சண்டிகர்:தொடர் சர்ச்சைகளில் சிக்கிய, பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, நவ்ஜோத் சிங் சித்துவின் குரல்வளை நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வும், அதற்காக அவர் சிகிச்சை பெறுவதாகவும், மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பஞ்சாபில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, 55, சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சராக உள்ளார்.தெலுங்கானா மாநில தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான, நேற்று முன் தினம், காங்., கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த சித்து, பிரதமர், நரேந்திர மோடி மற்றும் உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து, உ.பி.,யைச் சேர்ந்த, ஹிந்து யுவ வாஹனி அமைப்பு, சித்துவின் தலைக்கு, 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது.இந்நிலையில், நேற்று, பஞ்சாப் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கு, 17 நாட்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டதாலும், விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் அடிக்கடி பயணித்ததாலும், சித்துவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சித்துவின் குரல்வளை நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பேச முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஐந்து நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தி உள்ளனர். ரகசிய இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சமீபத்தில், அண்டை நாடான, பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சியில் சித்து பங்கேற்றதும், அது தொடர்பான அவரது பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE