பா.ஜ.,வில் ஜெய்ராமுக்கு நெருங்கிய அதிகாரி| Dinamalar

பா.ஜ.,வில் ஜெய்ராமுக்கு நெருங்கிய அதிகாரி

Updated : டிச 02, 2018 | Added : டிச 02, 2018 | கருத்துகள் (2)
Share
பா.ஜ.,வில் ஜெய்ராமுக்கு நெருங்கிய அதிகாரி

அபராஜிதா சாரங்கி என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்று, அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் சேர்ந்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அபராஜிதா, 1994ம் பேட்ச், ஐ.ஏ.எஸ்., அதிகாரி.காங்கிரஸ் கூட்டணி, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கிராமப்புற வளர்ச்சி துறையின் அமைச்சராக இருந்தவர் ஜெய்ராம் ரமேஷ். இந்த அமைச்சரவையில் அதிகாரியாக பணியாற்றியவர் அபராஜிதா.வேலைக்கு உணவு என காங்கிரஸ் அமல்படுத்திய அதிரடி திட்டத்தை தயாரித்து செயல்படுத்திய அதிகாரிதான் இந்த அபராஜிதா. ஜெய்ராம் ரமேஷ் இந்த அதிகாரியைத்தான் முழுமையாக நம்பி இருந்தாராம்.

ஏழை மக்களுக்கு உதவும் இந்த திட்டத்தை நாங்கள்தான் அமல்படுத்தினோம் என காங்கிரஸ் மார் தட்டிக் கொண்டாலும், இதற்கான பெருமை அதிகாரி அபராஜிதா சாரங்கிக்குதான் சேர வேண்டும்.அடுத்த ஆண்டு பார்லிமென்ட் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது; அதனால்தான் இந்த அதிகாரியை, கட்சியில் சேர்த்துள்ளது, பா.ஜ., புவனேஸ்வர் நகர் சட்டமன்ற தொகுதியிலில் அபராஜிதா போட்டியிடுவார் என, பா.ஜ., வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

ஒடிசாவில் இப்போது பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியில் உள்ளது. 72 வயதாகும் முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் உள்ளார். காங்கிரஸ் இந்த மாநிலத்தில் பலவீனமான நிலையில் உள்ளதால், எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும், என, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.எனவே, புதிய முகங்களை களத்தில் இறக்கி வருகிறது. ஆனால், ஒடிசா மக்களிடையே, நவீன் பட்நாயக் பிரபலமானவர்; அவரை தோற்கடிக்க முடியுமா எனபது சந்தேகமே.


இரவில் கோர்ட்டை திறந்த பிரதமர்

நாடாளுமன்றத்தால் அரசியல் சாசனம், முதன் முதலாக அங்கீகரிக்கப்பட்ட தினத்தை, ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றம் ஒரு விழாவாகக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சி சமீபத்தில் டில்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.நேபாளம், வங்கதேசம், மியான்மர் உட்பட்ட அண்டை நாடுகளிலிருந்து, தலைமை நீதிபதிகள் இந்த விழாவிற்கு வந்திருந்தனர்.

இதற்கு முந்தைய நாள், வெளிநாட்டு நீதிபதிகளும் நம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் சந்தித்து கருத்துகளை பரிமாறினர். மத்திய அமைச்சர்கள், லோக்சபா சபாநாயகர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். அன்று இரவு விருந்து நடைபெற்றது. தேர்தல் பிரசாரத்தில் பிசியாக இருந்த பிரதமர் நரேந்திர மோடி, இரவு, 9:00 மணிக்கு விருந்திற்கு வந்தார். விருந்தில் பங்கேற்று அனைவரிடமும் பேசினார்.

பின், தலைமை நீதிபதியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தாராம்.'உச்ச நீதிமன்ற கோர்ட் அறைகளை நான் பார்த்தே இல்லை; தலைமை நீதிபதி அமர்ந்து விசாரிக்கும், கோர்ட் அறை எண், 1ஐ பார்க்க வேண்டும்' என கேட்டாராம் மோடி.ஆச்சரியப்பட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அதிகாரிகளிடம் மோடியின் விருப்பத்தைச் சொன்னார். உடனே தலைமை நீதிபதி அமரும், கோர்ட் எண், 1ன் சாவி எடுத்து வரப்பட்டு, அந்த அறை திறக்கப்பட்டது. தலைமை நீதிபதியும், பிரதமர் மோடியும் கோர்ட் அறைக்குள் சென்றனர்.

கோர்ட் சுவரில் மாட்டப்பட்டுள்ள இரண்டு பெரிய புகைப்படங்கள் யாருடையது என்பதை தலைமை நீதிபதியிடம் கேட்டறிந்தார், மோடி. விசாலமான அந்த கோர்ட் அறையில் சிறிது நேரம் செலவிட்ட பிரதமர், பின், தலைமை நீதிபதிக்கு நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினார். இந்த விஷயம் வெளியே அதிகம் பேருக்கு தெரியாது. தெரிந்த ஒரு சிலர் ஆச்சர்யப்பட்டனர்.


நெருக்கமான அதிகாரி விலகினார்!நிதித்துறை செயலராக இருந்த ஹஷ்முக் ஆதியா, நவ., 30ல் பதவி ஓய்வு பெற்றார். இவர், பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். 2014ல் மோடி வெற்றி பெற்று பிரதமர் ஆனபோது குஜராத்திலிருந்து, ஆதியா, டில்லிக்கு வந்தார். பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். பிரதமர் மோடி, 500 - 1,000 ரூபாய் செல்லாது என அறிவித்தபோது இந்த அதிகாரிதான் பிரதமருக்கு ஆலோசனை வழங்கினாராம்.

அத்துடன், அமலாக்கப் பிரிவில் பல முக்கிய வழக்குகளை மேற்பார்வையிட்டு பல அரசியல்வாதிகளின் சொத்துகளை முடக்க வைத்தவர், ஆதியா.இவரை கேபினட் செயலராக நியமிக்க பிரதமர் ஆசைப்பட்டார். ஆனால், ஆதியா மறுத்துவிட்டார். இருந்தாலும் மோடி விடவில்லை; தேர்தல் ஆணையராக பதவி ஏற்கும்படி சொன்னபோதும், மறுப்பு தெரிவித்துவிட்டாராம் ஆதியா.சில ஆண்டுகளுக்கு முன், ஆதியாவின் மனைவி இறந்துவிட்டார். அதுமுதல், ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்,

ஆதியா. ஆன்மீகம் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் ஒரு துறவி போல வாழ்க்கையை நடத்துகிறார் என சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மோடிக்கு நெருக்கமாக இருப்பதால், ஆதியாவிற்கு, சுப்ரமணிய சாமி உட்பட பல எதிரிகள்; எப்போது இவரை மாட்டி விடலாம் என காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் வெறுத்துப் போனவர், 'ஓய்வு பெறுவதுதான், சரி; இனியும் பதவியில் இருக்கக் கூடாது' என முடிவெடுத்து, பிரதமரின் அன்பு வேண்டுகோளையும் புறக்கணித்துவிட்டாராம்.ஆதியா, குஜராத்திற்கு திரும்பி, முழு நேர ஆன்மீகத்தில் ஈடுபடப் போகிறாராம். ஆனால் காங்கிரசோ இதற்கு வேறு ஒரு காரணத்தை சொல்கிறது. 2019 தேர்தலில், மோடி மீண்டும் பிரதமர் ஆகப் போவதில்லை; இதை அறிந்த ஆதியா, தனக்கு பதவி வேண்டாம் என சொல்லிவிட்டதாக, காங்கிரசார் கூறி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X