இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு : உயரதிகாரி இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு : உயரதிகாரி இடமாற்றம்

Added : டிச 09, 2018
 இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு : உயரதிகாரி இடமாற்றம்

லக்னோ :உத்தர பிரதேச மாநிலம், புலந்த்ஷஹரில் ஏற்பட்ட கலவரத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட, இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரியை இடமாற்றம் செய்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள, புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சமீபத்தில், பசுக்கள் கொல்லப்பட்டு, அதன் உறுப்புகள் சிதறி கிடந்ததால், அப்பகுதியை சேர்ந்த சிலர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு கூடிய ஹிந்துத்வா அமைப்பினர், போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கலவரமாக மாறியதில், கலவரத்தை ஒடுக்க முயன்ற, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர்.இந்த சம்பவம் தொடர்பாக, பஜ்ரங்தள் அமைப்பின் மாவட்ட தலைவர் உட்பட, ஹிந்துத்வா அமைப்பைச் சேர்ந்த சிலரை, போலீசார் கைது செய்துள்ளனர்; மேலும் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கலவரம் தொடர்பான தகவல் கிடைத்ததும், மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு போகாதது குறித்து, டி.ஜி.பி., தலைமையில், நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தில், கேள்வி எழுப்பப்பட்டது.இதையடுத்து, புலந்த்ஷஹர் மாவட்ட மூத்த, எஸ்.பி., கிருஷ்ண பகதுார், லக்னோவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சீதாபூர், எஸ்.பி., பிரபாகர் சவுத்ரி, புலந்த்ஷஹருக்கு மாற்றப்பட்டு உள்ளார்.ராணுவ வீரன் சிக்கினான்புலந்த்ஷஹரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட, இருவரை சுட்டு கொன்றது, உ.பி.,யை சேர்ந்த, ராணுவ வீரர், ஜிதேந்திரே மாலிக் என்பது தெரிய வந்துள்ளது. இருவரை துப்பாக்கியால் சுட்ட ஜிதேந்திரா, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு, ஜம்மு - காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்கள் முகாமுக்கு சென்றுள்ளான்.சம்பவம் நடந்த நாளன்று, அப்பகுதியில் இருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், இந்த தகவல் தெரிய வந்துள்ளது. ஜிதேந்திராவை, ராணுவத்தினர் பிடித்து வைத்துஉள்ளனர். அவனை புலந்த்ஷஹர் போலீசாரிடம் ஒப்படைப்பதில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக, ராணுவத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X