முத்துநகர், கொற்கை என்றும் அழைக்கப்படும் துாத்துக்குடி, உலகம் முழுதும் பேசப்படும் நகரமாக, இன்று மாறி விட்டது. அதற்கு பல காரணங்கள். ஓர் ஆலைக்கு ஏற்பட்டு உள்ள எதிர்ப்பு; அது தொடர்பான சட்ட மோதல்கள்; அரசு அறிவிப்புகள் போன்றவற்றால், இந்த ஊரின் பெயர், அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறது. ஆம், துாத்துக்குடி நகரம், சமீபத்திய களேபரங்களால், உண்மையிலேயே, 'அடி' தான் படுகிறது.எங்கள் ஊர், எவ்வளவு அருமையான ஊர் தெரியுமா... பல நுாறு ஆண்டுகளுக்கு முன்னரே, ஆழ் கடல் முத்துக் குளித்தலுக்கு, உலக அளவில் பெயர் பெற்றது. இங்குள்ள கடலில் விளைந்த முத்துகளுக்கு, பல வெளிநாட்டினர் அதிக விலை கொடுத்தனர்.கேரளாவின் நறுமணப் பொருட்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ, அதே அளவிற்கு, துாத்துக்குடி முத்துக்கும் மதிப்பு இருந்தது.சுதந்திர போராட்ட காலத்தில், ெவள்ளை யருக்கு எதிரான போராட்ட களமாக, எங்கள் ஊர் விளங்கியது. வ.உ.சிதம்பரனார், இங்கிருந்து தான், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக கப்பல் ஓட்டினார். பிரபலமான சுதந்திர போராட்ட தியாகிகள் பலர், இங்கு தங்கியிருந்து, போராட்டங்களுக்கு வியூகம் வகுத்துள்ளனர்.பெரிய தொழிலதிபர்கள் பலரை, ஈன்றெடுத்தது இந்த ஊர். திருநெல்வேலியுடன் நீண்ட காலமாக ஒட்டியிருந்த இந்த நகரம், அதன் இரட்டை நகரங்களில் ஒன்றாக விளங்கியது. பாரம்பரியத்திற்கு திருநெல்வேலி நகரம்; தொழில், வேலைவாய்ப்புக்கு, துாத்துக்குடி என, பெருமைபட விளங்கியது.முத்துக் குளித்தல் போல, துாத்துக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில், கடல் நீரை வயல்களில் பாய்ச்சி, பக்குவமாக உப்பு தயாரிக்கும் தொழிலும், இங்கு பிரசித்தி. பிற நகரின் உப்பை விட, துாத்துக்குடி உப்பு, நன்றாக கரிக்கும். இதனால், துாத்துக்குடி உப்புக்கு, பிற மாநிலங்களில் நல்ல வரவேற்பு.உழைப்பு, உண்மை, நேர்மைக்கு இலக்கணமாக திகழும் இந்த ஊருக்கு தான், இப்போது எத்தனை முகங்கள்! மிகப் பெரிய துறைமுகம் இருப்பதால், உலக நாடுகள் பலவற்றின் கப்பல்கள், இங்கு வருகின்றன. அதிலிருந்து இறங்கும், பல நாடுகளின், பல நிற மனிதர்கள், நகரின் அழகை சுற்றிப் பார்க்கின்றனர்.இங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும், பல மாநிலங்களின் ஊழியர்களால், தேச ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாக, இந்த ஊர் திகழ்கிறது.அதே நேரத்தில், சிறுமியாக நான் இருந்த போது, இந்த ஊர் எப்படி இருந்தது என, நினைத்துப் பார்க்கிறேன்...'துாத்துக்குடியில் இருந்து வருகிறேன்...' என்று சொன்னால் போதும். 'அய்யோ... துாத்துக்குடியா... அங்கேயா இருக்குறீங்க... குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரமாச்சே...' என்பர். அந்த அளவுக்கு, 40 - 50 ஆண்டுகளுக்கு முன், அந்த நகரில், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி அதிகமாக இருந்தது.இப்போது போல, அப்போது, மக்களின் நேரத்தை கொல்லக்கூடிய, 'டிவி' அல்லது மொபைல் போன் கிடையாது. சாயங்கால நேரங்களில், வீடுகளின் திண்ணையில் உட்கார்ந்து, கதை பேசிய பெண்கள், துாத்துக்குடியின் அப்போதைய ரவுடிகளைப் பற்றி, காதுகளுக்குள் கிசுகிசுப்பர்.திடீரென கொலைகள் நடப்பதும், உடனே கடைகளை இழுத்து மூடி, பஸ் போக்குவரத்தை நிறுத்துவதும், மக்களுக்கு பழகிப் போன நிகழ்வுகளாக இருந்தன. நகரை அச்சுறுத்திய ரவுடிகளையும், சமூக விரோதிகளையும், போலீஸ் அதிகாரிகள் சிலர், வீர தீரத்துடன் ஒடுக்கிய கதைகளை, இன்றும் சிலர் சொல்லக் கேட்கலாம்.