பொது செய்தி

தமிழ்நாடு

பக்கிங்ஹாம் கால்வாய் உருவான வரலாறு தெரியுமா?

Added : டிச 01, 2018
Share
Advertisement
சென்னையின் பிரதான நீர்வழித்தடமான, பக்கிங்ஹாம் கால்வாயை வெட்ட, 217 ஆண்டுகளுக்கு முன், 1801ம் ஆண்டு, இதே நாளில் தான், ஆங்கிலேயர்களால் டெண்டர் விடப்பட்டது. இந்த கால்வாயின் வரலாறு குறித்து, தற்போதைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.ஆந்திராவில் காக்கிநாடா துவங்கி, தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வரை, பக்கிங்ஹாம் கால்வாய் பயணிக்கிறது.ஆங்கிலேயர் வார
 பக்கிங்ஹாம் கால்வாய் உருவான வரலாறு தெரியுமா?

சென்னையின் பிரதான நீர்வழித்தடமான, பக்கிங்ஹாம் கால்வாயை வெட்ட, 217 ஆண்டுகளுக்கு முன், 1801ம் ஆண்டு, இதே நாளில் தான், ஆங்கிலேயர்களால் டெண்டர் விடப்பட்டது. இந்த கால்வாயின் வரலாறு குறித்து, தற்போதைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆந்திராவில் காக்கிநாடா துவங்கி, தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வரை, பக்கிங்ஹாம் கால்வாய் பயணிக்கிறது.ஆங்கிலேயர் வார விடுமுறையின் போது, சென்னையில் இருந்து எண்ணுார் செல்வது வழக்கம். அப்போது, வியாசர்பாடியில் இருந்து செல்லும் கூவம் நதியும், திருவொற்றியூரில் இருந்து எண்ணுார் ஏரிக்கு செல்லும் கொசஸ்தலை நதியும் இருந்தன.

இந்த ஆறுகளுக்கு நடுவில் இருந்த சதுப்பு நிலங்கள், உப்பு தயாரிக்கும் இடமாகின. அந்த காலத்தில், சென்னைக்கு வடக்கு பகுதியில் இருந்து தான், எள்ளு, விறகு, வரட்டி, நெல், கருவாடு போன்ற அனைத்து பொருட்களும் வந்தன.காட்டு புலி தீவுபழவேற்காட்டில் உள்ள புலிக்காட்டு ஏரியில் இருந்து, படகு மூலமாக, காட்டுப் புலி தீவிற்கு, பொருட்கள் கொண்டு வரப்படும். பின், அங்கிருந்து மாட்டு வண்டியில் எண்ணுார் வரும்.எண்ணுாரில் இருந்து படகு மூலம், எண்ணுார் தெற்கு ஏரி கரைக்கும், அங்கிருந்து, மாட்டு வண்டியில் சென்னைக்கும் பொருட்கள் வந்தன.

இந்நிலையில், விடுமுறைக்காக, எண்ணுார் சென்ற, ஸ்டீபன் பாப் ஹாம் என்பவர், இரண்டு ஆறுகளையும் இணைத்தால், சென்னையில் இருந்து எண்ணுாருக்கு, படகில் எளிதில் செல்ல முடியும் என, எண்ணினார்.இதன் மூலம் போக்குவரத்து செலவும் குறையும் என, 1782ல் அரசுக்கு தெரிவித்தார். ஆனால், ஆரம்பத்தில் அரசு அதை கண்டு கொள்ளவில்லை.

பின், 1800ம் ஆண்டு, உப்பு வியாபாரம் செய்யும் இரண்டு ஆங்கிலேயர்கள், இந்த கால்வாய் அமைப்பதன் பயன் குறித்து, அப்போதைய கவர்னர், ராபட் கிளைவிடம் தெரிவித்தனர். இதையடுத்து, 1801ம் ஆண்டு, சென்னையில் இருந்து எண்ணுார் வரை, 'சர்வே' செய்யப்பட்டு, கால்வாய் அமைக்க முடிவானது.அதன்படி, 1801ம் ஆண்டு டிசம்பர், 1ம் தேதி, பக்கிங்ஹாம் கால்வாய் வெட்ட டெண்டர் விடப்பட்டது. 1802ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்தம் திறக்கப்பட்டு, ஹெப்க் என்பவரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது.

கால்வாய் வெட்டி, கால்வாயில் வரும் படகுகளிடம், 45 ஆண்டுகளுக்கு சுங்கம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டது.இதையடுத்து, 1802 அக்டோபரில், பேசின் பாலம் முதல் எண்ணுார் வரை, 17.6 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது.காட்டுப்புலி தீவு முதல், புலிக்காடு ஏரி வரை, 22.4 கி.மீ., துாரத்திற்கு, இரண்டாவது கால்வாயை வெட்டும் பணி துவங்கி, 1806ல் முடிக்கப்பட்டது.இந்த கால்வாய்களை, கவர்னர் ராபட் கிளைவ் திறந்து வைத்தார். இதனால் கால்வாய்க்கு, 'கிளைவ் கால்வாய்' என, பெயர் வைக்கப்பட்டது.

இதன், 45 ஆண்டு குத்தகை முடிந்ததும், 1847ம் ஆண்டு, இந்த கால்வாய் ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.அதன் பின், 1855ல், புலிக்காட்டு ஏரி முதல், ஆந்திராவில் உள்ள பெத்தகஞ்சம் வரை, 313.6 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் நீட்டிக்கப்பட்டது.இந்த கால்வாய், கிருஷ்ணா நதி கால்வாயுடன் இணைக்கப்பட்டது. இதனால், காக்கிநாடாவில் இருந்து சென்னைக்கு, எளிதில் படகில் வர முடிந்தது.மேலும், 1855ல், அடையாறு முதல் மரக்காணம் வரை, 105.6 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கி, 1882ல் முடிவடைந்தன.

