கடலுாரில் நடந்த திருமணத்தில், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வசூலித்த புதுமணத் தம்பதியை, பலரும் பாராட்டினர்.
உண்டியல்:
கடலுார், திருப்பாதிரிப் புலியூரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். சென்னையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கடலுார் கம்மியம்பேட்டையைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும், திருப்பாதிரிப்புலியூரில், நேற்று காலை திருமணம் நடந்தது.
நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.'கஜா' புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, மணமக்கள், மற்றும் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக, சிறிய அட்டை பெட்டியை உண்டியலாக மாற்றி, திருமணத்திற்கு வாழ்த்த வந்த உறவினர்கள், நண்பர்களிடம் மணமக்கள், 'கஜா' புயல் நிவாரணமாக நிதி வசூலித்தனர்.
திருமணத்திற்கு வந்த பலர், தாங்களாகவே முன்வந்து நிவாரண நிதி வழங்கினர்.'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்த, மணமக்களின் மனிதநேயத்தை, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் பாராட்டினர். நிதி வழங்கியவர்களுக்கு, புதுமணத் தம்பதி நன்றி தெரிவித்தனர்.வசூலிக்கப்பட்ட பணத்தை, தனியார் அமைப்பினர் மூலம், நாகை மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
மொய் நிதி:
சேலம், பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த விஜயன், 29, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரபாவதி, 25. இவர்களுக்கு, கடந்தாண்டு திருமணமான நிலையில், பிரபாவதி கர்ப்பமானதால், வளைகாப்பு நடத்த, விஜயன் முடிவு செய்தார்.
வளைகாப்பு நிகழ்ச்சியில் கிடைக்கும் மொய், அன்பளிப்புகளை, 'கஜா' புயல் நிவாரணமாக வழங்க முடிவு செய்தனர். வளைகாப்பு விழா நேற்று நடந்தது. 'மொய்' போட, பிரத்யேக மேடையில், பெட்டி வைக்கப்பட்டது. 400க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள், பிரபாவதிக்கு ஆசி வழங்கி, அவரிடம், 'மொய்' கவர் கொடுத்ததோடு, தங்கள் பங்களிப்பாக, பெட்டியிலும் பணம் போட்டனர்.மொய், அன்பளிப்புகளை, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ள தம்பதியை, உறவினர்கள், நண்பர்கள் பாராட்டினர்.
- நமது நிருபர் -