சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

அன்பு உங்களுக்கு பலமா? பாதிப்பா?

Added : டிச 23, 2018 | கருத்துகள் (1)
Share
Advertisement
அன்பு உங்களுக்கு பலமா? பாதிப்பா?

மனிதர்கள் தாங்கள் அதீத அன்புவைக்கும் உறவுகள்மீது ஒருகட்டத்தில் கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்வதைப் பார்க்கிறோம். எந்தவித நிபந்தனையுமற்ற தூய அன்பு எத்தகையது என்பதை விளக்குவதற்காக ஒரு வரலாற்றுக் கதையை சொல்லும் சத்குரு, திருமண பந்தத்தில் மங்கல நாண் ஏன் கட்டப்படுகிறது என்பதற்கான அறிவியல் குறித்தும் கூறுகிறார்.
கேள்வியாளர் : அன்பு எனது வாழ்க்கையை நடத்திச் செல்லும் உந்து சக்தியாகத் தோன்றுகிறது. ஒருவருடன் ஒருமித்திருப்பது மற்றும் ஒருவரை நிபந்தனையற்று நேசிப்பது போன்றவை குறித்து எனக்கு குழப்பமாக உள்ளது.
சத்குரு : உண்மையாகவே அது நிபந்தனையற்ற அன்புதானா?
கேள்வியாளர்: எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அப்படி இல்லாமலும் இருக்கலாம்.
சத்குரு : எத்தனையோ நிபந்தனைகள் இருக்கின்றன, அப்படித்தானே? அந்த இன்னொரு நபருக்கு நீங்கள் விதித்திருக்கும் எல்லா நிபந்தனைகளும், அவரைக் குறித்த உங்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் நாளை காலையில் முறிந்துபோனால், அதே அன்பு கோபமாகவும், பிறகு வெறுப்பாகவும் மாறிவிடும். ஆகவே, உங்கள் அன்பு நீடித்திருக்க வேண்டுமென்றால், அந்த இன்னொரு நபர் நீங்கள் எதிர்பார்ப்பதை மட்டுமே செய்யும்படி வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், இந்த அற்புதமான அன்பு மிகவும் அருவெறுப்பூட்டும் கோபமாக மாறிவிடும்.
உறவுகளைச் சிறுமைப்படுத்துவதற்கு நான் முயற்சிக்கவில்லை. ஆனால் உறவில் உள்ள எல்லைகளைப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் எல்லை கொண்டதாலேயே உறவுகள் அழகற்றது என்றும் பொருள் கொள்ளக்கூடாது. உதாரணமாக ஒரு மலர் இருக்கிறது. அது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் அதையே நான் கசக்கிவிட்டால், அது குப்பையாகிவிடும். பிறகு இரண்டு நாட்களில் உரமாகிவிடும். ஒரே ஒரு கணத்தில் என்னால் இந்த மலரை அழித்துவிட முடியும். ஆனால் மலராக இருப்பதின் இயல்பான அழகும், முக்கியத்துவமும் அந்த ஒரு விஷயத்தாலேயே குறைந்து விடுமா? அதேபோல உங்கள் அன்பு என்பதும் வலுவற்றதுதான். அதைப் பற்றிய அழகான கற்பனைகளை நம்ப வேண்டாம். அதே நேரத்தில் அதனுடன் இணைந்துள்ள அழகையும் நான் மறுக்கவில்லை.
இருப்பினும், வலுவற்ற அந்த பரிமாணத்தை உங்கள் வாழ்க்கையின் அடித்தளமாக நீங்கள் அமைக்கும்போது, இயல்பாகவே நீங்கள் எப்போதும் பதட்டத்துடன் இருப்பீர்கள். ஏனெனில் வலுவற்ற ஒரு மலரின் மேல் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். ஒருவேளை மலர் அழகாக இருக்கிறது என்பதற்காக மண்ணின் மீது வீடு கட்டாமல் மலரின் மீது வீடு கட்டினால், நீங்கள் எப்போதும் பயத்திலேயே வாழ்வீர்கள். மண்ணின் மீது வீடு கட்டிக்கொண்டு, மலரை இரசித்தும், நுகர்ந்தும், தொட்டும் உணர்வீர்கள் என்றால், அது அழகாக இருக்கும். ஆனால் உங்கள் வீட்டை, மலர் மீது கட்டிவிட்டதால், நீங்கள் எப்போதும் பயத்தில் இருக்கிறீர்கள். நான் இதை முன்னிறுத்தித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். அன்பை மறுப்பதற்கு நான் முயற்சிக்கவில்லை.
