புதுடில்லி : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று (டிச.,07) டில்லி செல்ல உள்ளார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (டிச.,06) சட்டசபையை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ள நிலையில் கவர்னர் இன்று டில்லி செல்ல உள்ளார். அதனால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி புயல் சேதத்தை நேரில் பார்வையிட வரவில்லை என்று தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் கவர்னர் பன்வாரிலால் டில்லி செல்கிறார். மாலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது விவகாரம் மற்றும் கஜா புயல் பாதிப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து நேரில் விளக்கம் அளித்து ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.