பணத்திற்கு கவலையில்லை!

Updated : டிச 16, 2018 | Added : டிச 16, 2018
Share
Advertisement
 டில்லி உஷ்,காங்கிரஸ், கமல்நாத்,  பா.ஜ., பிரதமர் மோடி, அமித்ஷா,விஜய் கோயல், மம்தா பானர்ஜி, 3வது அணி, ராகுல்,

மூன்று மாநில தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் படு சந்தோஷத்தில் உள்ளது. இந்த மாநில முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க கால தாமதம் ஆனாலும், இந்த வெற்றி, ராகுலின் மரியாதையை உயர்த்தியுள்ளது. குறிப்பாக, மத்திய பிரதேச முதல்வராக, கமல்நாத் தேர்ந்தெடுக்கப்பட்டது, கட்சிக்கு புத்துணர்வை கொடுத்துள்ளது.'ஒரு வழியாக முக்கிய பிரச்னை தீர்ந்தது' என, சீனியர் தலைவர்கள் நிம்மதி பெருமூச்சோடு உள்ளனர். காரணம் இது தான்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, காங்கிரசிடம் போதிய நிதி கிடையாது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 'நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' என, பணம் கொடுக்காமல் கை விரித்துவிட்டதாம், கட்சி.

பிரதமர் நரேந்திர மோடியை மிஞ்ச, ராகுலால் முடியாது என்பதால், பெரிய நிறுவனங்களும், காங்கிரசுக்கு அதிக பணம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டன.வாழையடி வாழையாக காங்கிரசுக்கு பணம் தரும் பழமையான நிறுவனங்கள் மட்டுமே, ஒப்புக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. பரிதாப நிலையில் இருந்த காங்கிரசுக்கு, கமல்நாத் முதல்வரானது பெரும் பலம் என்கின்றனர், காங்கிரசார். கமல்நாத் ஒரு தொழிலதிபர்; கோல்கட்டாவைச் சேர்ந்தவர்; மத்திய பிரதேசத்திலிருந்து பல ஆண்டுகளாக போட்டியிடும் இவர் ஒரு பஞ்சாபி.

கமல்நாத் அதிக அளவில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர். கட்சிக்கு இனிமேல் இவர் பணத்தை வாரி இறைப்பார் என்ற நம்பிக்கையில், கட்சி தலைவர்கள் உள்ளனர். கமல்நாத்தும், 'கவலைப்பட வேண்டாம்' என, உறுதி அளித்துள்ளாராம்.இதை உறுதிப்படுத்துவது போல, ரியல் எஸ்டேட் நிறுவன தலைவர்கள் சிலர் கமல்நாத்தை வாழ்த்த, காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்திருந்தனராம். 'ஒரு பிரச்னை தீர்ந்தது; அடுத்த பிரச்னை மோடி தான்' என்கிறது காங்கிரஸ்.


பா.ஜ.,வுக்கு நெருக்கடி

சமீபத்தில் முடிந்த, ஐந்து மாநில தேர்தல் தோல்வி, பா.ஜ.,வை கலங்கடித்துள்ளது. குறைந்த பட்சம், 'மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்று விடுவோம்' என்ற நம்பிக்கையில் இருந்த கட்சிக்கு, இந்த தோல்வி பெரும் இடி.இது குறித்து, மோடி வாயே திறக்கவில்லை; காங்கிரசை வாழ்த்தியதோடு நிறுத்திக் கொண்டார். பயங்கரவாதிகளால், பார்லிமென்ட் தாக்கப்பட்ட ஆண்டு விழா நிகழ்ச்சியில், ராகுல் பக்கத்தில் நின்றிருந்தும், அவரை மோடி கண்டுகொள்ளவேயில்லை. வேலைவாய்ப்பு இல்லை; பணப்புழக்கம் குறைந்துவிட்டது; தவிர, விவசாயிகளின் பிரச்னை என, பல விஷயங்களால் கட்சிக்கு தோல்வி என்கின்றனர், பா.ஜ.,வினர்.

'ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், காங்கிரசுக்கு சுலபமான பெருத்த வெற்றி என சொல்ல முடியாது; பா.ஜ.,விற்கும் நிறைய சீட்கள் கிடைத்துள்ளன' என்கின்றனர், பா.ஜ.,வினர். அடுத்த நான்கே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தோல்விகள் எந்த அளவிற்கு பாதிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ., நடத்திய ரகசிய, 'சர்வே'யில் கிடைத்த ரிசல்ட், கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.'பா.ஜ.,விற்கு, 170 சீட்கள் தான் கிடைக்கும்' என, அந்த சர்வே சொல்கிறதாம். 2014 தேர்தலில், 282 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தார் மோடி. இப்போது லோக்சபாவில், பா.ஜ.,விற்கு, 272 எம்.பி.,க்கள் தான் உள்ளனர்.அதாவது, 'அடுத்த தேர்தலில், பா.ஜ., 100 தொகுதிகளை இழக்கும்' என்கிறது, சர்வே. 'நிலைமை மோசம் தான்' என்கிறார், ஒரு சீனியர் அமைச்சர்.காங்கிரசுக்கு, பா.ஜ.,வை விட அதிக சீட்கள் கிடைக்காது என்றாலும்…கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று சொல்லும் அந்த அமைச்சர், 'ராகுல் பிரதமர் ஆக மாட்டார்' என, உறுதியாக சொல்கிறார்.'மன்மோகன் சிங் போல, மேலிடம் சொல்வதை கேட்கும் யாராவது ஒரு காங்கிரஸ் தலைவர் பிரதமராகலாம்' எனவும் அவர் கூறியுள்ளார். 'அரசியலில் நான்கு மாதங்கள் என்பது மிகப் பெரியது; எதுவும் நடக்கலாம். எனவே, காங்., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது கனவு தான்' என்கின்றனர், சில, பா.ஜ., தலைவர்கள்.


