கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பல்கலை உத்தரவை எதிர்த்து வழக்கு

Added : டிச 07, 2018
Advertisement

சென்னை:சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரிக்கு முதல்வரை நியமிக்க, தேர்வு குழுவை அமைக்கும்படி, சென்னை பல்கலை உத்தரவிட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்க, சென்னை பல்கலைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரின் செயலர், தாக்கல் செய்த மனு:எங்கள் கல்லுாரியில், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., மற்றும் சென்னை பல்கலை நிர்ணயித்துள்ள வழிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. கல்லுாரி முதல்வராக இருந்த, டாக்டர் ஜெசிந்தா என்பவரை, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள கல்லுாரிக்கு மாற்றினோம்.இதனால், ஏற்பட்ட காலியிடத்தில், மூத்த இணை பேராசிரியை, ரோசி ஜோசப் என்பவருக்கு, பதவி உயர்வு அளித்து, கல்லுாரி முதல்வராக நியமிக்க, ஆட்சிமன்றக் குழு முடிவு செய்தது.

அதன்படி, டாக்டர் ரோசியை, கல்லுாரி முதல்வராக நியமித்தோம்.இதையடுத்து, தகுதி ஒப்புதலுக்காக, சென்னை பல்கலைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. முதல்வர் தேர்வுக்கு, யு.ஜி.சி., விதிமுறைபடி தேர்வுக்குழு அமைக்குமாறு, பல்கலையில் இருந்து கடிதம் வந்தது.சிறுபான்மை கல்லுாரி என்பதால், யு.ஜி.சி., விதிமுறைகள், எங்களுக்கு பொருந்தாது. எனவே, யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என, வலியுறுத்துவது செல்லாது. சென்னை பல்கலையின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி, எஸ்.விமலா முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஐசக் மோகன்லால், வழக்கறிஞர், காட்சன் சுவாமிநாத் ஆஜராகினர். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சென்னை பல்கலைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளிவைத்தார். 'கல்லுாரி முதல்வர் பணியில் தொந்தரவு செய்யக் கூடாது' எனவும், நீதிபதி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X