பணம் கைமாறிய விவகாரத்தால் உறவில் விரிசல் வைகோ - திருமாவளவன் திடீர் மோதல் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பணம் கைமாறிய விவகாரத்தால் உறவில் விரிசல் வைகோ - திருமாவளவன் திடீர் மோதல்

Added : டிச 09, 2018 | கருத்துகள் (3)


ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் இடை யே, திடீர் மோதல் உருவாகியுள்ளது. இதனால், தி.மு.க., கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா... என்ற, கேள்வி எழுந்துள்ளது.சமீபத்தில் தனியார், 'டிவி'க்கு, வைகோ பேட்டி அளித்தார். அப்போது, 'திராவிட கட்சிகள், தலித் சமுதாய அதிகார பகிர்வை சரியாக தந்துள்ளனவா?' என்ற கேள்விக்கு, வைகோ பதில் அளித்திருந்தார். பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறிய கருத்து குறித்து, வைகோவிடம் கேட்கப்பட்டதும், அவர், 'ராஜா, கூஜாவுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை' என, கூறிவிட்டு, பேட்டியை பாதியில் முடித்து வெளியேறினார்.வைகோவின் செயல்பாடு குறித்து, விடுதலை சிறுத்தைகளின் துணைப் பொதுச்செயலர் வன்னியரசு, அவரது முகநுால் பக்கத்தில் விமர்சித்து, ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:வைகோ, இப்படி பேசியிருக்கக் கூடாது. அவர், மிக சிறப்பாக, பொறுப்பாக, நிறைய பதில் அளித்திருக்கலாம். 'தலித்துகளுக்கு எதிராக, என்னை காட்ட முயற்சி செய்கிறீர்களா; எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள், தலித்துகள் தான்' என்ற, அவரது பதிலை, ஆதிக்க, பண்ணை அடிமை உளவியலாக, நிலப் பிரபுத்துவ உளவியலாக தான் பார்க்கிறோம்.'எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கின்றனர்' என, சொல்லுவதற்கும், அதிகார பகிர்வுக்கும், ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?இவ்வாறு, வன்னியரசு கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த பதிவு பற்றிய தகவல், வைகோவிற்கு தெரிய வந்ததும், அவர், உடனே, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் ரவிக்குமாரை தொடர்பு கொண்டு, தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். அவர், உடனே திருமாவளவனிடம், வைகோவின் அதிருப்தியை தெரிவித்தார். திருமாவளவன், உடனே வன்னியரசை அழைத்து கண்டித்ததும், முகநுால் பதிவு நீக்கப்பட்டது.இந்நிலையில், விருதுநகரில் நடந்த, ம.தி.மு.க., கூட்டம் ஒன்றில், வைகோ பேசுகையில், '2006ல் நடந்த சட்டசபை தேர்தலில், திருமாவளவனை, என் வீட்டுக்கு அழைத்து, 30 லட்சம் ரூபாய் கொடுத்தேன், பின், 20 லட்சம் கொடுத்தேன்' என்றார்.அதைத்தொடர்ந்து, சாத்துாரில் நடந்த, அம்பேத்கர் நினைவு தினம் நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோ, 'திருமாவளவன், வளர்ந்து வருகிற, நல்ல தலைவர் என, தமிழகம் முழுவதும் சென்று பேசினேன். 'தலித்துகளை, திராவிடம் உயர்த்தவில்லை என, வன்னியரசு எழுதியிருக்கிறார்.

வன்னியரசு, இதை நீங்களாக எழுதவில்லை; இதை எழுத, உங்களுக்கு உத்தரவிட்டது யார்?' என, வழக்கம் போல ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார்.வைகோ பேச்சால், கடும் அதிருப்தி அடைந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலர், 'வைகோ பணத்தை திருப்பி கொடுத்து விடுவோம்' என, திருமாவளவனிடம் வலியுறுத்தினர். அதை, அவரும் ஏற்றார்.இது குறித்து, திருமாவளவன் அளித்த பேட்டி:முகநுாலில், வைகோ பற்றி, வன்னியரசு பதிவு செய்த கருத்து, கட்சியின் கருத்தல்ல என்பதை, நான் வன்னியரசுவிடம் சுட்டிக்காட்டி, அதை நீக்கும்படி கூறினேன். அவரும் வருத்தம் தெரிவித்து, நீக்கி விட்டார். வைகோவின் உதவியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வருத்தம் தெரிவித்தார்.அதன்பின், வைகோ சொல்லியிருக்கிற கருத்து, அதோடு தொடர்புடையதாக தெரியவில்லை. 2006 சட்டசபை தேர்தலில், தன் இல்லத்துக்கு, என்னை அழைத்தார்; உபசரித்தார்; உதவி செய்தார். அதற்கு, நான் பல முறை நன்றி சொல்லியிருக்கிறேன்.ஆனால், வன்னியரசு கருத்துக்கு, இது பதிலா; என் மீது கோபமா; வன்னியரசு மீது கோபமா என, தெரியவில்லை. நான் யாரையும் துாண்டிவிட்டு, கருத்து சொல்கிற அற்ப பிறவி அல்ல.இவ்வாறு, திருமாவளவன் கூறினார்.வைகோ - திருமாவளவன் இடையே ஏற்பட்டுள்ள மோதல், இரு கட்சிகள் இடையிலானது மட்டுமின்றி, இருவருக்கும் இடையிலான, தனிப்பட்ட மோதலாகவும் உருவெடுத்துள்ளது. இந்த இரு கட்சிகளையும், கூட்டணியில் சேர்க்க வேண்டுமா; வேண்டாமா... என்ற குழப்பத்தில், ஏற்கனவே, தி.மு.க., இருந்து வருகிறது.இந்த சூழலில், இவர்கள் இப்படி மோதிக் கொள்வதை பார்த்து, தி.மு.க., அதிர்ச்சி அடைந்துள்ளது.



- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X