மருமகன் கொலை வழக்கில் மாமனாருக்கு 7 ஆண்டு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மருமகன் கொலை வழக்கில் மாமனாருக்கு 7 ஆண்டு சிறை

Added : டிச 09, 2018

சென்னை மருமகன் கொலை வழக்கில், மாமனாருக்கு விதிக்கப்பட்ட, ஏழு ஆண்டு சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, விடுதலை செய்தது.ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகேயுள்ள நரிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர், பாலகிருஷ்ணன்; வேன் டிரைவர். இவரது மனைவி, ராதா. பாலகிருஷ்ணன், அடிக்கடி குடித்து விட்டு வந்து, மனைவியுடன் தகராறு செய்வார். குடும்ப செலவுக்கு பணம் கேட்டதால், மனைவியை தாக்கி உள்ளார். சம்பவம் குறித்து, ராதாவின் தந்தை தங்கவேலுக்கு தெரிய வந்தது. உடனே, மகளின் வீட்டுக்கு வந்து விசாரித்துள்ளார்.

பின், மகளையும், பேரனையும், தன் வீட்டுக்கு அழைத்து செல்ல முற்பட்டார்.அப்போது அவர்களை, பாலகிருஷ்ணனும், அவரது தாய் லட்சுமியும் தடுத்தனர்; ஆத்திரமடைந்த தங்கவேல், பாலகிருஷ்ணனை வெட்டி விட்டு, ஓடி விட்டதாகவும், பாலகிருஷ்ணன் மரணமடைந்து விட்டதாகவும், சித்தோடு போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.இந்த சம்பவம், ௨௦௧௫ நவம்பரில் நடந்தது. மாமனார் தங்கவேலுக்கு எதிராக, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த, ஈரோடு செஷன்ஸ் நீதிமன்றம், தங்கவேலுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தங்கவேல் மேல்முறையீடு செய்தார்.தங்கவேல் தரப்பில், வழக்கறிஞர், என்.மனோகரன் ஆஜராகி, ''கொலை சம்பவத்தில், மனுதாரருக்கு எந்த தொடர்பும் கிடையாது; பாலகிருஷ்ணனின் தாய் அளித்த முரண்பட்ட வாக்குமூலத்தை பார்க்கும் போது, சம்பவ இடத்தில், அவர் இருந்தாரா என்பது, சந்தேகமாக உள்ளது,'' என்றார்.மனுவை விசாரித்த, நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:மரணமடைந்த பாலகிருஷ்ணனின் தாய், லட்சுமி அளித்த வாக்குமூலத்தில், பல முரண்பாடுகள் உள்ளன. ஆனால், அவர் தான், சம்பவத்தை நேரடியாக பார்த்த முக்கிய சாட்சி என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

செஷன்ஸ் நீதிமன்றமும், இவரது சாட்சியத்தை தான் முழுமையாக சார்ந்துள்ளது. சாட்சியத்தில், லட்சுமி முரண்பட்டு இருப்பதை, செஷன்ஸ் நீதிமன்றம் கவனிக்க தவறி விட்டது.குறிப்பிட்ட சமூகத்தினரிடம், பாலகிருஷ்ணன், பகையை வளர்த்து கொண்டதும், ஒரு முறை அவரை தாக்குவதற்கு, கூட்டமாக வந்ததாகவும், லட்சுமி கூறியிருப்பதை, செஷன்ஸ் நீதிமன்றம் சரியான முறையில் பரிசீலிக்கவில்லை. உரிய ஆதாரங்களுடன், குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபிக்கவில்லை.எனவே, செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. வழக்கில் இருந்து, தங்கவேல் விடுதலை செய்யப்படுகிறார்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X