வைகையின் பிறப்பிடத்தில் யானைகள் படுகொலை! தீர்வு காணாமல் 'ஷாக்' கொடுக்கும் மின்வாரியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைகையின் பிறப்பிடத்தில் யானைகள் படுகொலை! தீர்வு காணாமல் 'ஷாக்' கொடுக்கும் மின்வாரியம்

Added : டிச 06, 2018 | கருத்துகள் (5)
Advertisement
வைகையின் பிறப்பிடத்தில் யானைகள் படுகொலை! தீர்வு காணாமல் 'ஷாக்' கொடுக்கும் மின்வாரியம்

மதுரை : ''அய்யோ பாவம்... ஆறு மாதத்தில் ஒரே இடத்தில் ஐந்து யானைகளை பலிகொடுத்தது போதாதா... '' என்ற அலறல் மேகமலை வன உயிரினங்களின் உள்ளத்தில் எதிரொலித்து கொண்டிருக்கிறது. எங்கள் மண்ணை, வயலை, வாழ்வை வாழவைத்துக் கொண்டிருக்கும் வைகையின் தாய்மடியில் நடந்துள்ள இந்த அநீதியால் ஒரு வனமே ரத்தம் சிந்திக் கிடக்கிறது.


ஜீரணிக்காத மரணங்கள் :

தேனி மாவட்டத்தில் வைகை நதியின் பின்புலத்தில் இருக்கும் வெண்ணியாறு வனப்பகுதியில் நடந்துள்ள இந்த கொடூரத்தை வைகை நதியின் தண்ணீரை பருகும் எந்த ஒரு ஜீவராசியாலும் ஜீரணிக்க முடியவில்லை. 'எங்கள் வனம், எங்கள் சுதத்திரம். அதில் உங்களுக்கு என்ன வேலை' என அந்த வாயில்லாத ஜீவன்களால் கேள்வி எழுப்ப இயலாததால் இன்று அவைகளை பல விதங்களில், வழிகளில் அதன் வாழ்விடத்திற்கு மனித இனம் உலை வைத்துக் கொண்டிருக்கிறது என்பதின் வெளிப்பாடு தான் இந்த ஐந்து உயிர்களின் இழப்பு.

சமூகத்தில் படுகொலைகள் எப்படி தற்கொலைகளாகவும், விபத்துக்களாகவும் சித்தரிக்கப்படுகிறதோ, அது போலவே இந்த வன உயிரினங்களின் பலிகளும் அரசு துறைகளால் விபத்து கணக்காய் கச்சிதமாக முடிக்கப்பட்டு விடுகிறது.


யானை வளம் :

மேற்கு தொடர்ச்சி மலையின் செழிப்பும், வனப்பும் தான் உலக நாடுகளால் சிறந்த பூமி என்ற பெருமையை நமக்கு யுனெஸ்கோ பெற்றுத் தந்திருக்கிறது. தமிழ் நாட்டில் குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 135 கிராமங்கள் இந்த மலைத் தொடர் பகுதி உள்ளது. கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரா என நீண்டு செல்லும் இந்த மலைத் தொடரில் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபணி ஆறுகள் கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கி சிட்லாறு, பீமா, கபினி, கல்லாவி, பெண்ணாறு, மணிமுத்தாறு, பெரியாறு பாய்கின்றன.

இந்த ஆறுகள் பயணிக்கும் பகுதிகள் முழுவதும் யானைகளின் வாழ்விடம் தான். அடர் வனக்காடுகளில் மற்ற உயிரினங்கள் பயணிப்பதற்கான வழித்தடத்தை உருவாக்குவதோடு, உயிர்சங்கிலி பிணைப்பின் மூலஆதாரம் இந்த யானைகளும், புலிகளும் தான். வளமான காடுகள் தான் யானைகளின் தாய்வீடு.


மேகமலை 'ஷாக்' :

தேனி மாவட்டத்தில் 795 சதுர கி.மீ., பரப்பில் 255 சதுர கி.மீ., பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. மேகமலை வனஉயிரின சரணாலயத்தின் கீழ் சின்னமனுார், மேகமலை, வருஷநாடு, கண்டமனுார், கம்பம் கிழக்கு, கூடலுார் வனப்பகுதிகளால் 64 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பு பாதுகாக்கப்படுகிறது. வைகை நதியின் வறட்சிக்கு காரணமான மேகமலையின் வனப்பரப்பு அழிப்பு பல விதங்களில் தொடர்கிறது.

