சக்திகாந்த தாஸ் வருகை

Added : டிச 17, 2018
Advertisement

ஐந்து மாநில தேர்தல் முடிந்த சமயத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததால், அவ்வளவு பெரிய விஷயமாக அலசப்படாமல் போனது. ஆனால், ரிசர்வ் வங்கிக்கும், மத்திய நிதியமைச்சகத்திற்கும் கருத்து மோதல் இருந்த பின்னணியில், தன் பதவிக்காலம் முடிய ஆறு மாதங்கள் இருக்கும் போது, உர்ஜித் படேல் ராஜினாமா செய்திருக்கிறார்.அவர், சொந்த அலுவல் காரணமாக ராஜினாமா செய்ததாகக் கூறினாலும், ஐந்து மாநில தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காலத்தில் வந்த அவரது அறிவிப்பு, உலக பொருளாதார நிபுணர்களால் அலசப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியும், நிதியமைச்சர் ஜெட்லியும், அவரது சிறந்த பணியை பாராட்டி உள்ளனர்.பொதுவாக, மிகப்பெரிய நிரந்தரமான அமைப்புகளில், அரசு தலையீடு என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் வாதம், இதிலும் பேசப்படலாம். ஆனால், கரன்சியை செல்லாததாக அறிவித்த பின்புலத்திலும், அதற்கேற்ப புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்த வேகத்திலும் இருந்தவர், சக்திகாந்த தாஸ்.பொருளாதாரத்துறை செயலராக இருந்த இவர், ஓய்வு பெற்ற பின் வகித்த பதவிகள் பல, முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ்நாடு கேடரைச் சேர்ந்தவர் என்பதுடன், இயல்பாக தமிழ் பேசும் இவர், ஒடிசாவைச் சேர்ந்தவர். தற்போது, ரிசர்வ் வங்கியின், 25வது கவர்னர்.அதேசமயம், ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் போன்ற பொருளாதார நிபுணர் ரகத்தை சேர்ந்தவர் அல்ல என்றாலும், சிறந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்பதுடன், பொருளாதார கட்டமைப்புத் துறைகளில், அதிக அனுபவம் பெற்றவர். எல்லாவற்றையும் விட, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையை கையாளும் பொருளாதார விவகாரத் துறையை கவனித்தவர்.இதற்கு முன், சிறந்த கவர்னர் என்ற முறையில் பணியாற்றிய சுப்பாராவ் கூட, ஐ.ஏ.ஏஸ்., அதிகாரி தான். அன்றைய நிதியமைச்சர் சிதம்பரத்துடன், பல தடவை கருத்து மாற்றங்கள் கொண்டவர் என்பதை, அவர் நாசுக்காக ஒருமுறை, 'ரிசர்வ் வங்கி செயல்களில் நான் ஆதங்கம் அடைந்திருந்தாலும், ரிசர்வ் வங்கி தன் தனித்தன்மையை காக்கிறது என்று, என்றாவது ஒரு நாள் சிதம்பரம் கூறலாம்' என்று தெரிவித்ததாக, தகவல்கள் வெளியானது உண்டு.ரிசர்வ் வங்கியின் தனித்துவத்தை காக்க முற்படுவதுடன், சில புதிய சூழ்நிலைகளையும் சந்திக்க வேண்டி வருகிறது. வங்கிகள், வாராக்கடன் விஷயத்தில், சில பொதுத்துறை வங்கிகளின் உயர்மட்ட குழப்பங்களை, நேரடியாக கோப்புகளை பார்த்து சீரமைக்க முடியாத நிலை உள்ளது. அதனால், வாராக்கடன் சுமை, நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில் இட்டுச் சென்றது.வாராக்கடனை வசூல் செய்யும் நெருக்கடி; அதில் நடந்த ஊழல் வெளியாகும் போது, பொதுத்துறை வங்கிகள் சந்திக்கும் நிலை; நிதித்துறை அல்லாத வங்கிகள் அமைப்புக்கு ஏற்படும் நெருக்கடியைத் தவிர்க்க தேவைப்படும் பணப்புழக்கம் இல்லாத சிரமம்; வங்கியின் கடன் வட்டி விகித முறைகளில் மாற்றம் செய்யாததால் உள்ள கருத்து வேறுபாடுகள்; பணவீக்க அளவு கட்டுக்குள் இருந்தாலும், தொழில் துறை வளர்ச்சித் தேக்கம் என்ற பன்முக பாதிப்புகள் ஏற்பட்டன.இன்று, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பதாக எழுந்த கருத்துகளுக்கு முடிவு கிடைக்க, சக்திகாந்த தாஸ், தன் பேட்டியில், 'பல்வேறுசம்பந்தப்பட்ட துறைகளுடன் பேசி, முடிவு காணப்படும்' என, கூறியுள்ளார்.அதன் முதல் படியாக, வங்கிகள் மற்றும் நிதி ஆலோசனைக் கமிட்டி ஆகியவற்றுடன் பேசி, கருத்துகளை சேகரிக்க துவங்கி விட்டார். அத்துடன், மத்திய அரசு சந்திக்கும் நிதி குறித்த சிக்கல்களை கையாள வேண்டிய போது, எப்படி அணுகுவது என்பதில், இவரது அணுகுமுறை உன்னிப்பாக கவனிக்கப்படும். ரிசர்வ் வங்கி அமைப்பில் உள்ள துணை கவர்னர்கள், மற்ற நிர்வாக கட்டமைப்புகள் பலம் வாய்ந்தவை. ஆகவே, அதன் தனித்தன்மை பேணப்படும் என, எதிர்பார்க்கலாம்.அதே சமயம், உர்ஜித் படேல் ராஜினாமா செய்த, 24 மணி நேரத்தில், எப்படி சக்திகாந்த தாஸ் பதவியேற்றார்; அவரது பின்னணியில்தவறுகள் உண்டா என, அலச வேண்டியதில்லை. ஏனெனில், 'முடங்கிய அரசு' என்ற பெயரைச் சுமப்பது தொடர்கதையாகாமல், சில முடிவுகளை மோடி அரசு எடுக்கும் போது, அதன் பலன்களை ஆய்ந்து, அதற்குப்பின்கருத்து சொல்லும் நடைமுறை வந்தால், சிறப்பாக அமையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X