அசத்தும் அமைச்சர்!

மத்திய அமைச்சர் விஜய் கோயல், தற்போது, பார்லிமென்ட் விவகாரத் துறையை கவனித்து வருகிறார். ராஜ்ய சபா, எம்.பி., யான கோயல், டில்லிவாசி. அடிக்கடி தொண்டர்களையும், உதவிக்காக வருபவர்களையும் தன் வீட்டில் தினமும் சந்திப்பவர் கோயல். டில்லி அசோகா சாலையில், இவரது அரசு பங்களா அமைந்துள்ளது.தெருவில் செல்பவர்கள் அங்கிருந்து வீட்டிற்குள் பார்த்தால், அவர்களைப் பார்த்து, கோயல் கை அசைத்துக் கொண்டிருப்பார். பதிலுக்கு, அவர்களும் கை அசைத்து செல்வர்.தினமும், இவரது வீட்டில் தொண்டர் கூட்டம் வந்து கொண்டே இருக்கும். சமீபத்தில், இவரது வீட்டிற்கு வந்த சில தொண்டர்கள், கோயல் வீட்டிற்குள் நின்று கொண்டே கையை ஆட்டி வாழ்த்து தெரிவித்ததைப் பார்த்து, இவர்களும் கைகளை ஆட்டினர்.பின், அவரைச் சந்திக்க உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், அங்கிருந்த போலீஸ்காரர், 'அமைச்சர் வீட்டில் இல்லை' என்றார். 'இப்போது தான் அவரை நாங்கள் பார்த்தோம்' என, போலீஸ்காரரிடம் தொண்டர்கள் சண்டையிட்டனர்.வெறுத்துப் போன போலீஸ்காரர், 'நம்பவில்லை என்றால் உள்ளே வந்து பாருங்கள்' என, தொண்டர்களை அழைத்துச் சென்றார். உள்ளே சென்ற தொண்டர்கள், ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆள் உயர, 'கட் அவுட்'டாக, கோயல் நின்று கொண்டிருந்தார்.எனக்குத் தெரிந்த ஒருவர், இந்த கட் அவுட்டை செய்து கொடுத்தார். 'உண்மையில் நான் நிற்பது போலவே செய்து கொடுத்துள்ளார். தெருவில் எங்கே நின்று பார்த்தாலும், நான் அவர்களைப் பார்ப்பது போலவே இருக்கும்; எனவே, இங்கே வைத்துவிட்டேன்' என்கிறார் கோயல்.


மூன்றாவது அணி?

காங்கிரசின் சமீபத்திய வெற்றிக்கு, பல எதிர்க்கட்சி தலைவர்கள், ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ, காங்கிரஸ் தொண்டர்களை வாழ்த்தியதோடு நிறுத்திக் கொண்டார்.ராகுலுக்கு தனியாக வாழ்த்து தெரிவிக்க வில்லை. சோனியா பிறந்த நாளன்று, மம்தா, டில்லியில் தான் இருந்தார். ஆனால், நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்கவில்லை; இப்படி, இந்த இரு பெண் தலைவர்கள் இடையே கசப்புணர்வு வளர்ந்து கொண்டிருக்கிறது.'பிரதமர் பதவிக்கு ராகுல் லாயக்கில்லை; காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கூடாது' என்பது மம்தாவின் கருத்து. இது, சோனியாவிற்கு பிடிக்கவில்லை. காங்கிரஸ் வெற்றி, சில மாநில கூட்டணி கட்சிகளுக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.அதிக சீட்களை காங்கிரஸ் கேட்க வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த கட்சிகள் குழப்பத்தில் உள்ளன. இதனால், 'மூன்றாவது அணி ஆரம்பித்தால் என்ன?' என, இக்கட்சிகள் யோசிக்கத் துவங்கியுள்ளன.மம்தாவும், காங்கிரசைத் தவிர்த்து தனியாக மூன்றாவது அணி துவங்க விரும்புகிறார். இவர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை வைத்து, தனி அணி ஆரம்பிக்க முயற்சித்து வருகிறார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X