அணை கட்டுவதில் குமாரசாமி பிடிவாதம்| Dinamalar

அணை கட்டுவதில் குமாரசாமி பிடிவாதம்

Added : டிச 06, 2018 | கருத்துகள் (1)
அணை கட்டுவதில் குமாரசாமி பிடிவாதம்

பெங்களூரு : தமிழகத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையிலும், 'மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்' என, கர்நாடகா முன்னாள் முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது.

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையில், மத சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக அரசின் கோரிக்கைக்கு, மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்து, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும்படி உத்தரவிட்டது.

இந்த ஒப்புதலை ரத்து செய்ய கோரியும், அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் உட்பட, கர்நாடக நீர் வள திட்டங்கள் பற்றி முடிவு செய்வதற்காக, பெங்களூருவில், கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில், முன்னாள் முதல்வர்கள், முன்னாள் நீர்ப்பாசன துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.

காங்கிரசை சேர்ந்த, சித்தராமையா, பா.ஜ.,வைச் சேர்ந்த, ஜெகதீஷ் ஷெட்டார் உள்ளிட்டோர், இதில் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின், நீர்ப்பாசன துறை அமைச்சர், டி.கே.சிவகுமார் அளித்த பேட்டி: மேகதாது அணைக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடகாவுக்கு பின்னடைவு ஏற்படாதபடி, உச்ச நீதிமன்றத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவோம். மேகதாது அணையை, கர்நாடகாவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவோம். அணை கட்டுவது, கர்நாடகாவின் உரிமை. எங்களுக்கு யாருடனும் விரோதமில்லை.

நீதிமன்ற உத்தரவுப்படி, 177.25 டி.எம்.சி., நீர், தமிழகத்துக்கு விட வேண்டும்; இது, காவிரி நீர் ஆணையம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். தமிழகமும் - கர்நாடகாவும் சகோதர மாநிலங்கள். நமக்குள் சண்டை வேண்டாம்; சமாதானத்துடன் செல்வோம், என்றார். இவ்வாறு கூறினார்.

மத்திய நீர்வள ஆணையம் கோரிக்கைப்படி, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்காக, அமைச்சர் சிவகுமார் தலைமையிலான நிபுணர் குழுவினர், மேகதாதுவில், இன்று ஆய்வு செய்கின்றனர்.


பேசி தீர்க்கலாம்: மந்திரி 'தாஜா'


மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவக்குமார் நேற்று தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மேகதாது தடுப்பணை விவகாரத்தில் சுமுக தீர்வு காண வேண்டுமென கர்நாடகா அரசு விரும்புகிறது. இத்திட்டத்தின்வாயிலாக, தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவை மிகச் சரியாக முறைப்படுத்த முடியும்.

மேலும் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது. குறிப்பாக மேட்டூர் அணை கொள்ளளவையும் தாண்டி வந்து சேரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வெளியேற்ற வேண்டி உள்ளது. இந்த கூடுதல் நீர் அனைத்துமே கடலில் வீணாக கலக்கும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு காவிரி நீர் வீணாவதை தவிர்த்து நியாயமான முறையில் நீர் பங்கீடு செய்ய மேகதாது அணை நிச்சயம் உதவும்.

எனவே இந்த விவகாரம் குறித்து விரிவாக விளக்கவும் மேகதாது திட்டம் குறித்த உண்மை விபரங்களை தெரிவிக்கவும் விரும்புகிறேன். அதற்காக தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி வேண்டுகிறேன். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X