நம் நாடு போன்ற, அதிக மக்கள் தொகை நாட்டில், சாமானிய மக்களே அதிகம். அவர்களின் நலனுக்காகவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் தான், எந்த ஒரு அரசும் பாடுபட வேண்டும். மாறாக, ஊழலை ஒழிப்பதாகவும், கறுப்பு பணத்தை ஒழிப்பதாகவும், சாமானிய மக்களின், அடி மடியில் கை வைத்தால், விளைவுகளை சந்தித்து தானே ஆக வேண்டும்!அது தான், ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு விழுந்த அடிக்கு முக்கிய காரணம்!காங்கிரஸ், ஊழல் கட்சி என்பது, நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். நிலக்கரி சுரங்க ஊழல், '2ஜி' ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் என, முந்தைய, காங்., ஆட்சியில் நடந்த பல ஊழல்களை, மக்கள் நன்கு அறிவர்.ஆனால், இவை யாவும், மக்களை நேரடியாக பாதிக்கவில்லை; சாதாரண மக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. ஆனால், மக்களை நேரடியாக பாதித்தது, பண மதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி., அமலாக்கமும் தான் என்பதை, பா.ஜ., இன்னமும் உணரவில்லை.காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலால், ஏழை நெசவாளருக்கோ, சிறு தொழில் புரிபவருக்கோ, எந்த பாதிப்பும் நேரடியாக இல்லை. 'நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது ஊழல்' என்பதை விட, இன்றைய சாப்பாட்டில் மண் விழுந்து விட்டதைப் பற்றி தான், சாமானியன் கவலைப்படுவான்.இதை, உளவியல் ரீதியாக, பா.ஜ., அறிய முற்படவில்லை. ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முனைப்பு காட்டாமல், அவர்களின் குறைகளை, காது கொடுத்து கேட்காமல், பாராமுகமாக இருந்து வரும், பா.ஜ., அரசு மீது, மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.அதன் வெளிப்பாடு தான், நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள்!டில்லியில் போராடும், ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பது, மோடி அரசு மீதான அதிருப்தியை அதிகரித்து உள்ளது. தொழிலதிபர்கள், விஜய் மல்லையாவுக்கும், நிரவ் மோடிக்கும், கடன் கொடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பி, வங்கிகளை, 'திவால்' நிலைக்கு கொண்டு வந்தது, முந்தைய காங்கிரஸ் அரசு தான்!ஆனால், வங்கிகளில் வாராக்கடன்களால் நிதி நெருக்கடியை சமாளிக்க, இப்போதைய, பா.ஜ., அரசு, சாதாரண மக்களிடம் கெடுபிடி காட்டுகிறது. மேலும், படிப்புக்காக, வங்கிக்கடன் பெற்றவர்களுக்கு, கடனை திருப்பி செலுத்த, நெருக்கடி கொடுக்கிறது; சிறு, குறுந்தொழில் புரிவோரிடம், கறார் காட்டுகிறது.வங்கிகளின் நிதி நெருக்கடிக்கு, இவர்கள் தான் காரணம் என்பது போல, கடன் வசூலில் கெடுபிடி செய்கிறது. இவை யாவும், சாதாரண மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்திஉள்ளது.'வாராக்கடன்களை வசூலிக்கும் வரை, வங்கி ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு கிடையாது' என, அறிவித்து விட்டது. இதனால், வங்கி ஊழியர்களும், மத்திய அரசு மீது கோபத்தில் உள்ளனர். வாராக்கடன் வசூலிக்க, ஏழை மக்களிடம் கெடுபிடி காட்டும் நிலைக்கு, வங்கி ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.மத்திய கூட்டுறவு வங்கிகளின், நிதி நிலைமையை சீர் செய்வதற்காக, நடுத்தர மற்றும் ஏழை மக்களின், வைப்புத் தொகை மீதான வட்டி வீதத்தை, மத்திய அரசு குறைத்து விட்டதை, பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்திய, நடுத்தர மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இவையெல்லாம், பணக்கார, பா.ஜ., தலைவர்களுக்கு தெரிவதில்லை.மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், நாட்டின் வளர்ச்சியை கருதி, நிறைய நிர்வாக சீர்திருத்தங்களை செய்தது உண்மை தான். ஆனால், அவை, சாமான்ய மக்களை பாதிக்காத வகையில் செய்திருக்க வேண்டும்.