இந்நகருக்கு இருந்த மோசமான பெயரை மாற்றியது, இங்கு வளர்ந்துள்ள தொழில்களும், அவற்றை வளர்த்த தொழிற்சாலைகளும் தான். துறைமுகம், ஸ்பிக், டாக், ஸ்டெர்லைட், அனல் மின் நிலையம், சிறிதும், பெரிதுமான ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், துாத்துக்குடி நகரின் முகத்தை, படிப்படியாக மாற்றியுள்ளன.இப்போது, 'துாத்துக்குடியிலிருந்து வருகிறேன்' என, யாரிடமாவது சொன்னால், 'அட, நல்ல ஊர் ஆச்சே... தொழில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள ஊர்... யார் வேண்டு மானாலும், அந்த ஊரில் பிழைத்துக் கொள்ளலாம்' என, சொல்லும் அளவுக்கு, ஊர் மாறி விட்டிருக்கிறது.ஒரு ஊரில், தொழிற்சாலை நன்கு வளர்ச்சி அடைந்து விட்டால், அதை சுற்றிலும், நிறைய பேர் முன்னேறுவர் என்பது கண் கூடு. துறைமுகம் காரணமாக, துாத்துக்குடியைச் சுற்றி, நிறைய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன, இந்த சின்ன நகரில்!ஏற்றுமதி, இறக்குமதிக்கான பணிகளை எளிதாக செய்து முடிக்க, 'ஷிப்பிங் ஏஜன்சிகள்' நிறைய தோன்றின; வசதி, வாய்ப்பு உள்ளவர்கள், தொழிலதிபர்கள் ஆகினர்.இலங்கை, மலேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து, கப்பலில் வந்திறங்கும் மரத்தடிகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளில் இருந்து வரும், 'கன்டெய்னர்'களை இறக்கி வைக்க, 'யார்டு'கள் அதிகமாக தேவைப்பட்டன.கருவேல மரங்கள் மண்டி, எதற்கும் பயன் இல்லாமல் இருந்த, கரிசல் காட்டு நிலங்கள், கன்டெய்னர் யார்டுகளாகவும், மரத்தடி கிடங்குகளாகவும் மாறின. இதனால், நிலங்களின் மதிப்பு உயர ஆரம்பித்தது. அவற்றில் பணி புரிய நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர்; நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகின.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு பணிக்கான அழைப்பு வருமா என, காத்திருந்த இளைஞர்களின் எண்ணிக்கை, திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில், கணிசமாக குறைய ஆரம்பித்தது.பொருளாதாரத்தில் மேம்பட ஆரம்பித்ததால், வெட்டுக்குத்து, கொலை போன்ற குற்றங்களும், இங்கு குறைய ஆரம்பித்தன.துாத்துக்குடி நகரம் ரொம்பவே மாறி விட்டது. சென்னையில் துவங்கும் கடற்கரைச்சாலை, துாத்துக்குடியை தொட்டு செல்கிறது. நாட்டின் எந்த திசையிலிருந்தும், கடல் வழியாகவும், தரை வழியாகவும், வான் வழியாகவும் இந்த நகரை அடைய முடியும்.'மாற்றம் ஒன்று தான் மாறாமல் இருக்கிறது' என்பரே, அது போல, தினமும் துாத்துக்குடி மாறியபடி இருக்கிறது. கண் முன்னே நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து, பரவசப்படுத்தி வருகின்றன.உப்போடும், மீனோடும் மட்டுமே பிணைந்திருந்த இந்நகரின் முகம், மாறி இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆரம்பித்த பஞ்சாலைகள், இப்போது இல்லை என்றாலும், அந்த பிரமாண்ட கட்டடங்கள், இந்த நகரின் பெருமையை பறை சாற்றுகின்றன.பனை மரங்கள் நிறைந்த தேரிக்காடுகளில் பதனீரும், நுங்கும், பனைப்பொருட்களும் தான் கிடைக்கும் என்ற நினைப்பை மாற்றி, 'தோரியம்' போன்ற கனிமங்களும் கிடைக்கின்றன.புதிது, புதிதாய் கல்வி நிலையங்கள், தொழிற்கூடங்கள், பிரமாண்டமான ஆலைகள், அணிவகுத்து செல்லும் ஆடம்பர வாகனங்கள், கப்பல் கப்பலாய் வந்திறங்கும் செல்வங்கள், கடலைத் தாண்டிச் செல்லும் நம் தொழில் திறமைகள்... சில மாதங்களுக்கு முன் வரை, துாத்துக்குடி இப்படி இயல்பாக இருந்தது.மாசு என்ற பெயரில், இந்த நகரின் மாண்பை குலைக்கும் முயற்சி நடந்தது. நிலமும், நீரும் மாசடைவதாக, சில விஷமிகள், தங்கள் பிழைப்பிற்காக வதந்திகள் பரப்பினர்.'