வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவோம்:சீனா | Dinamalar

வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவோம்:சீனா

Added : டிச 07, 2018

பீஜிங்:அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவோம் என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தக போர் இருந்து வந்தது.அமெரிக்க அரசு சீன இறக்குமதிகள் மீது தொடர்ந்து கூடுதல் வரி விதிப்பை அறிவித்தது. சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை உயர்த்தியது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா ஜூலை மாதம் முதல் 250 பில்லியன் டாலர் அளவுக்கு கூடுதல் வரியை விதித்தது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் அளவுக்கு அதிக வரியை விதித்தது.

இரு நாடுகள் இடையேயான இந்த வர்த்தகப்போர் உலகமெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த 'ஜி-20' உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர்.இதில் , ஜனவரி 1 முதல் இரு நாடுகளும் கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்து கொண்டனர். இது 90 நாட்களுக்கு நீடிக்கும்.இரு நாடுகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், சீனாவின் வர்த்தக துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி காவ் பெங் கூறுகையில், வேளாண் பொருட்கள், ஆற்றல், தானியங்கி மற்றும் பிற முக்கிய பொருட்களுக்காக இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட ஒருமித்த ஒப்புதலை உடனடியாக நாங்கள் அமல்படுத்துவோம். இரு தரப்பினரும் அறிவுசார் சொத்து பாதுகாப்பு, தொழில் நுட்ப ஒத்துழைப்பு, சந்தை மற்றும் வர்த்தகம் ஆகியவை பற்றியும் ஆலோசனை நடத்த இருக்கிறோம், என்றார்.ஆனால், சீனா என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X