மீன்களுக்கு இரையாக வீசப்பட்ட பெண் உடல்! கண்டறிய துப்பில்லை; 4 மாதங்களாகியும் நகராத வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன்களுக்கு இரையாக வீசப்பட்ட பெண் உடல்! கண்டறிய துப்பில்லை; 4 மாதங்களாகியும் 'நகராத' வழக்கு

Added : டிச 09, 2018

கோவை:கோவை நகரில், இளம்பெண்ணை கொடூரமாகக் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, குளத்தில் மீன்களுக்கு இரையாக வீசப்பட்ட வழக்கில், துப்புத்துலங்காமல் போலீசார் திணறுகின்றனர். கொலையான பெண் யார் என்றே கண்டறிய முடியாத நிலையில், கொலையாளிகளை எவ்வாறு பிடிப்பது என, புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கோவை, செல்வபுரம், செல்வாம்பதி குளத்தில், கடந்த ஜூலை, 25ம் தேதி, துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் நீரில் மிதந்தன. மீன்களுக்கு இரையாக வீசப்பட்ட தலை, கை, கால்கள் என, தனிதனியாக பாகங்களை போலீசார் கைப்பற்றி விசாரணையைத் துவக்கினர்.நான்கு மாதங்களாகியும், கொலையான பெண் யார் என்பதைக் கூட போலீசார் கண்டறிய முடியவில்லை. விசாரணையில், கொலையுண்ட பெண்ணின் காலில் அணிந்திருந்த மெட்டி, மேற்குவங்க பெண்கள் அணிவதுபோல் இருந்ததாக தெரியவந்தது.அந்தக்கோணத்தில் போலீசார் விசாரிக்க துவங்கினர் அதன்பிறகும் எவ்வித துப்பும் இல்லை. இதையடுத்து, கொலையான பெண்ணின் சிதைந்த முகத்தை, மாநகர் முழுவதும் போலீசார் போஸ்டராக ஒட்டியுள்ளனர். குறிப்பாக, பீகார் போன்ற வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் பகுதிகளில் அதிகளவு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், கொலையான பெண் குறித்து ஏதேனும் சிறிய தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போலீசார் உள்ளனர்.செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகாசலம் கூறுகையில், ''கொலையான பெண் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்தி மற்றும் தமிழில் முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பீகார், மேற்கு வங்க மாநிலங்களில் மாயமான பெண்கள் குறித்து தகவல் சேகரித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த தகவலும் இல்லை,'' என்றார்.பரிசோதனை அறிக்கைகொலையான, 25 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் தலையில் இரும்பு ராடு உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில் உயிரிழந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. அதன்பின், துண்டு, துண்டாக வெட்டி குளத்தில் வீசியுள்ளனர். அடையாளம் காண்பதற்காக பெண்ணின் சடலம், கோவை அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.கொலையான பெண்ணின் முகத்தை, பல்வேறு இடங்களில் மாயமான, 30க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் போலீசாரால் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது; எதுவும் பொருந்தவில்லை. இதுவும், போலீஸ் விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, செல்வபுரம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்துதான் இளம்பெண் கொலை நடந்ததாகவும், கொலை செய்யப்பட்ட ரத்த கறை சுவற்றில் படிந்திருந்ததாகவும், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் அதை அழித்துவிட்டதாகவும் பொதுமக்களிடம் தகவல் பரவியுள்ளது.இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X