கொள்கையாவது, வெங்காயமாவது!| Dinamalar

கொள்கையாவது, வெங்காயமாவது!

Added : டிச 09, 2018 | கருத்துகள் (6)
Share
 கொள்கையாவது, வெங்காயமாவது!


பால்ய பருவத்தில், நம் தாத்தா, பாட்டியர், கால் திருடன், அரை திருடன், முக்கால் திருடன் மற்றும் முழு திருடன் பற்றி, கதை கதையாய் சொல்லக் கேட்டிருப்போம். அவற்றில், ஒவ்வொரு திருடனும், தனித் தனியாகத் தான், திருடுவரே தவிர, நான்கு திருடர்களும், கூட்டணி அமைத்து திருடியதாக இல்லை.அது போல, நம் நாட்டின் வளத்தைக் கொள்ளையடிக்க, போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர் மற்றும் ஆங்கிலேயர் ஆகிய, ஐரோப்பிய நாட்டினர், வியாபாரம் என்ற போர்வையில், கடல் மார்க்கமாக இங்கு வந்து இறங்கினர்.அவர்களில், போர்ச்சுகீசியரை, கால் திருடன் என்றும், டச்சுக்காரர்களை அரைத் திருடன் என்றும், பிரெஞ்சுக்காரரை, முக்கால் திருடன் என்றும் வைத்துக் கொள்ளலாம். மிச்சம் உள்ள, முழு திருடன் பட்டத்தை, ஆங்கிலேயர்களுக்கு கொடுக்கலாம்.
இந்திய வளங்களைச் சுரண்டி, அவரவர் நாடுகளுக்கு, இவர்கள் மூட்டை கட்டிச் சென்றனர். எனினும், இந்த நாட்டில், அவர்கள் இருந்த போது, கட்டிய கட்டடங்கள், சாலை வசதிகள், மருத்துவமனைகள் இன்றளவும் அவர்களை நினைவு கூருகின்றன.ஆனால், தற்போதைய நிலைமை என்ன... 'உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு உத்தரவிடுங்கள்' என, வாய்ஜாலம் காட்டி, ஓட்டு வாங்கி, பதவிக்கு வந்தவர்கள், முடிந்த அளவுக்கு சுருட்டுகின்றனர்.அந்த, நான்கு அயல் நாட்டினர் கூட, நம் நாட்டை சுரண்ட, தனித் தனியாகத் தான் இயங்கினர். ஆனால், இந்த சுய நல அரசியல்வாதிகள், கூட்டணி வைத்து சுரண்டுகின்றனர்.தேர்தலுக்கு முந்தைய கூட்டணி, தேர்தலின் போது தொகுதி உடன்பாடு, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என, இவர்களின் கூட்டணியில் தான், எத்தனை வகைகள்?'கூட்டணியில், ம.தி.மு.க., இல்லை' என, தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறிய பிறகும், 'நான் ஜெயிலுக்கு போறேன்...' என, சினிமா படம் ஒன்றில், நடிகர் வடிவேலு கூறுவது போல, 'கூட்டணியில் தான் இருக்கிறோம்; ஸ்டாலினை, முதல்வராக்காமல் விட மாட்டேன்' என, வைகோ, 'வான்டட்' ஆக, கூறி வருகிறார்.லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் பல மாதங்கள் உள்ளன. சட்டசபை தேர்தல், இப்போதைக்கு இல்லை; உள்ளாட்சி தேர்தல் பற்றி யோசிக்கவே வேண்டாம் என்ற நிலையில், கூட்டணிக்கு இப்போதே, துண்டு போட்டு வைக்கிறார், வைகோ.அந்த துண்டை, பக்குவமாக நகர்த்தி வைக்கும், தி.மு.க., தலைவர், ஸ்டாலின், கூட்டணியில் வைகோ இருக்கிறாரா, இல்லையா என்பதை இன்னமும் பூடகமாக வைத்து, வைகோவை தவிப்பில் வைத்துள்ளார்.வைகோ போலவே, தமிழகத்தில், கடந்த லோக்சபா தேர்தலில், மாற்று அணியில் இருந்த பல கட்சிகளும், தங்களின் அடுத்த கூட்டணி குறித்து, தெளிவாக கூறாமல், பூடகமாகவே வைத்து இருந்தன. தேர்தல் நேரத்தில், தாவ தயாராக இருக்கும் தங்கள் எண்ணத்தை, ரகசியம் காத்தன.
ஆங்கிலேயர் உட்பட, ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களை, நம்மால் விரட்ட முடிந்ததே தவிர, அவர்களுக்கு பின் நம்மை ஆள்வதற்கென, நம்மால் தேர்தெடுக்கப்பட்ட, சுயநல அரசியல்வாதிகளிடமிருந்து, நம்மையும், நாட்டையும் காப்பாற்ற முடியவில்லை.இந்த நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளால், இக்கட்டான சூழ்நிலைக்கு, நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த நிலையிலாவது, நாம் சற்று சிந்தித்து, புத்திசாலித் தனமாக செயல்படா விட்டால், நம்மையும், நாட்டையும், யாராலும் இனி, காப்பாற்ற முடியாது.தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றும், அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் புறக்கணிப்போம். அதே நேரத்தில், நியாயமான கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம்.உதாரணமாக, நான்கரை ஆண்டுகளாக, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருந்த, ஆந்திர முதல்வர், சந்திரபாபு, இப்போது, பா.ஜ., வேண்டாம் என்று கூறி, காங்கிரசுடன் கைகோர்த்துள்ளார்; அதன் தலைவர், ராகுலுடன் மேடையில் ஒன்றாக தோன்றுகிறார்.அது போல, மேலும் சில கட்சிகளின் தலைவர்கள், மதில் மேல் பூனையாக, உஷாராக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு மாநில நலன், வளர்ச்சி பற்றி பெரிதாக அக்கறை கிடையாது. அவர்கள் எதிர்பார்த்த, சுயநல நோக்கங்கள் நிறைவேறாத நிலையில், தாவ தயாராக உள்ளனர்.இது தான், இந்திய அரசியலின் மிக மோசமான செயல்பாடு!இந்த குழப்பத்தை, வாக்காளர்கள் தங்களிடம் உள்ள, ஓட்டு என்ற அதிகாரம் மூலம் சீர் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்து விட்டால், இந்திய அரசியல் அநாகரிகங்களை, பாதியளவு சரி செய்து விடலாம். இது, கடினம் தான். எனினும், ஓட்டளிக்கும் மக்கள் தானே, மாற்றங்களை கொண்டு வர வேண்டும்!ஆட்சி, அதிகாரம், பதவிக்காக, ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவது... வென்றவுடன், மற்றொரு அணியுடன் சேர்ந்து விடுவது போன்றவை, வாக்காளர்களை நேரடியாகவே ஏமாற்றும் செயல்.அது போல, கூட்டணியில் இருக்கும் வரை, அந்த கூட்டணியின் தலைமை கட்சி அல்லது அதன் உறுப்பு கட்சி செய்யும் தவறுகளை, கூட்டணி கட்சிகள், கண்டும் காணாமல் இருக்கின்றன. வெளியேறியதும், அம்பலப்படுத்துவதும், அநாகரிகமான செயலே!அரசியலில், தனி மனித ஒழுக்கம் அவசியம் என்பது போல, கட்சிகளுக்கும் வேண்டும். கட்சித் தலைவர்கள், நேர்மையான அரசியல் காரணங்களுக்காக, பிற கட்சிகளுடன் கூட்டு சேர வேண்டும். அதை, சட்டம் போட்டு சரி செய்ய முடியாது; நாம் தான் சரி செய்ய வேண்டும்.முறைகேடான கூட்டணிக்கு, வாக்காளர்கள் ஆதரவு அளிக்காமல் இருப்பதன் மூலம், ஒன்றிரண்டு தேர்தல்களில் கூட சரி செய்து விடலாம். இந்த நாட்டை, அரசியல்வாதிகள் தான் ஆட்சி செய்கின்றனர்; அதிகாரிகள் அவர்களுக்கு உறு துணையாக இருக்கின்றனர்.எனவே, அரசியல்வாதிகள் நேர்மையானவர்களாகவும், உண்மையான எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பது அவசியம். அதற்காக, சட்ட கமிஷன், தேர்தல் கமிஷன், சட்டங்கள் என, பல இருந்தாலும், சரி செய்வது, மக்கள் கையில் தான் உள்ளது.முறைகேடான, சந்தர்ப்பவாத கூட்டணிக்கு, ஓட்டால் வேட்டு வைப்பதன் மூலம், எதிர்கால அரசியலை நேர்மையாக்கலாம். அதனால், எதிர்கால ஆட்சி, அதிகாரம், நிர்வாகத்தை துாய்மைப்படுத்தலாம்.நாடக கூடங்களுக்கு, பார்வையாளர்கள் வருவதற்கு முன், ஒப்பனை செய்து, நாடக நடிகர்கள் தயாராகி விடுவதைப் போல, அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், அணி திரண்டு நின்று கொண்டிருக்கின்றன.கொள்கையாவது, வெங்காயமாவது... நாட்டைச் சுரண்டுவது ஒன்றே குறிக்கோள் என்ற, 'உயர்ந்த' லட்சியத்தோடு, அரசியல் கட்சிகள் தயாராக, களத்தில் நின்று கொண்டு இருக்கின்றன.
