றோரை கிராமங்களில் விட்டு செல்கின்றனர். நகர வாழ்வில் உதவிக்கு யாரும் வருவதில்லை.
முதியோர் இல்லங்கள்''வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்,'' என்ற வரிகளில் நாகரிக காலத்தில் தோன்றிய அறிவியல் சொல் முதியோர் இல்லம். நகர வாழ்வில் ஏற்படும் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டும், சொகுசான வாழ்வை தேடிக்கொண்டும், பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடுகின்றனர். இயந்திர வாழ்வில் இதயமும் இரும்பாகிறது. தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள், சென்னையில் மட்டுமே 180 இல்லங்கள் இருக்கின்றன. முதியோர் வாழ தகுந்த நாடுகளில் நார்வே முதலிடம், இந்தியா 69 வது இடத்தில் இருக்கிறது.அனாதையாக உள்ள முதியோர்களுக்கு செய்யும் தொண்டு, கடவுளுக்கு செய்யும் தொண்டு என்பதை உணர்வோம்.''கடந்த காலமோ திரும்புவதில்லைநிகழ்காலமோ விரும்புவதில்லைஎதிர்காலமோ அரும்புவதில்லைஇதுவே அறுபதின் நிலை'' - கவிஞர் வாலி.வேர்களை மறந்த விழுதுகள் என்றில்லாமல் முதுமையை போற்றுவோம், முதியோர் இல்லங்களை தவிர்ப்போம்.-எஸ்.மாரியப்பன்முதுகலை ஆசிரியர்அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகம்பம். 94869 44264

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X