இதனோடு இப்போது யானைகளும் அழிகின்றன. இந்த வனப்பகுதியில் ஜூன் 18 ல் ஒரு தாய் மற்றும் குட்டி யானை அழுகிய நிலையில் கிடந்தன. அதே பகுதியில் தொடர்ந்து செப்., 4 ல் ஒரு பெண் யானை, நவ., 26 ல் இரண்டு பெண் யானைகள் பலியாகி கிடந்தன. இவை அனைத்தும் மின்சாரம் தாக்கி பலியானதாக பிரேத பரிசோதனை பதிலளிக்கிறது.


பலிபீடமாகும் மின்கம்பி :

பெரியாறு, சுருளி மின்நிலையத்தில் இருந்து கயத்தாறு வரையிலான 108 கி.மீ.,க்கு 110 கிலோ வாட் உயர்மின் அழுத்த கம்பிகள் 50 -- 70 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரியாறு வனப்பகுதி முதல் அம்மாகஜம் வரை 32 கி.மீ., வனப்பகுதி. இந்த மின் வழித்தடத்தில் 1958 ம் ஆண்டு முதல் தென் மாவட்டங்களுக்கு மின் வினியோகம் நடந்து வருகிறது.

கம்பம் கிழக்கு வனப்பகுதிக்கு உட்பட்ட வெண்ணியாறு வனப்பகுதியில் ஒரு பாறை முகட்டில் இருந்து 50 மீ.,தொலைவில் உள்ள அடுத்த மின்கோபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் தாழ்வாக மின்கம்பி அமைக்கப் பட்டுள்ளது. யானை தொடும், உரசும் உயரத்தில் உள்ள இந்த பகுதியில் தான் 5 யானைகள் உயிரை இழந்துள்ளன.


கட்டப்பஞ்சாயத்து :

ஆறு மாதத்தில் 5 யானைகள் பலியான பின்னரும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதில் வனத்துறையும், மின்வாரியத்தின் மின் தொடரமைப்பு கழக நிறுவனம் கட்டப்பஞ்சாயத்து நடத்துகின்றன. மின்கம்பி 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளது. கம்பிகளில் தொய்வும் தாழ்வும் இல்லை. அக்காலத்தில் எப்படி அமைக்கப்பட்டதோ அப்படியே உள்ளது. இந்த பகுதியில் யானைகள் வருவதில்லை. தற்போது அதன் வழித்தடம் எங்கோ மாறியுள்ளது. அல்லது மாற்றப்பட்டுள்ளது.

வழித்தடம் மாறியதற்கான காரணத்தை வனத்துறை தான் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறது மின்வாரியம். யானைகள் எங்கு வேண்டுமானாலும் செல்லும். மின்வாரியம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. கைக்கு எட்டும் உயரத்தில் மின்கம்பிகளை வனப்பகுதியில் தொங்கவிடுவது எந்த வகையில் நியாயம்? மின்வாரியம் தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறது வனத்துறை. முதல் சம்பவத்தில் யானை உயிரிழந்த போது துவங்கிய பஞ்சாயத்து இன்னமும் நீடிக்கிறது.


அழிக்கப்படும் உயிர்வளம் :

மேகமலையை சுற்றுலாத்தலமாக்க வனத்துறை பல கோடி ரூபாயை செலவு செய்து பாறைகளை வெடி வைத்து தகர்த்து, மரங்களை அழித்து வனப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. பொம்மராஜபுரத்தில் இருந்து கீழ்பொம்மராஜபுரம் வரை 1.5 கி.மீ., ரோடு அமைத்து தன் தேவைகளையும், தனியார் எஸ்டேட் உரிமையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தது இத்துறை. இது போல் வனப்பகுதிகளில் பல மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால் யானைகளில் வாழ்விடங்கள், வழித்தடங்கள் பல இடங்களில் மறிக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் சிதறடிக்கப்படுகின்றன. இதனால் அவை புதிய இடங்களை தேடுகின்றன. கிராமங்களுக்கும் வருகின்றன.

சமீப காலமாக தேவாரம் பகுதியில் ஒரு ஒற்றை யானை அலைந்து கொண்டிருக்கிறது. யானைகளின் மதிப்பை வரையறுக்க இயலாது. அது வனத்தின் மதிப்பிற்கு நிகரானது. மேகமலை வனப்பகுதியில் எப்போதும் யானை இருப்பதில்லை. குறிப்பிட்ட காலங்களில் தான் வந்து செல்கின்றன. வந்து போகும் இந்த யானைகள் கொத்துக் கொத்தாக சாகடிப்படுவதை பார்த்து கலங்கி நிற்கிறார்கள் வனஆர்வலர்கள்.


ஆபத்தான இடங்கள் அதிகம் :

கலாநிதி, மேகமலை வனஉயிரின சரணாலய காப்பாளர்
மேகமலை வனப்பகுதியில் தற்போது யானைகள் உயிரிழந்த இடங்களை போல் பல இடங்கள் உள்ளன. இதில் ஆறு இடங்கள் மிகவும் ஆபத்தானவை. இவை மின்வாரியத்தின் கவனத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து நடந்த இந்த பகுதியின் நான்கு பக்கமும் திறந்த வெளியாக உள்ளது. சரிவான பகுதியில் இருந்து யானை மேலே ஏறும் போது மின்சார தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இறந்த யானைகளில் துதிக்கை மற்றும் உடல்கள் கருகி இருந்தன. இதனால் இது 100 சதவீதம் மின் விபத்து என உறுதி செய்யப்பட்டது. மின்வாரியம் தற்போது பாறையை உடைத்து அதில் மின்கம்பம் அமைக்க அனுமதி கேட்டுள்ளது. வனப்பகுதியில் பாறையை தகர்ப்பதற்கு அனுமதி இல்லை. தற்காலிக நடவடிக்கையாக பாறையின் உயரத்தை குறைப்பதற்கு வனத்துறை சில முயற்சிகளை எடுக்க உள்ளது.


அனுமதி மறுப்பு :

உமா தேவி, தேனி மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர்
இந்த மின்பாதையை மதுரை பசுமலையை தலைமையிடமாக கொண்ட மேற்பார்வை பொறியாளர் இயக்க அதிகாரிகள் பராமரிப்பில் உள்ளது. சம்பவத்துக்குரிய பகுதி இந்த மாவட்டத்திற்கு உட்பட்டது. விபத்து நடக்கும் மேட்டுப்பகுதியை கரைத்து டவர் அமைப்பதற்கு 7 லட்சம் ரூபாய் டெண்டர் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வனத்துறை இதற்கு அனுமதி அளிக்கவில்லை. புதிய வழித்தடம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள அதிக காலஅவகாசம் தேவைப்படும். உயர்மின்அழுத்த பாதையாக உள்ளதால் கம்பிகளில் பிளாஸ்டரிங் செய்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் பலன் தராது. தற்போது பிரச்னைக்குரிய பகுதியில் மின்கோபுரத்தை சில அடி துாரத்தில் மாற்றி அமைப்பது தான் நிரந்தர தீர்வாக இருக்கும். இது தொடர்பாக மீண்டும் வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.


தீர்வு தான் என்ன:

யானை துதிக்கையை உயர்த்தினாலும் எட்டாமல் இருக்க குறைந்த பட்சம் 23 அடி உயரத்தில் மின்கம்பி செல்ல வேண்டும். தற்போது இது 8 - 12 அடி அளவில் உள்ளது. பிரச்னைக்குரிய பகுதியில் முதல் சம்பவம் நடந்த போது புதர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஆனால் பள்ளம் தோண்டப்பட்டதாக அரசுக்கு அறிக்கை சமப்பிக்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து சம்பவம் நடந்த போது தான் பாறை காரணம் காட்டப்பட்டது. தற்போது பாறையை உளியால் செதுக்கி உயரத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 110 கிலோ வாட் உயர் மின் அழுத்த கம்பி செல்லும் போது 3 அடி துாரம் வரை அதன் ஈர்ப்பு இருக்கும். இதனை கணக்கிட்டால் பாறையை உளியால் செதுக்க எத்தனை நாட்கள் என்பது எல்லாம் கேள்விக்குறியாகவே உள்ளது. தவிர உளியின் ஒலி, வேலை ஆட்கள் நடமாட்டம் போன்ற பல காரணங்களோடு, பாறைகள் சார்ந்த உயிரினங்களின் அழிவையும் சமூக பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நடவடிக்கையையும் தற்காலிகமானது என சொல்லி தப்பித்துக் கொள்ள நினைக்கிறது வனத்துறை. நிரந்தர தீர்வுக்கு மாற்று மின்கோபுரம் அமைப்பதே ஒரே வழி என வழிகாட்டும் வனத்துறை இதற்கும் அனுமதி அளிக்க தயங்குகிறது. இது என்னவோ யானைகளுக்கு வந்த சோதனை காலம் தான்.