பஞ்ச தந்திரக் கதைகளுள் ஒன்றான, 'சிங்கமும் நான்கு மாடுகளும்' கதையில், மாடுகள் நான்கும், தனித் தனியாக பிரிந்து நின்றால், சிங்கத்தோடு சண்டையிட்டு வெல்ல முடியாது என கருதி, கூட்டணி அமைத்து, இணைந்து நின்று, சிங்கத்தை விரட்டியடித்தன.இங்கே, சிங்கமாகிய, நாட்டு மக்களை ஏமாற்றி, ஆட்சியில் அமர்ந்து, நாட்டைச் சூறையாட, அரசியல் கட்சிகள், தனித் தனியாக தேர்தலில் நின்றால், அது வேலைக்காகாது; வெற்றி பெற முடியாது என்று தெளிவாக உணர்ந்துள்ளன. கூட்டணி அமைத்து, நம் தலையை மொட்டை அடித்து, நாட்டைச் சுரண்ட, தயாராகிக் கொண்டிருக்கின்றன.மக்களாகிய நாம் மனது வைத்தால், இந்த கூட்டணிக் கொள்ளையை தகர்த்து, அடியோடு முறியடித்து, ஜனநாயகத்தை நிலை நாட்ட முடியும்.நம்மை அடிமைப்படுத்தி, ஆட்சி புரிந்த ஆங்கிலேயனை விரட்ட, வரி கொடா இயக்கம், அன்னியத் துணி பகிஷ்கரிப்பு போன்ற பல போராட்டங்களை, மஹாத்மா காந்தி முன்னெடுக்க வேண்டியிருந்தது. காந்தியைப் போல போராட, நமக்கு இப்போது தலைவரும் கிடையாது; நம்மிடம் பொறுமையும் கிடையாது; நேரமும் கிடையாது.ஆனால், நாம் மனது வைத்தால், கூட்டணி என்ற போர்வையைப் போர்த்தி, சில அரசியல் கட்சிகள் நடத்தி வரும் அராஜகத்தையும், அநியாயத்தையும் தட்டி கேட்க, தடுத்து நிறுத்த முடியும்.நம்மையும், நம் நாட்டையும், கூட்டணி அமைத்துச் சுரண்டிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளிடமிருந்து காக்க, நாம், நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து, இந்த ஒரே காரியத்தை, உருப்படியாகச் செய்தால் போதும்.'கட்சிகளுக்கு ஓட்டளிப்போம்; அவற்றின் புது கூட்டணி கட்சிக்கு ஓட்டளிக்க மாட்டோம்' என்பதில் உறுதியாக இருப்போம்.தங்கள் சுய லாபத்திற்காக, சில கட்சிகள், தேர்தல் நேரத்தில் வைத்துக் கொள்ளும், புது கூட்டணிக்கு, ஆதரவை தெரிவிக்காமல் இருந்தாலே, அரசியல், 50 சதவீதம் நேர்மையாக மாறி விடும்.
தேர்தலுக்கு முன், எதிரும், புதிருமாக இருக்கும் கட்சிகள்; நல்ல திட்டமாக இருந்தாலும், அதை வர விடாமல் தடுக்கும் கட்சித் தலைவர்கள், தேர்தல் நேரத்தில், சில ரகசிய உடன்பாடுகளை, தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.உடன்பாட்டிற்கான காரணங்களை, வெளிப்படையாக தெரிவிக்காமல், உப்பு சப்பு அரசியல் காரணங்களை தெரிவித்து, ஒன்றிணைந்து, கூட்டணி சேர்ந்து, தேர்தல்களில் போட்டியிடுகின்றனர்.
அது போல, சில கட்சிகள், ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு, நான்கு முதல், நாலரை ஆண்டுகள் வரை ஆதரவு அளித்து, அந்த அரசின் தில்லுமுல்லுகளுக்கு துணை நின்று, தேர்தல் நேரத்தில், கூட்டணிக்கு, 'டாட்டா' காண்பித்து, வெளியேறுகின்றன.அத்தகைய கட்சிகளையும், அவர்களின் கூட்டணியையும், வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது.உதாரணமாக, இப்போதைய, பா.ஜ., கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும், பா.ஜ., வின் வேட்பாளர்களையும் ஆதரிப்போம். தேர்தல் நேரத்தில், தி.மு.க., வந்து ஒட்டிக் கொண்டால், பா.ஜ., கூட்டணியில் இடம்பெறும், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்கக் கூடாது.அது போல, இப்போது வரை, பா.ஜ.,வுடன் நெருக்கம் காண்பிக்கும், அ.தி.மு.க., லோக்சபா தேர்தலின் போது, திடீரென அணி மாறி, காங்கிரஸ் பக்கம் சாய்ந்தால், காங்கிரசுக்கு ஓட்டளிக்கலாம்; அந்த அணியில் சேர்ந்த, அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டளிக்க கூடாது.முறையற்ற கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு, இப்படி நெத்தியடி கொடுப்பதன் மூலம், கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில், நேர்மை, நியாயம் இருக்குமாறு, வாக்காளர்களான நாம் பார்த்துக் கொள்ள முடியும்.அரசியலில் நேற்று வரை எதிரிகளாக இருந்தவர்கள், தங்கள் சுய நலத்திற்காக, குவித்த சொத்துகளுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காக, அரசியல் எதிர்காலத்திற்காக, கூட்டணி மாறினால், அவர்களுக்கு வாக்காளர்கள், 'ஓட்டடி' கொடுக்க வேண்டும்.இவ்வாறு, வரவிருக்கும், லோக்சபா துவங்கி, ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர்கள் கெடுபிடியாக இருந்து விட்டால், கூட்டணி தர்மம், தர்மமாக மாறும்; அரசியல் நேர்மையானவர்களின் கூடாரமாகும்!இ - மெயில்: essorres@gmail.comமொபைல் போன்: 98407 19043

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X