தலை சுற்றும் சிலை விவகாரங்கள்!| Dinamalar

தலை சுற்றும் சிலை விவகாரங்கள்!'

Added : டிச 22, 2018 | கருத்துகள் (13) | |
இந்தியாவின் இரும்பு மனிதர்' படேலுக்கு, குஜராத்தில், 182 மீட்டர் உயர சிலை; தமிழக கோவில்களில் திருடி, கடத்தப்பட்ட, சுவாமி திருவுருவ சிலைகள் மீட்பு; மறைந்த தலைவர்களுக்கு சென்னையில் சிலை திறப்பு; பிரமாண்ட, விஸ்வரூப கோதண்டராமர் சிலை, தேசிய நெடுஞ்சாலையில் திணறுதல் என்பன போன்ற, சிலைகள் விவகாரத்தால், நாட்டு மக்களுக்கு தலை சுற்றுகிறது.சர்தார் வல்லபபாய் படேலுக்கு, 3,000 கோடி
  தலை சுற்றும் சிலை விவகாரங்கள்!'


இந்தியாவின் இரும்பு மனிதர்' படேலுக்கு, குஜராத்தில், 182 மீட்டர் உயர சிலை; தமிழக கோவில்களில் திருடி, கடத்தப்பட்ட, சுவாமி திருவுருவ சிலைகள் மீட்பு; மறைந்த தலைவர்களுக்கு சென்னையில் சிலை திறப்பு; பிரமாண்ட, விஸ்வரூப கோதண்டராமர் சிலை, தேசிய நெடுஞ்சாலையில் திணறுதல் என்பன போன்ற, சிலைகள் விவகாரத்தால், நாட்டு மக்களுக்கு தலை சுற்றுகிறது.

சர்தார் வல்லபபாய் படேலுக்கு, 3,000 கோடி ரூபாயில் சிலை அமைத்து, நிறைய விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.ஏனெனில், படேல் மிக எளிமையாக வாழ்ந்தவர்; நேர்மைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். தன் வாரிசுகளை, அரசியல் பக்கமே வர விடாமல், பார்த்துக் கொண்டவர்; வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைக்காதவர்.தேசப்பிதா மஹாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்களின் வரிசையில், சர்தார் வல்லபபாய் படேல், முக்கியத்துவம் பெற்ற தலைவர் என்பதில், மாற்றுக் கருத்தே இல்லை. நாடு சுதந்திரம் அடைந்த போது, சிதறிக் கிடந்த, யூனியன் பிரதேசங்களை, தன் சாதுர்யத்தால், ஒருங்கிணைத்த ஒப்பற்ற தலைவர்.அவருக்கு சாதாரண, சிலை அமைத்தால் தவறில்லை. ஆனால், 3,000 கோடி ரூபாயில், 182 மீட்டர் உயரத்தில், தேவையில்லை என்பது தான், சாமானியர்களின் எண்ணம்.அது மட்டுமின்றி, அரசு மற்றும் கட்சி விழாக்களை, பிரமாண்டமாக நடத்தினால் தான், மக்களிடம் போய் சேரும் என, அரசுகளும், கட்சிகளும், குஜராத் படேல் சிலை விவகாரத்தை, பின்பற்ற துவங்கி விட்டன; எளிமை எதிலும் இல்லாமல் போய்விட்டது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததால், சிறை தண்டனை வழங்கப்பட்ட, ஊழல் குற்றவாளி ஒருவருக்கு, தமிழகத்தில் நினைவு மண்டபம் கட்டப்படுகிறது; அதற்காக, பல நுாறு கோடி ரூபாய், அரசு பணம் வீணடிக்கப்படுகிறது.'கஜா' புயலால், மக்கள் வீடிழந்து, வாழ்விழந்து, வீதிகளில் தவிக்கும் வேளையில், கருணாநிதிக்கு, ஊரைக் கூட்டி, சிலை திறப்பு விழா நடத்தியிருக்கிறார், தி.மு.க., தலைவர், ஸ்டாலின்.பீஹார் மாநில முதல்வர், நிதிஷ்குமார், அம்மாநிலத்தின், ராஜ்கீர் என்ற இடத்தில், கோரா கடோரா ஏரியின் மையப் பகுதியில், 7௦ அடி உயர, புத்தர் சிலையைத் திறந்து வைத்துள்ளார்.

அண்டை மாநிலமான, ஆந்திராவில், மறைந்த பிரபல நடிகரும், முன்னாள் முதல்வருமான, என்.டி.ஆருக்கு, பிரமாண்ட சிலை அமைத்து, அந்த இடத்தை சுற்றுலா தலமாக்க, 350 கோடி ரூபாயில் திட்டம் தயாராகி வருகிறது.