உண்மை, செருப்பை காலில் மாட்டுவதற்குள், பொய் ஊரைச்சுற்றி வந்து விடும்' என்பர். அது போல, உண்மையை விட, வேகமாய் பரவும் வதந்திகளுக்கு, இந்தப் பகுதியில் சிலர், 'காது கொடுத்து' விட்டதால் ஏற்பட்ட குழப்பம், இன்னமும் தீரவில்லை. தொழில் வளத்தால் வளர்ந்த இந்த நகரில், தொழிலுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால், இந்த நகரின் உண்மையான முகம் மாறி விடுமோ என, என்னைப் போன்ற, இந்த ஊர் மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால், போராட்டங்களை துாண்டி விட்ட, 'போர்வையாளர்களுக்கு' அது பற்றி கவலையில்லை. ஏனெனில், அவர்களின் குறிக்கோள் வேறு!அத்தகையோரால் துாண்டி விடப்பட்ட, தொழிற்சாலைகள் எதிர்ப்புணர்வு, இன்னமும் எரிந்து கொண்டுள்ளது.பயணத்தின் போது, விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது என்பதற்காக, பயணம் செய்வதை தவிர்த்து விடுகிறோமா... புயலால் மரங்கள் அழிந்து விடும் என்பதற்காக, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாமல் இருந்து விடுவோமா... நிச்சயம் இல்லை!புயலைத் தாங்கக் கூடிய விதைகளைத் தேர்ந்தெடுத்து, காற்று காலங்களில், கிளைகளைத் திருத்தி, புயல் தாக்குதல்களில் இருந்து, மரங்களை காப்பாற்ற முயற்சி எடுப்போம். அது போல தான் ஆலைகளும்!நம் உடலின், ஒரு உறுப்பில் கோளாறு என்றால், அதை சரி செய்ய வேண்டுமே தவிர, அந்த உறுப்பே தேவையில்லை என, அறுத்தெறிந்து விடுவோமா...பார்வையில் பாதிப்பு ஏற்பட்டால், கண்ணாடி அணிகிறோம்; அறுவை சிகிச்சை செய்து, கோளாறை சரி செய்கிறோம். கோளாறு ஏற்பட்டு விட்டது என்பதற்காக, கண்ணே வேண்டாம் என, முடிவெடுக்கிறோமா...ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தால், எந்த வினைகளுக்கும், எதிர் வினை இருக்கவே செய்யும். எதிர் வினை நிகழாமல், உலகம் இயங்குவதில்லை!ஆலைகளும், தொழில்களும் பெருகும் போது, காற்று மாசு ஏற்படுவது, தவிர்க்க முடியாதது தான். தகுந்த கருவிகள், முன்னேற்பாடுகள் மூலம், மாசை தடுக்க முடியும்.மக்களின் உணர்ச்சிகளை துாண்டி, போராட்டம் நடத்தி, தொழிற்சாலைகளை இழுத்து மூடி விடலாம். அதனால் பாதிக்கப்படும் மக்களின், ரத்தக் கண்ணீரும், குடும்பங்களின் வறுமையும், போர்வையாளர்கள் அறியாதது.போட்டிகள் நிறைந்த உலகில், தொழிற்சாலையை நிறுவுவது எளிதல்ல. நகரின் செல்வ வளத்துக்கு ஆதாரமாக இருக்கும் தொழிற்சாலைகளை மூடினால், ஒரு சிலருக்கு வேண்டுமானால், மகிழ்ச்சியாக இருக்கலாம்.ஆனால், அதை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும், லட்சக்கணக்கான மக்களும் நிச்சயம் பாதிப்படைவர். தகுந்த வேலை கிடைக்காத, இந்த அவசர காலத்தில், ஆலைகள் தான், வேலை வழங்கும் பிரம்மாக்கள். அவற்றை மூடி விட்டால், மனிதர் வாழ்க்கையே சூனியமாக மாறி விடும்.பெரிய தொழிலதிபர்களுக்கு, ஒரு ஆலை வீழ்ந்தால், எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அவற்றை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு, நிச்சயம் பாதிப்பு ஏற்படத் தான் செய்யும்.குறிப்பிட்ட ஒரு தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாக கருதினால், அதை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர, இழுத்து மூடக் கூடாது.ஆலைகளின் சங்கோசை தான், துாத்துக்குடியின் உயிர் நாதம்; கப்பல்கள் விடும் புகை தான் பெருமூச்சு; உப்பு தான், இந்நகரின் உரம். செல்வங்கள் வழிந்தோடும், வளங்கள் நிறைந்த தொழில் நகரம் என்பதே, என் ஊரின் உண்மையான முகம்.அப்படியே இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை; உங்களுக்கும் அப்படி தானே!தொடர்புக்கு: 98432 69178.