பெரும்பாலான மக்களுக்கு அன்பு என்பது அவர்களுக்கான தேவைகளில் ஒன்றாகவே இருக்கிறது. அன்பு இல்லாமல் அவர்களால் வாழ முடியாது. உடலுக்கு அதற்கான தேவைகள் இருப்பதைப் போலவே, உணர்ச்சிக்கும், அதற்கான தேவைகள் இருக்கின்றன. “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது” என்று கூறுவதற்கும் “ஊன்றுகோல் இல்லாமல் என்னால் வாழமுடியாது” என்பதற்கும் எந்த வித்தியாசமுமில்லை. வைரம் இழைத்த ஒரு ஊன்றுகோல் உங்களிடம் இருந்திருந்தால், மிகவும் எளிதாக நீங்கள் அதன்மீது காதல் வசப்படக்கூடும். பத்து வருடங்களுக்கு இந்த ஊன்றுகோலை நீங்கள் பயன்படுத்திய பிறகு, “இப்போது நீங்கள் சுதந்திரமாக நடக்கலாம்” என்று உங்களுக்கு நான் கூறினால், “இல்லை, என்னால் எப்படி என் ஊன்றுகோலைக் கைவிட முடியும்” என்று கூறுகிறீர்கள் என்றால், அதில் வாழ்க்கைக்கான எந்த புத்திசாலித்தனமும் இல்லை என்றுதான் பொருள்.
அன்பு என்ற பெயரில் நிகழ்வதும் இதைப் போன்றதுதான். அன்பின் பெயரால், உங்களையே நீங்கள் முடமாக்கிக் கொள்கிறீர்கள் மற்றும் உங்களை நீங்களே முழுமையற்றவராக்கிக் கொள்கிறீர்கள். அப்படியென்றால் அன்புக்கென்று எந்த அழகும், வேறு எந்தப் பரிமாணமும் இல்லையா? இருக்கிறது. தன் துணை இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற நிலையில் வாழ்ந்திருந்த பலரும் இங்கே இருந்துள்ளனர். இரண்டு உயிர்கள், ஒரே உயிரைப் போல இருக்கின்ற அந்த நிலை உண்மையில் நிகழ்ந்தால், அது அற்புதமானது.
இராஜஸ்தானின் அரசர் ஒருவருக்கு இப்படி நிகழ்ந்தது. அந்த அரசரின் இளம் மனைவி அவர் மேல் உயிரையே வைத்திருந்தாள். ஆனால் அரசர்களுக்கு எப்போதும் எண்ணற்ற அந்தப்புரப் பெண்களின் துணையும் இருந்த காலம் அது. ஆகவே தன்னிடம் தன் இளம் மனைவி கொண்டிருந்த ஆழமான அன்பை, முட்டாள்தனமானது என்றே எண்ணினார். பல நேரங்களில் அவருக்கு அது வேடிக்கையாக இருந்தாலும், அதை இரசிக்கவும் செய்தார். ஆனால் சில நேரங்களில் அது அளவுக்கு மிஞ்சி இருந்தது. அப்போது சற்றே அவளை விலக்கி மற்றவர்களை நாடிச் சென்றுவிடுவார். இருப்பினும் அந்த இளம் மனைவி அவரிடம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருந்தாள்.
அரசனும் அரசியும் இரண்டு மைனாக்கள் வளர்த்து வந்தனர். முறையாகப் பயிற்றுவித்தால், ஒரு கிளியைக் காட்டிலும் அவை நன்றாகப் பேசும். ஒரு நாள் அந்தப் பறவைகளில் ஒன்று இறந்துவிட்டது. அதனால் மற்றொரு பறவை எதுவும் இரை எடுக்காமல் உட்கார்ந்தே இருந்தது. பறவைக்கு உணவு கொடுக்க எல்லா வழிகளிலும் அரசர் முயன்றார். ஆனால் எதையும் சாப்பிடாமலே அந்தப் பறவை இரண்டு நாளில் உயிரைவிட்டது. இதனால் அரசர் மிகவும் நெகிழ்ந்துவிட்டார். “இது என்ன ஆச்சரியம்! தனது உயிரைப் பெரிதாக மதிப்பதுதான் எந்த ஒரு உயிருக்கும் இயல்பாக இருக்கிறது. ஆனால் இந்தப் பறவை அப்படியே அமர்ந்திருந்து, இறந்தும் போய்விட்டதே!”
இதனை அவர் கூறியபோது, மனைவி கூறினாள், “யாராவது உண்மையிலேயே ஒருவரை நேசித்தால் அவர்களில் ஒருவர் இறந்தால், மற்றவரும் தன் உயிரைத் துறந்துவிடுவது இயல்பானதுதான். ஏனென்றால், அதன்பிறகு வாழ்வதில் அவர்களுக்கு எந்த அர்த்தமும் இருக்காது.”
அரசர் நகைச்சுவையாகக் கேட்டார், “உனக்கும் அப்படித்தானா? அந்த அளவுக்கு என்னை நேசிக்கிறாயா?”

“ஆமாம், எனக்கு அப்படித்தான்” என்றாள். அரசருக்கு இது மிகவும் வேடிக்கையாகவே இருந்தது.
ஒருநாள், அரசர் தன் நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்றார். அப்போது, அவர் வளர்த்த பறவைகள் இறந்துபோனது மற்றும் தனக்கும் அதுவே நடக்கும் என்று அவரது மனைவி சொன்னது அவருக்கு நினைவில் வந்தது. தன் மனைவி உண்மையாகத்தான் கூறினாரா என்று பரிசோதிக்க விரும்பினார். ஆகவே அவர் தனது உடைகளைக் களைந்து, அவற்றில் இரத்தக் கறை ஏற்படுத்தி காவலாளியிடம் கொடுத்து அரண்மனையில், “அரசர் புலியால் கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்” என்று அறிவிக்குமாறு செய்தார். அரசி, தன் கண்களில் துளிக் கண்ணீரும் இல்லாமல், பெரும் மரியாதையுடன் அந்த உடைகளைப் பெற்றுக்கொண்டாள். அவள் பிறகு விறகுகளைப் பரப்பி, அதன் மேற்பரப்பில் அரசரின் இரத்தக் கறைபடிந்த உடைகளை விரித்து, அதன்மீது தானே சென்று படுத்துக் கொண்டாள். படுத்தவுடனேயே உயிரையும் விட்டாள். பார்த்துக் கொண்டிருந்த மக்களால் இதை நம்பவே முடியவில்லை. அரசி இறந்து போய்விட்டதால், வேறு எதுவும் செய்வதற்கில்லை. எனவே அவர்கள் அவளை எரியூட்டினர். இந்தச் செய்தி அரசரை எட்டியதும், அவர் உடைந்துவிட்டார். ஏதோ வேடிக்கையாகத்தான் அவர் அவளிடம் விளையாட விரும்பினார். ஆனால் அவள் உண்மையாகவே இறந்து போனாள். தற்கொலை செய்துகொள்ளாமல், இருந்த நிலையிலேயே உடல் துறந்தாள்.
மக்கள் இதைப்போன்று அன்புடன் வாழ்ந்துள்ளனர். ஏதோ ஒரு புள்ளியில் அந்த இரண்டு உயிர்களும் பின்னிப் பிணைந்துவிட்டன. இந்தியாவில், பாரம்பரியமாக திருமணங்கள் எப்போதும் இந்த விதமாகவே நிகழ்த்தப்பட்டன. அதற்குப் பின்னால் ஒரு முழுமையான விஞ்ஞானம் இருந்தது. ஆனால் இன்றைக்கு அது ஒரு வேடிக்கையாகிவிட்டது. இரண்டு பேருக்கு திருமணம் நிச்சயிக்கப்படும்பொழுது, அவர்கள் உடல் தன்மைகள் மற்றும் இரு குடும்ப சூழ்நிலைகளில் மட்டும் பொருத்தம் பார்க்கப்படவில்லை. இன்னும் ஆழமாக சக்தி சூழ்நிலையிலும் பொருத்தம் பார்க்கப்பட்டது. பெரும்பாலான நேரங்களில் அந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கூட இருக்கமாட்டார்கள். அது ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஏனென்றால் இருவரைக்காட்டிலும் மேலான அறிதல் உள்ள ஒருவரால் பொருத்தம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் திருமணம் செய்துகொள்பவர்களே தங்களது விருப்பத்திற்கேற்ப துணையைத் தேர்வு செய்தால், கண்ணழகு, மூக்கின் அழகு இதுபோன்றவற்றைப் பொறுத்தே தேர்வு செய்வார்கள். திருமணம் முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த அம்சங்கள் அர்த்தமற்றுப் போகும். உங்கள் மனைவிக்கு அற்புதமான கண்கள் இருக்கின்றன, ஆனால் எந்நேரமும் உங்களை அவள் முறைத்துக் கொண்டிருக்கிறாள் எனில், பிறகு அந்த திருமணத்தில் என்ன பொருள் இருக்கப் போகிறது?
