திருச்சி: அரசு அறிவித்தபடி, 380 ரூபாய் தினக்கூலி வழங்க வலியுறுத்தி, மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்பவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு, அரசு அறிவித்தபடி, 380 ரூபாய் தினக்கூலி வழங்க வேண்டும். கஜா புயல் நிவாரண பணியில் ஈடுபட்டவர்களை பணி நிரந்தரம் செய்வதாக, அமைச்சர் அறிவித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பங்கேற்றனர்.