உதாரணமாக, நாட்டு மக்கள் அனைவருக்கும், வங்கி கணக்கு அவசியம் என்பது பாராட்டுக்குரியதே. அது போல, ஆதார் எண் அவசியம் என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், வங்கி கணக்கு துவங்கவும், ஆதார் எண் பெறவும், மக்கள் அலைக்கழிக்கப்பட்டனரே!அது போல, ஆதார் அட்டையுடன், 'பான்' எண் எனப்படும், நிரந்தர கணக்கு எண் இணைப்பிற்காகவும், அலைய வேண்டியதாயிற்றே! புறநகர் வங்கி கிளைகளிலும், கிராமப்புற வங்கி கிளைகளிலும், சேமிப்பு கணக்கு துவங்குவதற்கு, பல மணி நேரம், மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதே!வங்கி கணக்கு துவங்கிய பின், சில நாட்களில், கிராமப்புற வங்கிகளில், குறைந்தபட்ச இருப்பு, 2,000 ரூபாய் என்றும், நகர் புறங்களில், 3,000 ரூபாய் என்றும், மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.மாதம், 8,000 ரூபாய் சம்பளம் பெறும், சாமானி யன், 2,000 ரூபாய் இருப்பு வைத்தால், மீதியில் எப்படி காலத்தை ஓட்டுவான்? சாதாரண மக்களுக்கு, இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதை பற்றி, மத்திய அரசு உணர்ந்ததாகவும் தெரியவில்லை.அவசர தேவைக்கு, வங்கி அட்டை மூலம், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க வேண்டுமானால், பெரும்பாலான, ஏ.டி.எம்.,களில், 500 ரூபாய் நோட்டும், 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருகின்றன.நுாறு ரூபாய் நோட்டுகளே இல்லாததால், அவசர தேவைக்கு நுாறு, இருநுாறு எடுக்க முடியாமல் போகிறது.நாட்டின் வளர்ச்சிக்கு, ஜி.எஸ்.டி., அத்தியாவசியமானது தான். ஆனால், ஜி.எஸ்.டி., அமலால், சாதாரண பெட்டிக்கடைக்காரர், தனக்கு கிடைக்கும் லாபத்தை விட, அதிக வரி செலுத்த வேண்டியுள்ளதாக புலம்புகிறார்.ஓட்டலுக்குச் சென்று, காபி சாப்பிட வேண்டுமானால், பில்லுடன், 2.5 ரூபாய், ஜி.எஸ்.டி.,யும் செலுத்த வேண்டும். நாடு முழுதும், ஜி.எஸ்.டி., அமலான பின், அரசின் வரி வருவாய் அதிகரித்துஉள்ளதாகவும், வரி ஏய்ப்போர் வெகுவாக குறைந்துள்ளதாகவும், மத்தியநிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறுகிறார்.இதனால், அரசின் வருமானம் பெருகியிருப்பதாகவும் கூறுகிறார்; உண்மை தான். அதே சமயம், ஜி.எஸ்.டி., அமலாக்கத்தால் பாதிக்கப்பட்ட, குறுந்தொழில் புரிந்தோருக்கும், ஏழை நெசவாளருக்கும், மாற்று ஏற்பாட்டை, மத்திய அரசு செய்யவில்லையே!நிர்வாக சீர்திருத்தம், நிதி சீர்திருத்தம் என, பல சீர்திருத்தங்களை செய்து வருவதாகச் சொல்கிறது, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு. கடந்த, 2016ம் ஆண்டின் கணக்குபடி, ரிசர்வ் வங்கி, நம் நாட்டில் புழக்கத்தில் விட்ட ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை, 2,120 கோடி ரூபாய்; இதை அச்சடிக்க ஆன செலவு, 3,421 கோடி ரூபாய்.ஒரு ரூபாய் நாணயம் தயார் செய்ய, 1.16 ரூபாய் செலவாகிறது என, சமீபத்திய அறிக்கையில், நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. செல்லாத நோட்டு திட்டம் அரசுக்கும் ஏமாற்றம்; மக்களுக்கும் ஏமாற்றம்; இதனால் பெரிய நன்மை எதுவும் கிடைத்து விடவில்லை.இத்திட்டத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரதமர் மோடி அறிவித்த போது, நாட்டில், 15 லட்சத்து, 40 ஆயிரம் கோடி ரூபாய், கறுப்பு மற்றும் கள்ளப்பணம் புழக்கத்தில் இருந்ததாக, அரசு அறிவித்தது. செல்லாத நோட்டு திட்டம் அறிமுகத்திற்கு பின், வங்கிக்கு, 14 லட்சத்து, 97 ஆயிரம் கோடி ரூபாய் வந்து விட்டது.வெறும், 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே மிச்சம். இது கறுப்பு பணமா... கணக்குக்கு வராத பணமா என்பது, யாருக்கும் தெரியவில்லை. மோடி அரசின் அந்த நடவடிக்கையால், கறுப்புப் பண பதுக்கல் பேர்வழிகளுக்கு, ஒரு வித பயம் ஏற்பட்டது உண்மை தான்.ஆனால், சாதாரண, நடுத்தர மக்களுக்கு, என்ன நன்மை கிடைத்தது? அதை சொல்ல, மோடி அரசு தவறி விட்டது.மத்திய அரசு கொண்டு வரும் அதிரடி திட்டங்களால், பெரும் பணக்காரர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பு வலைக்குள்ளேயே இருக்கின்றனர். சீர்திருத்தம், வளர்ச்சி என்ற பெயரில், சாமானியன் கசக்கி பிழியப் படுகிறான்; நசுக்கப் படுகிறான். இதை எப்படி, வளர்ச்சி என, கருத முடியும்?அதிக வளர்ச்சி அடையும் நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளது என்கிறது மத்திய அரசு. 'கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை, நான்காண்டு களில் அடைந்து விட்டோம்' என்றும், பிரதமர் பேசி வருகிறார்.ஆனால், ஐ.நா.,வின், உணவு மற்றும் வேளாண் அமைப்பின், சமீபத்திய புள்ளி விபரத்தின்படி, இந்தியாவில் தினமும், 30 கோடி பேர், இரவு உணவின்றி, பட்டினியாக படுக்கின்றனர். 18 கோடி பேர், காலை அல்லது மதிய உணவின்றி தவிக்கின்றனர். உலகிலேயே அதிகமாக, 19 கோடி சிறார்கள், ஊட்டச்சத்து குறைப்பாட்டால், இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.இவற்றுக்கு எல்லாம் தீர்வு காணாமல், வளர்ச்சி என்றால் ஏற்க முடியுமா... இவர்கள் கூறும், வளர்ச்சிக் கான அளவுகோல் எது என்பதும் தெரியவில்லை. பிரதமர் மோடி, 'நான் பிரதம மந்திரியில்லை; பிரதான சேவகன்' என, 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் கூறி வருகிறார்.நாட்டின் பிரதான சேவகனுக்கு, அடித்தட்டு மக்களின் உண்மை நிலைமை, ஏன் தெரிவதில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை.உலக சுற்றுப்பயணத்தை, பிரதமர் மோடி நிறுத்தி, உள்நாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதாரண மக்களின் குறைகளை அறிந்து, தீர்க்க முன் வர வேண்டும். விவசாயிகள், நெசவாளர்கள் படும் கஷ்டங்களை, நேரில் ஆராய வேண்டும்.உலகத் தலைவர்களை சந்திப்பதை கைவிட்டு, உள்நாட்டு மக்களை சந்தித்து குறைகளை அறிய வேண்டும். அப்போது தான், பா.ஜ.,வின் ஓட்டு வங்கியையாவது, தக்க வைத்துக் கொள்ள முடியும்.பா.ஜ., பணக்காரர்கள் கட்சி; மதவாத கட்சி என்ற உணர்வு, ஏழை மக்களிடம் உள்ளது. அதற்கு ஏற்றார் போல, பா.ஜ., தலைவர்களின் செயல்பாடுகளும் உள்ளன. ஹிந்து மதவாத உணர்வை, மக்களுக்கு ஊட்டியவர்கள், காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகள் தான் என்றாலும், அதை உடைப்பதற்கு, மோடி ஒன்றும் செய்யவில்லையே!தவிர, காங்கிரசை ஊழல் கட்சி என்று கூறி வருவது, மக்களிடையே எவ்வித மாற்றத்தையும் உண்டாக்கி விடாது. ஏனென்றால், ஊழலை விட, பா.ஜ.,வின் மதவாத உணர்வே, மக்களிடம் மேலோங்கியுள்ளது. மதவாத கட்சியைக் காட்டிலும், ஊழல் கட்சியே மேல் என்ற எண்ணத்தை உண்டாக்கி விட்டுள்ளது. அதைத் தான், நடந்து முடிந்த, ஐந்து மாநில தேர்தல் உணர்த்துகிறது.உ.பி.,யில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க, முன் வராமல், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து வருவது, நாட்டு மக்களை சிந்தித்து பார்க்க வைத்து உள்ளது.அது, எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகப் போய், பா.ஜ., விற்கு எதிராக, மக்களை திசை திருப்ப, வலுவான ஆயுதமாகப் போய் விட்டது.பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமர் கோவில் கட்ட வேண்டும் என, அடம் பிடிக்கும், வி.எச்.பி.,யினரை, அந்த ராமரே வந்து சமாதானம் செய்தாலும் கேட்க மாட்டார்கள்.கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசை பிடிக்காமல், புதிய மாற்றத்தைக் கொண்டு வரவே, பா.ஜ.,விற்கு மக்கள் ஓட்டளித்தனர். ஆனால், இப்போது, 'காங்கிரசே மேல்' என்ற எண்ணம், மக்களிடம் வந்து விட்டது. அதை மாற்ற, பா.ஜ., அரசு முன் வர வேண்டும். இல்லையேல், கொள்ளைக்காரர்களிடமே நாடு மீண்டும் போய் விடும்.இ - மெயில்: vbnarayanan60@gmail.comமொபைல் போன்: 95510 13773