ஈரோடு: வயது முதிர்ந்த தாயை, பஸ் ஸ்டாண்டில், மகன் பரிதவிக்க விட்டு சென்றான்.ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டில், இரண்டு நாட்களாக, மூதாட்டி ஒருவர், படுத்து கிடந்தார். போலீசார் விசாரித்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியை சேர்ந்த, குமாரசாமி மனைவி, பழனியம்மாள், 70, என, தெரிந்தது.பழனியம்மாள் அழுதபடி, போலீசாரிடம் கூறியதாவது:கணவர் இறந்த நிலையில், மகன் அர்ஜுனன், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பண்ணாரி அருகேயுள்ள, முதியோர் இல்லத்தில் சேர்த்தான். சில நாட்களாக, உடல்நிலை சரியில்லாமல், சாப்பிட முடியவில்லை. முதியோர் இல்ல நிர்வாகிகள், மகனுக்கு தகவல் தெரிவித்தனர். ஞாயிறு அன்று, மகன், வீட்டுக்கு அழைத்து செல்வதாகக் கூறி, இங்கு விட்டு சென்று விட்டான்.இவ்வாறு மூதாட்டி கூறினார்.'மகன் வீட்டுக்கு செல்கிறீர்களா...' என, கேட்ட போது, மறுத்த மூதாட்டி, மீண்டும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும்படி, கூறினார். பஸ் ஸ்டாண்டில், டீ கடை நடத்தி வரும் கோபால் என்பவர், பழனியம்மாளை, பண்ணாரி அருகேயுள்ள, முதியோர் இல்லத்தில், நேற்று மதியம் சேர்த்தார்.