யானைகளே இனியும் இவர்களை நம்ப வேண்டாம். ப்ளீஸ்... மாற்று வழியில் செல்லுங்கள்..!

- டபிள்யு.எட்வின்


எண்ணிக்கையில் குறையும் யானைகள் :

தமிழகத்தில் 2012ம் ஆண்டு நடந்த யானைகள் கணக்கெடுப்பில் 4015 யானைகள் இருந்தன. 2017ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் இது 2,761 ஆக குறைந்துள்ளது. இது 30 சதவீதம் குறைவு. பசுமையான இடங்களுக்கு இடம் பெயர்வு முக்கிய காரணமாக இருந்தாலும் தமிழக பகுதிகளில் ரயிலில் அடிபட்டும், வனங்களில் மர்மமான முறையிலும் மரணிக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகம். யானை வேட்டை இல்லை என வனத்துறை வெள்ளை அறிக்கை அளிக்கிறது. மேகமலையில் சமீபத்தில் இறந்த 5 யானைகளும் பெண் யானைகள். ஆண் யானைகளின் கணக்குகள் வெளியுலகிற்கு வருவதில்லை. இந்திய வனங்களில் 2017ம் ஆண்டு கணக்கெடுப்பில் 27,312 யானைகள் மட்டுமே உள்ளன.


யானை ஒரு ஆச்சரியம்...

* 70 ஆண்டுகள் உயிருடன் வாழும்
* நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் குட்டிகள் போடும்
* துதிக்கை 1,50,000 தசைகளால் ஆனது.
* ஒரு நாள் 350 லிட்டர் தண்ணீர் குடிக்கும்
* ஒரு நாளைக்கு தேவையான இலை தழைகள் 250 - 300 கிலோ
* துதிக்கையில் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும்.
* தண்ணீர் இருக்கும் இடத்தை 5 கி.மீ., முன்னரே வாசனை மூலம் அறியும்.
* பொதுவாக ஒரே பாதையில் தான் பயணிக்கும். அந்த வழித்தடத்தில் வேலி, கட்டடம் போன்ற இடையூறுகள் வரும் போது தான் அது கோபம் கொண்டு மனிதர்களை தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil - Bangalore,இந்தியா
06-டிச-201818:15:14 IST Report Abuse
Senthil யானைகளை காப்பாற்ற உடனே வனங்களில் உள்ள எல்லா மின் கம்பிகளையும் உயரமாக அமைத்து, யானைகளின் இனப்பெருக்கையையும், எண்ணிக்கையும் அதிகரிக்க, உடனே அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை உடனே செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
06-டிச-201809:48:03 IST Report Abuse
rajan.  சமூக ஆரவாளர்கள் ஓன்று சேர்ந்து சம்பந்த பட்ட துறைகளை பிருத்தியேகமாய் கவனித்தால் யானைகளை காப்பாற்றலாம்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
06-டிச-201808:06:12 IST Report Abuse
 nicolethomson இன்னமும் முட்டாள்களை பல்வேறு கோட்டாக்களில் நிறைத்து கொள்ளுங்கள் , முக்கியமாக அரசியல் கோட்டாவில் இணைத்து கொள்ளுங்க, அப்புறம் இந்த கேள்வியான "கைக்கு எட்டும் உயரத்தில் மின்கம்பிகளை வனப்பகுதியில் தொங்கவிடுவது எந்த வகையில் நியாயம்?" பதில் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X