மஹாராஷ்டிராவில், வீர சிவாஜிக்கு, பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 192 மீட்டர் உயர சிலை அமைக்கும் திட்டம், விறுவிறுவென நடந்து வருகிறது. அதை, 210 மீட்டராக்க, அந்த மாநில, பா.ஜ., அரசு முயற்சி செய்கிறது.சீனாவின், 208 மீட்டர் உயர புத்தர் சிலையை விட, மும்பையில், மாவீரன் சிவாஜி சிலையின் உயரம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்கே, இந்த முயற்சி. இதற்காக, 3,600 கோடி ரூபாய் செலவு செய்ய, மஹாராஷ்டிரா அரசு தயாராக உள்ளது. யாருடைய பணம் இது... மக்களின் வரிப்பணம் என்பதை மறந்து விட்டனர்!அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள, சுதந்திர தேவி சிலையை விட, சிவாஜி சிலையை உயரமாக எழுப்ப உள்ளனர்; சுற்றுச்சுழல் ஆர்வலர்களும், மீனவர்களும், இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.உத்தர பிரதேசத்தில், பா.ஜ., முதல்வர், யோகி ஆதித்யநாத், அவர் பங்குக்கு, ராமருக்கு, பிரமாண்ட சிலை அமைக்க திட்டம் போடுகிறார். அவர் நினைத்தால், தங்கத்தில் கூட, ராம பிரானுக்கு சிலை வைப்பார். ஆனால், அவசியம் தானா?நம் தமிழகத்தின் அண்டை மாநிலங்கள், நமக்கு தேவையான தண்ணீரை தர மறுத்து, நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றன. ஆந்திராவில், பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டப்படுகிறது. இதனால், தமிழக பகுதியில், பாலாறு வறண்டு கிடக்கிறது.இதில், வேடிக்கை என்னவென்றால், பொது மக்களுக்கு பயன் தரும் நீர் மின் மற்றும் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில், மாநில அரசுகளின் தலைவர்கள், தங்களுக்குள் ஒற்றுமையின்றி பிரிந்து நிற்கின்றனர். ஆனால், மக்களுக்கு எந்த வகையிலும் பயன் தராத, கோடிகளை முடக்கி அமைக்கப்படும், சிலை திறப்பு விழா போன்றவற்றில், தலைவர்கள் ஒரே மேடையில், ஒற்றுமையாக கூடுகின்றனர்.

இன்று... ஸ்டாலினின் தந்தை, கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு வந்து, 'சிறப்பித்துள்ளார்!' நாளை அவரின் மாமனார், என்.டி.ராமராவின் சிலை திறப்பு விழாவில், ஸ்டாலின் பங்கேற்பார்.


ஆந்திராவின், கிருஷ்ணா நதி நீர் விவகாரம், பாலாற்றில் தடுப்பணை போன்ற, தமிழக மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது, இந்த தலைவர்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டியது தானே...நீர் மின் திட்டங்கள், புதிய அணை கட்ட முயற்சி, சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம், தமிழக காய்கறிகளுக்கு எதிர்ப்பு என, தமிழகத்துடன், பல விவகாரங்களில், 'மல்லுக்கு' நிற்கும், கேரளாவின் முதல்வர், விஜயனும், சென்னை வந்து, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளார்.ஆனால், கேரளாவுடன் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்னை என்றால், ஸ்டாலினும், விஜயனும் பேசி, சுமுக தீர்வு காண்பரா... ஒரு காலும் செய்ய மாட்டார்கள்; அப்பாவி மக்களை துாண்டி விட்டு, குளிர்காய்வர். அப்போதும், அவரவர் சொந்த தொழில்கள், அந்தந்த மாநிலங்களில் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்வர்.சிலை திறப்பு விவகாரத்தில், இன்னொரு விஷயமும், கவனிக்க வேண்டி உள்ளது... அநேகமாக பல சிலைகள், நீராதாரங்களிலும், அதன் அருகிலும் அமைக்கப்பட்டுள்ளன; அமைக்கப்படுகின்றன.கங்கையையும், யமுனையையும், சுத்தப்படுத்த கோடிகளை செலவு செய்யும் மத்திய அரசு, அணைகளும், கடல்களும், மலைகளும், சிலைகளாலும், சிலையை பார்க்க வரும் மக்களாலும், மாசுபடுவதை எப்படி அனுமதிக்கிறது...யானைகளின் வழித்தடங்களை அழித்து, சொகுசு ஓட்டல்களை உருவாக்கி விட்டு, ஊருக்குள் யானை புகுந்து விட்டது என்று புலம்புகிறோம். அது போலவே, இப்போது உயரமான சிலைகளை உருவாக்கி, பறவைகளின் வான் வழித் தடங்களையும், அழித்து வருகிறோம்.ஏற்கனவே, மிக உயரமான கட்டடங்களில் மோதியும், கதிர் வீச்சு அபாயம் மிக்க, மொபைல் போன் கோபுரங்களாலும், பறவையினங்கள் அழிந்து வருகின்றன. இதில், புதிதாக, பிரமாண்ட சிலைகளும், வானளாவிய பிரச்னையை, பறவைகளுக்கு ஏற்படுத்துகின்றன.பெரிய அளவிலான சிலைகள் தான், விவாதத்திற்கு ஆளாகியுள்ளன என்றால், கோவில்களில் இருந்த சிறிய உலோக சிலைகள், கற்சிலைகள் கடத்தி, விற்கப்பட்ட விவகாரமும், தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது.

