ஒரே மண்டலத்தில் ஆண்டுக்கணக்கில் பணி மாநகராட்சியில், செல்வாக்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை வருமா?| Dinamalar

தமிழ்நாடு

ஒரே மண்டலத்தில் ஆண்டுக்கணக்கில் பணி மாநகராட்சியில், 'செல்வாக்கு' அதிகாரிகள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை வருமா?

Added : டிச 13, 2018
Share
சென்னை: அரசியல் மற்றும் பண பலத்தால், பல ஆண்டுகளாக ஒரே மண்டலத்தில், 'பசை' போல ஒட்டிக் கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை, விதிமுறைப்படி இடமாற்றம் செய்ய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சியில், 15 மண்டலங்களில், 200 வார்டுகள் உள்ளன. இதில், ஒவ்வொரு மண்டலத்திலும், இரண்டு செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட, 30 அதிகாரிகள் உள்ளனர்.அரசு அதிகாரிகள், மூன்று
ஒரே மண்டலத்தில் ஆண்டுக்கணக்கில் பணி மாநகராட்சியில், 'செல்வாக்கு' அதிகாரிகள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை வருமா?

சென்னை: அரசியல் மற்றும் பண பலத்தால், பல ஆண்டுகளாக ஒரே மண்டலத்தில், 'பசை' போல ஒட்டிக் கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை, விதிமுறைப்படி இடமாற்றம் செய்ய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், 15 மண்டலங்களில், 200 வார்டுகள் உள்ளன. இதில், ஒவ்வொரு மண்டலத்திலும், இரண்டு செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட, 30 அதிகாரிகள் உள்ளனர்.அரசு அதிகாரிகள், மூன்று ஆண்டுகள் மட்டுமே, ஒரே இடத்தில் பணிபுரிய வேண்டும். அதன் பின், அவர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.பணம் வசூல்ஆனால், சென்னை மாநகராட்சியில், பெரும்பாலான அதிகாரிகள், தங்கள் செல்வாக்கை பயன்டுத்தி, ஒரே மண்டலத்தில், பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால், அவர்கள் அரசியல்வாதிகளுக்கு அடிமையாகவே மாறி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தேர்தல் மற்றும் பல்வேறு காரணங்களால் இடமாற்றம் பெற்று, வேறு மண்டலத்திற்கு செல்லும் இவர்கள், ஒரு மாத காலத்திற்குள், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும், பணம் அளித்தும், மீண்டும் அதே மண்டலத்திற்கு திரும்ப வந்து விடுகின்றனர்.
இன்னும் சில அதிகாரிகள், ஒரே மண்டலத்தில், உதவி பொறியாளராக பணியாற்றி, அதே மண்டலத்தில், உதவி செயற்பொறியாளராகவும், செயற்பொறியாளராகவும், உதவி ஆணையராகவும் பதவி உயர்வு பெற்று, பணி செய்து வருகின்றனர்.இதற்காக, பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய, அதிகாரிகள் தயாராக உள்ளனர். குறிப்பிட்ட மண்டலத்திற்கு செல்ல, 5 முதல், 10 லட்சத்திற்கு மேல் செலவு செய்கின்றனர்.