'பெரிஸ்' சட்டம்பின், 1876ல் சென்னையில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, பக்கிங்ஹாம் என்பவர், கவர்னராக இருந்தார்.அவர், கூவம் முதல் அடையாறு வரை கால்வாய் அமைத்தால், உணவு அளிப்பதாக மக்களிடம் அறிவித்தார். இதையடுத்து, 1877ல் கூவம் முதல், அடையாறு வரை, 8 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கி, 1878ல் முடிவடைந்தன.இந்த இணைப்பு முடிந்த பிறகே, ஒட்டுமொத்த கால்வாயும், பக்கிங்ஹாம் கால்வாய் என, அழைக்கப்பட்டது.

இந்த கால்வாயில், 2,500க்கும் மேற்பட்ட படகுகள் பயணித்ததால், நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து, படகு போக்குவரத்தை சீர் செய்ய, 1870ல், 'பெரிஸ்' சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி, படகின் நடுவில், வெள்ளை நிற விளக்கு வைக்க வேண்டும். படகின், இடது புறம் சிவப்பு நிற விளக்கும், வலது புறம், பச்சை நிற விளக்கும் வைக்க வேண்டும்.

படகு உரிமையாளர்கள், ஆண்டுதோறும் உரிமம் புதுப்பிக்க வரி செலுத்த வேண்டும். இந்த கால்வாயில், 80 அடி நீளம் உள்ள படகுகள் கூட சென்றுள்ளன.ஐந்து மாட்டு வண்டியில் வரும் பொருட்கள், ஒரு படகில் எடுத்து வரப்பட்டன. 1970க்கு பின், இந்த கால்வாய் முழுவதும் பாழடைந்துவிட்டது.கவிஞர் பாரதிதாசன், தன் நண்பர்களுடன், 1934ல், மயிலாப்பூரில் இருந்து மாமல்லபுரத்திற்கு, படகில் பயணம் செய்த அனுபவத்தை, 'ஓடப்பாட்டு' என்ற கவிதையில் குறிப்பிட்டு உள்ளார்.ஒரு காலத்தில் சென்னையின் அடையாளமாக இருந்த இந்த நன்னீர் கால்வாயை, இந்த தலைமுறை கழிவுநீர் கால்வாயாக மாற்றி உள்ளது.

படுமோசம் :
சென்னையில் செல்லும், 30 கி.மீ., கால்வாய் மட்டுமே, உயிரினங்கள் வாழ முடியாத அளவிற்கு, படுமோசமாக சீரழிக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு வெளியே, 80 சதவீதம் கால்வாய் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது.பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைத்து, படகு போக்குவரத்தை மீண்டும் துவங்க இருப்பதாக, முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்தது. ஆனால், இன்றைய நாள் வரை, கால்வாய் சீரமைப்பு பணிகள் எதுவும் துவங்கவில்லை.

நுாற்றாண்டு பெருமை பேசும் பக்கிங்ஹாம் கால்வாய், தற்போதைய சூழலில் போக்குவரத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதை உணர்ந்து, அரசு, கால்வாயை மீட்டெடுக்க வேண்டும். சென்னையில் இருந்து எண்ணுார் வரை, 'சர்வே' செய்யப்பட்டு, கால்வாய் அமைக்க முடிவானது.1801ம் ஆண்டு டிசம்பர், 1ம் தேதி, இதே நாளில் தான் பக்கிங்ஹாம் கால்வாய் வெட்ட டெண்டர் விடப்பட்டது

கால்வாய் குறித்து இலவச கண்காட்சி!
பக்கிங்ஹாம் கால்வாய் குறித்து, ஆராய்ச்சி செய்துள்ள, ஏ.எச்.ராவ் கூறியதாவது:இந்த கால்வாய், மனிதனால் உருவாக்கப்பட்ட, உப்பு கால்வாய். ஆந்திராவில் உப்பு கால்வாய் என்றே இன்றும் கூறுகின்றனர்.புலிக்காடு, ஸ்ரீஹரிகோட்டா காட்டில் இருந்து, சென்னைக்கு விறகு மற்றும் கரி கொண்டு வரப்பட்டன. இந்த விறகில் தான், சென்னைவாசிகள் சமைத்தனர்.

மரக்காணத்தில் இருந்து காய்கறி மற்றும் வைக்கோல் வந்தன. தற்போதுள்ள முண்டகன்னியம்மன் கோவில் அருகே, பக்கிங்ஹாம் கால்வாய் மேல் பாலம் உள்ளது.அங்கு தண்ணீர் துறை தொட்டி என்ற, பெரிய காய்கறி சந்தை இருந்தது. தற்போதைய சிட்டி சென்டர் உள்ள பகுதியில், விறகு தொட்டி இருந்தது.அங்கு தான் விறகுகள் வந்து இறங்கின. எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் இருந்து, புத்தகங்கள் மூலம், 2005ம் ஆண்டு முதல், பக்கிங்ஹாம் கால்வாய் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன்.
பின், 2015 முதல், 2018 வரை பக்கிங்ஹாம் கால்வாய் முழுவதும் கள ஆய்வு செய்து முடித்தேன். சமீபத்திய சென்னை தினத்தை முன்னிட்டு, இந்த கால்வாய் குறித்து, 8, இளங்கோ நகர் இணைப்பு, காளியம்மன் கோவில் தெரு, விருகம்பாக்கம் என்ற முகவரியில் உள்ள என் வீட்டில், பொதுமக்களுக்காக கண்காட்சி அமைத்துள்ளேன்.இந்த கண்காட்சியை, காலை, 10:00 மணிமுதல் மதியம், 1:00 மணி வரையும், மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரையும், பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

-- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X