அந்த சிலைகளை கைப்பற்றி, கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும், போலீஸ் அதிகாரி, பொன் மாணிக்கவேல் மீது, போலீசாருக்கும் காட்டம், அரசுக்கும்

அதிருப்தி.இது தான் என்றில்லை... தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் வெட்டி எடுக்கப்பட்ட, 3 லட்சம் கிலோ எடையுள்ள ஒரே கல்லில், கோதண்டராமர் சிலை செய்ய, கர்நாடகாவுக்கு, சாலை வழியே எடுத்துச் செல்லப்படுகிறது.மொத்தம், 200 டயர்களை கொண்ட, இழுவை வண்டியில் வைத்து, அந்த சிலை, அங்குலம், அங்குலமாக, நெடுஞ்சாலையில், கர்நாடகா நோக்கி நகர்த்தப்படுகிறது. கர்நாடகா சென்றடைய, அந்த சிலைக்கு, இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என, கூறப்படுகிறது.அந்த பிரமாண்ட கற்சிலையின் பயணத்தால், ஏராளமான, சாலையோர கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன; சிறு பாலங்கள் தகர்ந்துள்ளன. இன்னும், சில, 100, கி.மீ., பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதற்குள் எத்தனை பாதிப்புகள் ஏற்படுமோ தெரியவில்லை.பெரிய சிலை செய்தால் தான், கோதண்டராமர் அனுக்கிரகம், பக்தர்களுக்கு கிடைக்குமா... என்ன சொல்வது என்றே தெரியவில்லை!'தனக்கு மிஞ்சி தான், தானமும், தர்மமும்' என்பர். முதலில், நம் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு, உயிர் வாழும் லட்சக்கணக்கான மக்கள் வாழும் நம் நாட்டில், சத்துணவு குறைபாட்டால், பச்சிளம் குழந்தைகள் பலர், பலியாகும் அவலம் தினமும் அரங்கேறுகிறது.இந்நிலையில், கோடிகள் செலவு செய்து, சிலை திறப்பு என்பதெல்லாம், தேவையில்லாதது.சமீபத்தில், ஒரு கார் கம்பெனி, தன் கார்களின் விற்பனை மந்தமாகி விட்டதற்கான காரணத்தைக் கூறியது. அதாவது, 'மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது; தேவைக்கு அதிகமாக வருவாய் இல்லாததால், வாங்கும் திறன் குறைந்துவிட்டது' என்றது.இந்த உதாரணம், நாட்டுக்கும் பொருந்தும். நம் நாடு, எல்லா வகையிலும் ஓரளவாவது தன்னிறைவு பெற்று, உபரி வருமானத்துடன் விளங்குகிறது. அந்த பணத்தை, நாடும், மக்களும், பயன் பெறும் வகையில், ஆக்கபூர்வமாக முதலீடு செய்ய வேண்டுமே தவிர, எக்காலத்திலும், இது போன்ற பிரமாண்ட சிலைகள் அவசியமற்றது.'திருமண விழாக்களை, அதிக பொருட்செலவில் ஆடம்பரமாக செய்யக்கூடாது' என, தனி மனிதருக்கு அறிவுறுத்தும் அரசுகள், மக்களின் வரிப்பணத்தை, பொது காரியங்களுக்கு செலவிடும் போது,சுய கட்டுப்பாட்டுடன், நேர்மையாக நடந்துகொள்ள வேண்டாமா?இ - மெயில்: ikshu1000@yahoo.co.in

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X