இவ்வளவு பணம் அவர்களுக்கு எப்படி வந்தது என்ற கேள்வி எழுகிறது. இப்படி பணம் கொடுத்து செல்லும் மண்டலத்தில், சில மாதங்களிலேயே, தாங்கள் செலவு செய்த பணத்தை வசூலித்தும் விடுகின்றனர்.உதாரணமாக, கோடம்பாக்கம் மண்டலத்தில், செயற்பொறியாளராக உள்ள பெரியசாமி, பல ஆண்டுகளாக, அதே மண்டலத்தில் பணிபுரிந்து வருகிறார்.பணி மாற்றம் பெற்று, வேறு மண்டலத்திற்கு சென்றாலும், 10 நாட்களில், இதே மண்டலத்திற்கு திரும்ப வந்துவிடுகிறார்.இவர், தி.நகர் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,வின், செல்லப்பிள்ளையாகவும் உள்ளார்.நீதிமன்றம் உத்தரவுஇவரது அதிகார வரம்பில் உள்ள, வடபழனி, 130வது வார்டு, தெற்கு பெருமாள் கோவில் தெருவில், அ.தி.மு.க., பிரமுகர் மற்றும் எம்.எல்.ஏ., ஆதரவாளர், விதிமுறைகளை மீறி கட்டிய கட்டடம் மீது, பல்வேறு புகார்கள் எழுந்தன.அந்த கட்டடம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, 2013ல், மே 17ம் தேதி, மாநகராட்சிக்கு சி.எம்.டி.ஏ., கடிதம் அனுப்பியும், செயற்பொறியாளர் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்தார். இதற்கு, தி.நகர் எம்.எல்.ஏ.விடம், 'நற்பெயர்' பெற்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து, சமூக ஆர்வலர் தொடுத்த வழக்கில், நீதிமன்ற உத்தரவையடுத்து, கண் துடைப்பாக கட்டடத்திற்கு, 'சீல்' வைத்தனர். ஆனால், அங்கு தங்கியிருந்தவர்களை வெளியேற்றவில்லை.இதன் விளைவு, 2017 மே, 9ல், விதிமீறல் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில், விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்கவும், அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி மனு தாக்கல் செய்தார்.நீதிமன்ற கண்டிப்பை தொடர்ந்து, அந்த கட்டடம் இடிக்கப்பட்டது. அப்போதும், அந்த கட்டடத்தை இடிக்காமல் இருக்க, எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்தனர்.இதற்கு மேல் தாமதித்தால், தன் தலைக்கு ஆபத்து என, அந்த அதிகாரி கெஞ்சியதாக கூறப்படுகிறது.இதுபோன்ற பல ஆண்டுகளாக, ஒரே மண்டலத்தில், 'பசை' போல ஒட்டிக் கொண்டிருக்கும் அதிகாரிகளால் தான், இவ்வாறான முறைகேடுகள் நடக்கின்றன.நீள்கிறதுஇப்படி ஒரே மண்டலத்தில், பல ஆண்டுகளாக பணிபுரியும் அதிகாரிகள் பட்டியல், சென்னை மாநகராட்சியில், 'அனுமன் வால்' போல நீள்கிறது.
வளசரவாக்கம் மண்டலத்தில், செயற்பொறியாளர் திருமுருகன், அதே மண்டலத்தில், உதவி செயற்பொறியாளராக பணியில் சேர்ந்து, செயற்பொறியாளராகவும், உதவி கமிஷனராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.ஆலந்துார் மண்டலத்தில், உதவி பொறியாளர், ஜெயகுமார், சேது, உதவி செயற்பொறியாளர் ஆர்டின், சுகாதார அலுவலர் மாரிமுத்து ஆகியோர், பல ஆண்டுகளாக ஒரே மண்டலத்தில் பணிபுரிகின்றனர்.தேனாம்பேட்டை மண்டலத்தில், செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பசுபதி ஆகியார், பல ஆண்டுகளாக அங்கேயே பணிபுரிகின்றனர்.எதிர்பார்ப்புதீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை இடித்து, அகற்ற நடவடிக்கை எடுக்கும் படி, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோல், பல ஆண்டுகளாக, ஒரே மண்டலத்தில் பணிபுரியும், உதவி செயற்பொறியாளர், செயற் பொறியாளர்கள், ஆகியோரையும் இடமாற்றம் செய்ய, நீதிமன்றமே உத்தரவிட்டால் தான், மாநகராட்சி கண்விழிக்குமா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணியில் இருக்கக் கூடாது என்ற விதிமுறையை கருத்தில் கொண்டு, ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை, மாநகராட்சி கமிஷனர் மாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X