திருமண அறிவியலை பயன்படுத்தியவர்கள் உருவாக்கியதுதான் மங்கல சூத்ரா அல்லது மங்கல நாண். யோக அறிவியலிலும் இதுபோன்று உருவாக்கப்படுகிறது. மங்கல சூத்திரம் என்றால் மங்கலக் கயிறு என்பது பொருள். ஒரு மங்கலக் கயிற்றைத் தயாரிப்பதில் பெரும் அறிவியல் அடங்கியுள்ளது. தூய பஞ்சைக் கொண்டு சில நூலிழைகளைத் தயாரித்து, அந்த நூலில் குங்குமம் மற்றும் மஞ்சளைத் தடவிய பிறகு, அது ஒரு குறிப்பிட்டவிதமாக சக்தியூட்டப்படுகிறது. சக்தியூட்டப்பட்டு, ஒருமுறை அணியப்பட்டுவிட்டால், வாழ்க்கை முழுவதும் மற்றும் அதைக் கடந்தும் அவர்களது உறவு நீடிக்கிறது. பல பிறவிகளுக்கும் அதே தம்பதிகள் இணைந்திருந்ததற்கான பரிசோதனை முறைகள் இருந்துள்ளன. உடல் நிலையிலும், உணர்ச்சி நிலையிலும் மட்டும் இல்லாமல், வேறு ஒரு நிலையிலும் அவர்களை இணைத்துக் கட்டும்படியான வழிமுறைகள் பின்பற்றப்பட்ட காரணத்தால், அந்த இருவரும் பிறவிகள் தோறும் இணைந்திருப்பதை விழிப்புணர்வுடன் தேர்வு செய்தனர்.
உடல், மனம் மற்றும் உணர்ச்சியின் நிலையில் நீங்கள் நிகழ்த்தும் எதுவும் மரணத்தோடு முற்றுப் பெறுகிறது. ஆனால் சக்தியின் நிலையில் நீங்கள் என்ன செய்தாலும் அது நீடித்து நிற்கிறது. இருவரது நாடிகளும் அங்கே இணைத்துக் கட்டப்படுவதால்தான், அது ஒருமுறை செய்யப்பட்டதென்றால், வாழ்நாள் முழுவதும் நிலைத்துவிடுகிறது. மறுபரிசீலனை செய்வது என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. ஏனெனில் முறையாக என்ன செய்யவேண்டும் என்று அறிந்தவர்களால், உங்களது புரிதலுக்குட்படாத மிகமிக ஆழமான ஒன்று இணைத்துக் கட்டப்படுகிறது. இப்போதும் அதேவிதமான செய்முறை செய்யப்படுகிறது. ஆனால் அதன் அறிவியல் தெரியாதவர்களால் அது நடத்தப்படுகிறது. ஆகவே, பல காரணங்களால் “அந்தக் கயிற்றை அணிய எங்களுக்கு விருப்பமில்லை” என்ற மறுப்பு மக்களிடம் தற்போது இயல்பாக எழுகிறது. இன்றைய நிலையில், நீங்கள் அதை அணிந்தாலும், அணியாமல் இருந்தாலும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் அதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காணாமல் போய்விட்டது.
அது எப்படி செய்யப்படுவது என்பதை அறிந்த ஒருவரால் மங்கல சூத்திரம் செய்யப்பட்டபோது, அதன்பிறகு அந்த இருவருக்கும் “இந்த நபர் என் மனைவியாக இருக்க வேண்டுமா, இல்லையா?” என்றும் “இந்த ஆண்தான் என்றென்றைக்கும் என் கணவராக இருக்கப் போகிறாரா?” என்றும், அவர்கள் மனதில் சந்தேகம், சலிப்பு என்று எதுவும் எழுவதில்லை. அந்த உறவில் இருவரும் தடங்கலின்றி பயணப்படுகின்றனர். மரணத்துடன்கூட அது நிற்பதில்லை. இருவரில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றவர் ஆரோக்கியமாக இருந்தாலும் சில மாதங்களுக்குள் இவரும் இறந்துவிடுவார். ஏனென்றால் சக்திநிலைகள் அந்தமாதிரி கட்டப்பட்டிருந்தன. இன்னொரு மனிதரோடு நீங்கள் அந்தவிதமாக பிணைக்கப்பட்டால், இரண்டு உயிர்களும் ஒரே உயிராக வாழ்கிறது. அது அற்புதமான ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கையே உச்சபட்ச சாத்தியமாக இருப்பதில்லை என்றாலும், அது வாழ்வதற்கான அழகான ஒரு வழிமுறையாக இருக்கிறது.
இன்றைக்கு மக்கள் அன்பைப் பற்றிப் பேசும்பொழுது, அன்பின் ஒரு பகுதியாக மட்டும் இருக்கின்ற உணர்ச்சிகளைக் குறித்தே பேசுகின்றனர். உணர்ச்சிகள், இன்றைக்கு ஒருவிதமாகக் கூறும், நாளைக்கு வேறொருவிதமாகக் கூறும். நீங்கள் முதலில் உறவை உருவாக்கிய பொழுது, “இது என்றென்றைக்குமான உறவு” என்று எண்ணினீர்கள். ஆனால் மூன்று மாதங்களுக்குள், “ஓ, நான் ஏன்தான் இந்த நபருடன் இருக்கிறேன்?” என்று எண்ணுகிறீர்கள். ஏனெனில் இதெல்லாமே உங்கள் விருப்பு, வெறுப்பின் வழியே நிகழ்கின்றன. இந்தவிதமான உறவு நிலையில் நீங்கள் அதிக துன்பத்திற்கு மட்டுமே ஆளாவீர்கள். ஏனெனில் ஒரு உறவுநிலையானது, சமநிலையற்று இருந்தாலும் இந்த மாதிரி அவ்வப்போது விலகுவதும், இணைவதுமாகவும் இருந்தாலும், நீங்கள் அளவு கடந்த வலியையும், வேதனையையும் அனுபவிப்பீர்கள். இது முற்றிலும் தேவையற்ற ஒன்று.

அன்பினால் உருவாகும் வலியைக் குறித்து எண்ணற்ற கவிதைகள் எழுதப்பட்டிருந்தாலும், அன்பின் நோக்கம் வலியை உருவாக்குவதல்ல. அன்பிற்குள் நீங்கள் ஏன் செல்கிறீர்கள் என்றால், அன்பு என்பது உங்களுக்குப் பரவசத்திற்கான ஒரு வழியாக இருக்கிறது. அன்பு கொள்வது நோக்கமல்ல, பரவசம் அடைவதே நோக்கமாக இருக்கிறது. யாருடனாவது காதலில் விழுவது குறித்து மக்கள் பித்தாக இருக்கின்றனர். ஏனெனில் எத்தனை முறை அன்பில் அவர்கள் காயப்பட்டாலும், அவர்கள் காதலில் இருந்த நினைவே அவர்களுக்குள் ஒரு சிறிதளவு பரவசம் தருவதாக உள்ளது. பரவசத்திற்கான ஒரு வழியாகவே மக்கள் காதலைப் பார்க்கின்றனர். எப்படி பரவசமாக இருப்பது என்பதற்கு, பெரும்பாலான மக்களும் தற்போது அந்த ஒரு வழியைத்தான் அறிந்திருக்கின்றனர்.
ஆனால், எந்த வழியையும் சார்ந்திருக்காமல் பரவசமுடன் இருக்கமுடியும். நீங்கள் ஆனந்தத்துடன் இருந்தால், அன்புடன் இருப்பது ஒரு பிரச்சனையல்ல. எப்படியும் அப்போது நீங்கள் அன்பாகத்தான் இருப்பீர்கள். அன்பின் மூலமாக நீங்கள் ஆனந்தத்தைத் தேடும்போதுதான், யார் மீது அன்பாக இருப்பது என்பது பற்றி அதிகம் தேர்வு செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஆனந்தத்தில் நிரம்பியவர் என்றால், நீங்கள் பார்ப்பது எதுவாயினும், அதனுடன் நீங்கள் அன்பாக இருக்கமுடியும். ஏனென்றால் பிணைக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் அங்கே இல்லை. பிணைக்கப்படும் பயம் இல்லாதபொழுது மட்டும்தான் வாழ்க்கையோடு, உயிர்த்தன்மையோடு ஈடுபாடு கொள்வீர்கள்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vela - Kanchipuram,இந்தியா
25-டிச-201801:28:04 IST Report Abuse
Vela அன்பில் கலக்கலாக கலக்கிட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X