புதுடில்லி: -மத்திய அரசு, ஜி.எஸ்.டி., வரியினங்களை, ஐந்தில் இருந்து, நான்காக குறைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.கடந்த, 2017, ஜூலை, 1ல், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தது.
இதில், பூஜ்யம், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, ஐந்து வரியினங்கள் உள்ளன.
தாக்கம்
இதில், 12 மற்றும் 18 சதவீத வரியினங்களை இணைத்து, 15 சதவீதம் என்ற ஒரே வரியை அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'ஜி.எஸ்.டி.,உடன், 18 மாதங்கள்' என்ற தலைப்பில், முகநுாலில் வெளியிட்ட செய்தி:கடந்த ஒன்றரை ஆண்டுகளில், மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி., வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.அதிகம் பயன்படுத்தும், 1,216 பொருட்களில், தற்போது பூஜ்ய வரி விதிப்பின் கீழ், 183 பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், 308 பொருட்களுக்கு, 5 சதவீதம்; 178 பொருட்களுக்கு, 12 சதவீதம்; 517 பொருட்களுக்கு,
18 சதவீதம் வரி வதிப்பு உள்ளது.ஆடம்பரமான மற்றும்புகையிலை போன்ற பாவப் பொருட்களுக்கு, 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது.இப்பிரிவில், டிஷ் வாஷர், வாகனம், சிமென்ட், 'ஏசி' உள்ளிட்ட, 28 பொருட்கள் தான் இருந்தன. எனவே, ஜி.எஸ்.டி.,யில் அதிகபட்ச வரியினத்தின் தாக்கமும்குறைந்தது.நாடு, ஜி.எஸ்.டி.,க்கு முற்றிலும் மாறியுள்ள சூழலில், வரியினங்களை சீரமைக்கும் முதற்கட்ட பணி முடிந்துள்ளது.அதன்படி, ஆடம்பரம் மற்றும் பாவப் பொருட்கள் தவிர்த்து, எஞ்சிய பொருட்கள் அனைத்தும், 28 சதவீதவரியினத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
வருவாய்
அடுத்து, 12 மற்றும் 18 சதவீதம் என்ற இரு வரிகளுக்கு பதிலாக, இரண்டுக்கும் பொதுவான வரியை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். ஆனால், இதற்கு சில காலமாகும். வரி வருவாய், குறிப்பிடத்தக்க அளவிற்கு உயரும் போது, இரண்டு வரிகளையும் ஒன்றிணைத்து, ஒரே வரியாக ஆக்குவது குறித்து, அனைத்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பின், முடிவெடுக்கப்படும்.ஆடம்பர பொருட்களுக்கான வரி தவிர்த்து, மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கு, பூஜ்யம், 5 மற்றும் 12 - -18சதவீதத்திற்கு இடைப்பட்ட ஒரு வரி என, மூன்று வரியினங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.தற்போது, சிமென்ட் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகியவை தான், 28 சதவீத வரியினத்தில் உள்ளன. அடுத்து, சிமென்ட்
வரியை குறைக்க, முன்னுரிமை அளிக்கப்படும்.ஏற்கனவே, அனைத்து கட்டுமானப் பொருட்களுக்கான வரி, 28 சதவீதத்தில் இருந்து, 18 மற்றும் 12 சதவீதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.கடந்த, 22ம் தேதி நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 28 சதவீத வரி விதிப்பில் இருந்த, 23 பொருட்கள், குறைந்த வரி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளன.அதனால், ஜி.எஸ்.டி.,யில், சாதாரண மக்களுக்கான அதிகபட்ச, 28 சதவீத வரி, பெரும்பாலும் முடிவிற்கு வந்துள்ளது என்றே கூறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பற்ற அரசியல்
பழைய மறைமுக வரி திட்டத்தில், 31 சதவீத வரி சுமையுடன், இந்தியாவை ஒடுக்கியிருந்தோரும், ஜி.எஸ்.டி.,யை குறை கூறியோரும், தங்களை தீவிரமாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. பொறுப்பற்ற அரசியலும், பொருளாதார நடவடிக்கைகளும், நாட்டை கீழே தள்ளத்தான் துணைபுரியும் என்பதை அவர்கள் உணர வேண்டும். ஜி.எஸ்.டி.,க்கு பின், பல மாநிலங்களின் வரி வருவாய் உயர்ந்துள்ளது.அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (45)
Reply
Reply
Reply