முதல்வரை திட்டிய தி.மு.க., - எம்.எல்.ஏ.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரை திட்டிய தி.மு.க., - எம்.எல்.ஏ.,

Added : டிச 07, 2018 | கருத்துகள் (5)

சென்னை:முதல்வர் பழனிசாமியை ஒருமையில் திட்டிய, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வால், சட்டசபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

சட்டசபையில், நேற்று மேகதாது அணை விவகாரம் பற்றிய தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அப்போது, தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்கள் பேசி முடித்த பின், இறுதியாக பதிலுரை வழங்கினார்.அப்போது, காவிரி பிரச்னையில், அ.தி.மு.க., ஆட்சியில், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா எடுத்த சிறந்த நடவடிக்கைகளை பட்டியலிட்டார். முதல்வர் பேசி முடித்ததும்,

தி.மு.க., வைச் சேர்ந்த, எதிர்க்கட்சி துணை தலைவர், துரைமுருகன் எழுந்து, ''காவிரி நடுவர் மன்றம் அமைத்ததற்கும், இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டதற்கும், காவிரியில், எவ்வளவு நீரோட்டம் உள்ளது என்பதை கண்டுபிடிப்பதற்கும், கருணாநிதி தான் முயற்சி எடுத்தார்,'' என்றார்.உடனே குறுக்கிட்ட முதல்வர், ''காவிரி பிரச்னையில், அரசு என்ன செய்தது என்று, ஸ்டாலினும், ராமசாமியும் பேசும்போது கேட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் தான், எடுத்த நடவடிக்கைகளை, கோடிட்டு காட்டினேன். ''உங்கள் தலைவரை பற்றி, நான் தவறாக எதுவும் பேசவில்லை. ஒரு விவசாயியான எனக்கு தான், அவர்கள் படும் கஷ்டம் தெரியும். அது, மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை,'' என்றார்.இதையடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், ரங்கநாதன் ஆகியோர், இருக்கையில் இருந்து எழுந்து நின்று, முதல்வருக்கு எதிராக கோஷம் போட்டனர்.

முதல்வரை, அன்பழகன் ஒருமையில் திட்டினார். அதற்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், சட்டசபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு கூறியதாவது:அன்பழகன், என்ன வார்த்தையை பயன்படுத்தினார் என்பது, எல்லாருக்கும் தெரியும். எதிர்க்கட்சி தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தான், முதல்வர் விளக்கம் சொன்னார். தவறாக எதுவும் சொல்லவில்லை.எனவே, முதல்வரை பார்த்து, அப்படி பேசுவது சரியல்ல. மரியாதை குறைவாக பேசுவது, தவறு. இன்று, சிறப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதனால், இந்த பிரச்னையை, இத்துடன் விட்டு விடுகிறேன். அன்பழகன் கூறிய வார்த்தை, சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X