கடந்த, 2014ம் ஆண்டு நடந்த, லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களே இருந்தன. மோடி அலை, பயங்கரமான, 'சுனாமி' அலை போல, நாடு முழுதும் வீசிக் கொண்டிருந்தது. நாடெங்கும், 'மோடி... மோடி' என்ற குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.பா.ஜ.,வுக்கு, ஓட்டே விழாத, தமிழகத்தில் கூட, யாரைக் கேட்டாலும், 'மோடி தான் சார்...' என்றனர்.
அந்த நேரம் பார்த்து, என் வீட்டில் உள்ளவர்கள், வடமாநில புனித யாத்திரை புறப்பட்டனர். எனக்கும், மோடி அலை அங்கு எப்படி வீசுகிறது என, தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருந்ததால், அவர்களுடன் புறப்பட்டு விட்டேன்.மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, மந்திராலயம், நாசிக், சனிஸ்தான், தேவ்லாலி மற்றும் மும்பை வரை சென்றேன். ஓட்டல்களில், சிறிய, பெரிய கடைகளில், தங்கிய வீடுகளில் இருந்தவர்களிடம், சந்தித்த நபர்களிடம் பேசிய போது, எல்லாம் மோடி மயம்!
சனிஸ்தான் என்ற இடத்தில், பெரியவர் ஒருவரிடம் விசாரித்ததில், என்னை அவர் ஆழம் பார்த்தார். கடைசியில், உரத்த குரலில் அவர், 'மோடி ஜிந்தாபாத்' என, சத்தம் போட்டு, கடைத் தெருவையே கதி கலங்க வைத்து விட்டார்.அந்த அளவிற்கு, அந்த பகுதியில், மோடி வெறி இருந்தது. பிரதமராக மோடி ஆள ஆரம்பித்து, நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த ஆண்டுகளில், மோடி செய்த சாதனைகள் பல!
லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தி வருகிறார்; எந்த அமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கிடையாது; பா.ஜ., ஆட்சி செய்யும் எந்த மாநிலத்திலும், அமைச்சர்கள், முதல்வர்கள் மீது லஞ்சம், ஊழல் புகார்கள் இல்லை. பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளது; பல ஆயிரம், கி.மீ., சாலை, புதிதாக போடப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் பல, ரயிலை பார்த்ததில்லை; அங்கெல்லாம் ரயில் ஓட ஆரம்பித்துள்ளது; விவசாய வளர்ச்சி பெருகிஉள்ளது.
'மேக் இன் இந்தியா' எனப்படும், இந்தியாவிலேயே உற்பத்தி என்ற வகையில், பல சிறிய, பெரிய தொழிற்சாலைகள் தோன்றியுள்ளன; கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சி பெருகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து, இந்தோனேஷியா வரை, நம் அன்னிய உறவு மேம்பட்டிருக்கிறது. வங்கிகள் வளர்ச்சியில், 147வது இடத்திலிருந்து, 77வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம். நகரை சுத்தமாக வைத்துக் கொள்வதில், முனைப்பு காட்டி வருகிறோம்.
வெளியுறவுக் கொள்கை, காங்கிரஸ் ஆட்சியை விட, மக்களால் பாராட்டப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், வாலாட்டும் பாகிஸ்தானையும், 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' எனப்படும், எதிரி நாட்டிற்குள் துணிச்சலாக சென்று, துல்லியமாக தாக்குதல் நடத்தி, மண்ணைக் கவ்வ வைத்துள்ளோம்.இப்படி, எல்லா விதத்திலும் சிறந்து விளங்குகிறது, மோடி ஆட்சி. ஆனால், 2014ல் பெற்ற பலத்த அடியால், காங்கிரஸ் இன்னமும், மோடியையும், அவரின் ஆட்சியையும், குற்றம் கண்டுபிடிக்க முயல்கிறது; முடியவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு, புதிதாக தலைமை ஏற்றுள்ள ராகுல், 'ஊழல்...ஊழல்' என, ஊர் முழுக்க கூட்டம் போட்டு, கரடியாக கத்துகிறார்.அவரின் தொண்டரடிப் பொடியரான, முன்னாள் நிதியமைச்சர், சிதம்பரம், வார்த்தைக்கு வார்த்தை, மோடியை விமர்சிக்கிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், அவருடைய ஆதரவாளர்களும், மோடியை சாடுகின்றனர்.காங்கிரசை சேர்ந்த, திக்விஜய் சிங்கும், மணிசங்கர் அய்யரும், மோடி அரசை துாற்றிக் கொண்டே இருக்கின்றனர்.
2014ல், காங்கிரஸ்காரர்களுக்கு பிடித்த பைத்தியம் இன்னும் தெளியவே இல்லை.ஒவ்வொரு கட்சித் தலைவர்களுக்கும், முதல்வர் பதவி மேல் ஆசையிருந்தால் பரவாயில்லை; அனைவருக்கும் பிரதமர் பதவி மேல், வெறியே வந்து விட்டது!ஆனால், பா.ஜ.,வுக்கு மோடி மட்டும் போதும். அவரை எதிர்க்கும், மாயாவதி, முலாயம், மம்தா, சந்திரபாபு என, எதிர்க்கட்சிகளின் பட்டியல் நீள்கிறது. பாவம், இவர்கள் யாருமே, 'ராகுல் தலைமையை ஏற்போம்' என, சொல்லவில்லை. இப்படிப்பட்ட கூட்டத்திற்குத் தான், ராகுல் தலைமை தாங்குகிறார்.
கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'உலக நாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை கைப்பற்றுவோம்' என, மோடி அறிவித்தார்; பிரதமரானதும், அதற்காக அவர், திடமான பல முடிவுகளை எடுத்தார்.'வெளிநாடுகளில் இந்திய பண முதலைகள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை கைப்பற்றினால், ஒவ்வொரு இந்தியருக்கும், 15 லட்சம் ரூபாய் கொடுக்கலாம்' என, பிரசார கூட்டங்களில், மோடி பேசினார்.உடனே, ராகுல், 'அந்த, 15 லட்சம் இன்னும் எங்கள் வங்கிக் கணக்கில் சேரவே இல்லையே...' என, கூப்பாடு போடுகிறார்.
நம் நாட்டிலிருந்து, அந்நிய நாட்டு வங்கிகளில் பதுக்கி இருக்கின்றனர் என்பதைச் சொல்லவே, அந்தக் கணக்கை மோடி கூறினார்.தவிர, அந்த கறுப்பு பணத்தை எடுத்து, நமக்கு தானம் செய்ய இல்லை என்பதை, ராகுல் இன்னும் உணரவில்லை. அவரின் தாயும், மகன் வழியில் தான் பயணிக்கிறார்.மிகக் குறைந்த செலவில், 'சந்திராயன்' விண்கலத்தை, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், விண்ணில் செலுத்திய போது, 'உலகமே நம்மை பாராட்டுகிறது' என்று சொன்ன மோடி, மீண்டும் ஒரு கணக்கை சொன்னார்.
'சந்திரனுக்கு அனுப்பிய விண்கலத்திற்கு, எரிசக்தி செலவு மிகவும் குறைவு; 1 லிட்டர், எரிபொருளின் விலை, 40 ரூபாய் தான்' என்றார். உடனே, சோனியா, 'அப்படி என்றால், நம் ஊர் பெட்ரோல் பங்குகளில் நாளை முதல், 1 லிட்டர் பெட்ரோல், 40 ரூபாய்க்கு விற்கப்படுமா...' என, கேட்டார்.இப்படிப்பட்ட புத்திசாலிகள் தான், நாட்டை ஆள்வதற்கு ஆசைப்படுகின்றனர். 'போபர்ஸ்' பீரங்கி ஊழலில் சிக்கி, ராகுலின் தந்தையும், சோனியாவின் கணவருமான, ராஜிவின் ஆட்சி கவிழ்ந்தது போல, 'ரபேல்' போர் விமான பேரத்தில், மோடி ஆட்சி கவிழ்ந்து விடாதா என, ஊருக்கு ஊர் கூட்டம் போடுகிறார், ராகுல்.
இப்போது, புதிதாக ஒருவர் கிளம்பி இருக்கிறார். காங்கிரஸ் அராஜகம், அட்டூழியம் பிடிக்காமல், தெலுங்கு தேசம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார், பிரபல நடிகர், என்.டி.ராமராவ். அவர் உயிருடன் இருக்கும் போதே, கட்சியைப் பிடுங்கிக் கொண்ட சந்திரபாபு, மாமனார் தயவில் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்பதை மறந்தே விட்டார்.
கடந்த, 2014 தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து, பல இடங்களில் வெற்றி பெற்று, நான்கு ஆண்டுகளை நயமாக ஓட்டிய பின், தடம் புரள்கிறார், சந்திரபாபு.அவர் ஆளும் ஆந்திராவுக்கு, சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு கொடுக்கவில்லை என்று கூறி, ராகுலுடன் கை கோர்த்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் தலைநகர், ஸ்ரீநகர் போகிறார். பரூக் அப்துல்லாவிற்கு பொன்னாடை போர்த்தி, 'கூட்டு' என்கிறார்.டில்லி வருகிறார், ராகுலுக்கு பொன்னாடை போர்த்தி, 'காங்கிரசுடன் கூட்டு' என்கிறார். பெங்களூர் வருகிறார். தேவ கவுடாவிற்கு ஒரு பொன்னாடை; அவர் மகன் முதல்வர் குமாரசாமிக்கு இன்னொரு பொன்னாடை போர்த்துகிறார். 'மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டு' என்கிறார்.மேற்கு வங்க மாநில தலைநகர், கோல்கட்டா போகிறார். அந்த மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தாவிற்கு ஒரு பொன்னாடை. பின், அவரோடும் கூட்டு!
வரும், 2019 மத்தியில் தான், லோக்சபாவுக்கு தேர்தல். அதற்குள், ஊர் ஊராய் அலைகிறார் சந்திரபாபு. அதற்குள் எத்தனை தலைவர்கள், எத்தனை, 'பல்டி' அடிப்பரோ... அவர்கள் எந்த அணியில் இருப்பரோ... யார் அறிவார்?தமிழகத்தில், தி.மு.க., தலைவராக முடி சூட்டிக் கொண்ட ஸ்டாலின், தினமும், மத்திய அரசையும், மோடியையும் சாடுகிறார்.
2019 தேர்தலில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமர் ஆனார் என்றால், உடன், தி.மு.க.,விலிருந்து யாரையாவது அனுப்புவார்; ஒரு துணையமைச்சர் பதவியாவது பெற்று விடுவார்.'அவர் தான், பா.ஜ., எதிர்ப்பாளர் ஆயிற்றே...' என, நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் இன்னும் ஓர் ஆண்டுக்கு தான். பின் அவர், கருணாநிதி இதற்கு முன் கை காட்டிய, குடும்ப அரசியல் வழியில், தடம் புரளாமல் நடப்பார். காத்திருப்போம் அது வரை... தினமும் இந்த அலப்பறைகளை கண்டு ரசித்தபடி!இ-மெயில்: bsr_43@yahoo.comமொபைல் போன்: 98842 29330
- பா.சி.ராமச்சந்திரன்
பத்திரிகையாளர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE