ரயில் முன்பதிவு பயணியரிடம் கூடுதல் கட்டணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் முன்பதிவு பயணியரிடம் கூடுதல் கட்டணம்

Added : டிச 09, 2018
 ரயில் முன்பதிவு பயணியரிடம்  கூடுதல் கட்டணம்

ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - மண்டபம் இடையே, பஸ்சில் செல்ல, முன்பதிவு ரயில் பயணியிடம், 27 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.பாம்பன் ரயில் பாலம் சேதம் அடைந்ததால், 4ம் தேதி முதல், ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை ரத்தானது. இதனால், சென்னை, திருப்பதி, கன்னியாகுமரி உட்பட வெளி மாநிலத்தில் இருந்து வரும் முன்பதிவு ரயில் பயணியர், மண்டபம் ஸ்டேஷனில் இறங்கியதும், தயாராக உள்ள ரயில்வேயின் இலவச பஸ்சில், ராமேஸ்வரம் செல்கின்றனர்.மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபத்திற்கு திரும்ப வரவும், இலவச பஸ் உண்டு என்ற தகவலும், பயணியருக்கு, ரயில்வே நிர்வாகம், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி உள்ளது. இதன்படி, மண்டபம் ஸ்டேஷன் அருகில், பஸ்சில் ஏறும் பயணியரை, ராமேஸ்வரம் கோவில், அக்னி தீர்த்த கரையில் இறக்கி விடுகின்றனர். ஆனால், மண்டபம் திரும்பிச் செல்ல, பஸ் புறப்படும் இடம் குறித்த தகவலை, பயணியருக்கு ரயில்வே தெரிவிக்கவில்லை.இதனால், அக்னி தீர்த்த கரை மற்றும் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் அரசு பஸ்சில் ஏறி, மண்டபம் ஸ்டேஷன் செல்லும் முன்பதிவு பயணியரிடம், 27 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், டிரைவர், கண்டக்டர்கள் தரக்குறைவாக பேசுவதாக பயணியர் கூறுகின்றனர்.புதுச்சேரியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்ற பயணி, ''மண்டபத்தில் இருந்து, அக்னி தீர்த்த கரையில் இறக்கி விட்ட, அதே இடத்தில் நின்ற பஸ்சில் ஏறி, மண்டபம் சென்ற போது, என்னிடம் கட்டணம் வசூலித்தனர். ''சரியான தகவலை தெரிவிக்காத ரயில்வே நிர்வாகத்தின் குளறுபடியால், எங்களுக்கு கூடுதல் செலவானது. இதுதொடர்பாக ரயில்வே மீது வழக்கு தொடருவேன்,'' என்றார்.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'முன்பதிவு பயணியர், மண்டபம் திரும்பி செல்வதற்கு, ரயில் புறப்படும், ஒரு மணி நேரத்திற்கு முன், ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பஸ் புறப்படும். வேறு எங்கும் பயணியர் ஏறினால், நாங்கள் பொறுப்பு இல்லை' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X