சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் நடந்த 5 மேயர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ., வேட்பாளர்கள் அனைத்திலும் வெற்றி பெற்றனர்.
வட இந்தியாவில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனால் பா.ஜ., தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் சோர்வடைந்திருந்தனர்.
ஹரியானா மேயர் தேர்தல்:
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் 5 மாநகரங்களுக்கு மேயர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்வர் மனோகர் லால் கட்டார் பா.ஜ., வேட்பாளர்களுக்காக தீவிரமாக இறுதி கட்ட பிரசாரம் செய்தார்.
இதன் பலனாக யமுனா நகரில் போட்டியிட்ட பா.ஜ.,வேட்பாளர் மதன்சிங் பிற வேட்பாளர்களை விட 40 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ரானிபட் நகரில் பா.ஜ., வேட்பாளர் அவ்நீத் 74,900 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கர்னால், ஹிசார்,ரோஹ்தக் நகரில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் நேரடியாக கட்சியின் சின்னத்தை பயன்படுத்த வில்லை. அதே நேரத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு மறைமுக ஆதரவை தந்தது. காங்கிரசின் இந்த நடவடிக்கையை முறியடித்து பா.ஜ.,வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பாஜ.,வின் இந்த வெற்றி மாநில பா.ஜ.,தலைவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE