''கற்பனையை உண்மையாக உருவாக்குவதே இசை... பாடலை விட சிறந்தது பாடல் மட்டும் தான்... போட்டியாளனுக்கு பரிசு தானாக வருவதில்லை, அவற்றை வெல்லவே முயற்சிக்க வேண்டும்...' என்ற கூற்றிற்கு ஏற்ப தன் இசை பயணத்தை துவங்கி 'ஐல.. ஐல.. ஆவாக ' வலம் வருகிறார் சென்னை நங்கநல்லுார் மெல்லிசை பாடகி ஐஸ்வர்யா, 15.
சண்டே ஸ்பெஷலுக்காக அவரது சங்கீத குரல்....அஞ்சு வயதுல மேடையேறி கீர்த்தனை பாடினதுக்காக தியாகராஜர் உருவம் பதித்த மெடல் கிடைச்சது. அது முதல் கர்நாடகா இசையில் தடம் பதிக்க துவங்கினேன். என் பெற்றோர் வெங்கடேசன் - உமா மற்றும் என் குரு உமாசங்கர் அளித்த உற்சாகமே சிறந்த பாடகியாக வளர செய்துள்ளது. தற்போது 10 ம்வகுப்பு படித்து வருகிறேன்.
இதற்கிடையே சின்னத்திரை பாடல் நிகழ்ச்சியில் தடம் பதித்து வருகிறேன். இந்நிகழ்ச்சியில் 'மின்சார கண்ணா...' 'ஐல... ஐல... ஆ' பாடலை சிறப்பாக பாடியதற்காக நடுவர்கள் எழுந்து நின்று பாராட்டியதோடு, பன்முக திறன் படைத்த பாடகி என உற்சாகம் அளித்தனர்.
கடந்த 2014 முதல் பல்வேறு மேடைகள், சபாக்களில் கர்நாடகா மற்றும் திரைப்பட பாடல்களை பாடி வருகிறேன். டில்லி தமிழ் சங்கத்தில் 2018ல் நடந்த கர்நாடகா இசை போட்டியில் 'சங்கீத் மணி' தேசிய விருதும், குழந்தைகளுக்கு வழங்கும் 'பால்ஸ்ரீ' விருது, 'கர்நாடகா இசை பாடகி' என்பது போன்று 10 விருதுகள் வரை பெற்றுள்ளேன்.
வெற்றி என்பது ஒருத்தரை மட்டும் தனித்து காட்டும் சாதாரண விஷயம். தோல்வியால் துவண்டதில்லை. வெற்றியோ, தோல்வியோ செய்யும் வேலையில் நேர்த்தி அவசியம் என்பதை உணர்ந்துள்ளேன். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தீவிர இசை பக்தை. அவரது கூற்றை கடைபிடித்தே கர்நாடக இசை உலகில் சாதனை எனும் வெற்றி படிகளில் அடியெடுத்து வைத்து வருகிறேன். கடவுள் எனக்கு அருளிய குரல் வளம், கேட்குறதை அப்படியே கிரகிச்சு மனசுல ஏற்றிக்கொள்ளும் ஞானமுமே நான் சங்கீத உலகில் உச்சம் தொடுவேன் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.
என் ரோல்மாடல் பாடகி சித்ரா தான். அவர்களது உயரத்தை தொட அவர்கள் மேற்கொண்ட முயற்சி, உழைப்பை நன்கு தெரிந்து அதன்படி பின்பற்றுவதே அவசியம் என்ற குறிக்கோளுடன் இசை பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். இக்குறுகிய காலத்தில் 3 திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளேன் என்றார்.இவரை பாராட்ட ... ayshubarbie@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE