மயில் தோகை பெண்ணாகி நின்றதோ...ஒளி தீபங்கள் கண்களாகி போனதோ...கன்னம் சிவக்கும் அழகால் இளசுகள் நெஞ்சம் பிளக்கும் கவர்ச்சி கத்தி. உதட்டோர சிரிப்பை பார்த்தாலே தடுமாறும் நம் புத்தி.
உன் கூந்தல் காட்டில் குடியேறிய பூக்களும் புன்னகை பூக்கும். நர்த்தனமாடும் நடையசைவில் அந்த நாணலும் தோற்குமே...யாரடி நீ மோகினி...என் ஜன்னலோர தென்றல் நீ என ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் 'பிக் பாஸில்' ஜமாய்த்த நடிகை ஜனனி அய்யர் மனம் திறந்த நிமிடங்கள்...
* 'பிக் பாஸ்' சில் கற்றுக் கொண்டது ?நல்லா வீட்டு வேலைகள் செய்ய தெரிஞ்சுகிட்டேன், அப்புறம் உணவுகளை 'வேஸ்ட்' பண்ணக் கூடாதுன்னு புரிஞ்சது. இதைவிட முக்கியமா அப்பா, அம்மா பாசம்ன்னா என்னான்னு முழுசா உணர்ந்தேன்.
* கமலிடம் இருந்து பாராட்டுக்கள்?நான் கமல் பைத்தியம்; அந்த அளவுக்கு அவர் நடிப்பு, பேச்சு, டான்ஸ் பிடிக்கும். 'பிக் பாஸ்' வீட்டில் கமலிடம் திட்டு வாங்காமல் இருக்கணும்னு ரொம்ப கவனமா நடந்துகிட்டேன். அதே மாதிரி கடைசி வரை திட்டு வாங்கலை. வீட்டில் இருந்து வெளியே போகும் போது 'உங்க கேரக்டர் உங்களை பெரிய இடத்தில் கொண்டு போயி சேர்க்கும்'னு சொல்லி அனுப்பி வைச்சாரு.
* பிக் பாஸ் வீட்டில் நண்பர்கள்?ஏற்கனவே மகத், ரம்யா எனக்கு நண்பர்கள் தான். சகஜமா பேசி பழகியதால் மும்தாஜ், ரித்விகா என எல்லோரும் எனக்கு 'பிரண்ட்ஸ்' ஆயிட்டாங்க.
* 'பிக் பாஸ் சீசன் 3' வாய்ப்பு வந்தால் ?கலந்துக்க மாட்டேன், அந்த வீட்டில் நான் 105 நாள் இருந்ததே பெரிய விஷயம். அன்றைய நாட்கள் எனக்கு நிறைய அனுபவங்களை கொடுத்திருக்கு. அதுவே போதும்.
* இயக்குனர் பாலாவின் அவன் - இவன் ? முதல் படமே பாலா படம்... முதலில் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனால், அவர் ஒவ்வொரு காட்சிகளையும் பொறுமையாக சொல்லி கொடுக்குறதை பார்த்து என்னை அறியாமலே எனக்குள் தன்னம்பிக்கை வந்தது. அவர் படத்தில் அறிமுகமானதை பெருமையாக நினைக்கிறேன்.
* நடித்ததில் சவாலான காட்சிகள்?சினிமாவுக்கு நான் புதுசுங்குறதால முதல் 2 நாள் நான் நடிக்கும் அத்தனை காட்சிகளும் எனக்கு சவாலாக தான் இருந்தது. பாலா போல ஹீரோ விஷாலும் ஒத்துழைப்பு கொடுத்து பக்கபலமாக இருந்ததால் நல்லபடியாக நடித்து முடித்துவிட்டேன்.
* நடிக்க விரும்பும் கேரக்டர்கள் ? ஊர்வசி மாதிரி காமெடி கேரக்டர்களில் நடிக்க ஆசையாக இருக்கு. வரலாற்று கதைக் களங்களில் நடிக்கவும் விரும்புகிறேன்.
* சினிமா உலகம் பாதுகாப்பு? யாரோ ஒருவர் 'மீ டு' புகார் சொன்னதுக்கு பிறகு தானே எல்லோரும் சொல்லவராங்க. அதுவும் சினிமா என்பதால் அதை எளிதில் செய்தியாக்கி பரப்பி விடுறாங்க. இந்த மாதிரி விஷயங்களை நல்லதுக்காக பயன்படுத்தினால் நல்லா இருக்கும்.
* உங்கள் ரசிகர்கள் பட்டாளம் ?எனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்குறாங்களான்று ஆச்சர்யமாக இருந்தது. பேஸ்புக்கில் ஜனனி ஆர்மின்னு பேஜ் கிரியேட் பண்ணி செம பேமஸ் ஆக்கிவிட்டுடாங்க. என்னோட பாசக்கார ரசிகர்களுக்கான நல்ல படங்களை கொடுப்பேன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE