திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பெண் தாசில்தார் சொர்ணம், 53. இதற்கு முன், அம்பாசமுத்திரம் தாலுகாவில், இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அங்கு புணிபுரிந்தபோது, பொதுமக்கள் மத்தியில் ஏக பிரபலம்.
காரணம், கல்விச்சான்று, ஜாதிச் சான்று, வருமான சான்று கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம், 'எதையும்' எதிர்பாராமல், வேகமாக வேலையை முடித்து கொடுத்து, பலரிடமும் நற்பெயர் பெற்றுள்ளார். அதேபோல, வருவாய் துறைக்கு சொந்தமான, நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்றி, பொதுமக்களிடம், 'சபாஷ்' பெற்றார்.
அதே நேரம், இதர விஷயங்களான பட்டா பெயர் மாற்றம், கூட்டு பட்டா, தனி பட்டா, வாரிசு சான்றிதழ் வழங்கும் விஷயங்களில், மிகவும், 'கறாராக'வே இருப்பார். இதனால், 'பெண் அதிகாரிக்கு இரண்டு முகங்கள் உண்டு' என, தாலுகா அலுவலக ஊழியர்களே தங்களுக்குள் கிசுகிசுத்து கொள்வர். இதற்கு முன், ஆர்.ஐ.,யாக பணியாற்றிய போதும், 'கணக்கு, வழக்கில்' எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், 'கருமமே' கண்ணாகவே, 'பணியாற்றி' உள்ளார்.
திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலையை அகலப்படுத்தும் பணிக்கு, நிலம் கையகப்படுத்தும் பணியில், 'ஜரூராக' செயல்படாமல் போனதாலேயே, பக்கத்து தாலுகாவான சேரன்மகாதேவிக்கு மாற்றப்பட்டதாக, வருவாய் துறை வட்டாரங்களில் கூறுகின்றனர். சேரன்மகாதேவி தாலுகாவில், போலி பட்டா விவகாரத்தில், வி.ஏ.ஓ., சிக்கி, சிறைக்கு சென்றதை அடுத்து, பெண் அதிகாரியின், 'நேர்மை' தாலுகா முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.