சாத்துார்:
சாத்துார் அமிர்பாளையம் 2 வது தெருவில் முறையான ரோடு ,வாறுகால், குடிநீர் வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இங்கு மின் கம்பங்கள் சேதமடைந்து உருக்குலைந்த நிலையில் உள்ளது. கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் எந்நேரமும் உடையும் அபாயம் உள்ளது. வாறுகால்களில் பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்துள்ளன. மாதம் ஒரு முறை வரும் துப்புரவு பணியாளர்கள் குப்பையை அகற்றாது விட்டு செல்வதால் வாறுகால்கள் குப்பைக்கிடங்காக உள்ளது. மழைநீர் மட்டுமின்றி கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. லேசான மழை பெய்தாலும் பாதை முழுவதும் சாக்கடை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. பொதுக்கழிப்பறை வசதியின்றி சாத்துார் வைப்பாறு, பழைய பாலத்தை திறந்த வெளிக்கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். ரோட்டில் துர்நாற்றம் வீதுவதுடன் தொற்று நோய் அபாயம் உள்ளது. குடிநீர் உவர்ப்பு சுவையாக இருப்பதால் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல்வாட்டரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். தெருவில் உள்ள ஒரு அடிகுழாயும் பழதடைந்த நிலையில் பெண்கள் குடங்களுடன் அலையும் நிலை உள்ளது. தெருவின் ஒரு பகுதியில் பேவர்பிளாக் பதிக்கப்பட்டும் குறுக்குத்தெருவில் கல்பதிக்காமல் விட்டுள்ளனனர். இதனால் மேடான பகுதியில் இருந்து வரும் மழைநீர் தாழ்வான தெருவில் தேங்கி நிற்கிறது. வாறுகால் கட்டி பல ஆண்டுகளாவதால் தடுப்புச்சுவர் இல்லாமல் கழிவுநீர் தெருவின் நடுவில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் காலி பிளாட்களில் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்களால் பலர் மர்ம காய்ச்சல் பாதிப்பில் தவிக்கின்றனர். பன்றிகள், நாய்கள் சுதந்திரமாக உலா வருவதால் தொற்று நோய் அபாயம் உள்ளது. ஆண்கள், பெண்கள் திறந்த வெளியை பயன்படுத்துவதை தடுக்க பொது சுகாதாவளாகம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதியினரின் வேண்டுகோளாக உள்ளது.கழிப்பறை வசதி தேவை தெருவில் பெரும்பாலானவர்கள் வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளியை நாடும் நிலை உள்ளது. தொற்று நோய் பரவுகிறது. மழைக்காலத்தில் பெண்கள் படும் பாடு சொல்லி மாளாது. ஆண்களுக்கும் இதே நிலை தான். பொதுக்கழிப்பறை கட்டித்தர வேண்டும். வாறுகால் சுத்தம் செய்ய ஆட்கள் வருவதில்லை. மைதீன், தீப்பெட்டி ஆலைதொழிலாளி. மினிபவர் பம்புடன் தொட்டிதெரு குழாயில் வரும் தண்ணீர் உப்பாக உள்ளது. புழக்கத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் ஆற்று பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது. தெருவில் இரண்டு அடி குழாய்கள் உள்ளது. அதில் ஒன்று பழதாகி பல மாதங்களாகிறது. பக்கத்தில் உள்ள அடிகுழாய்க்கு சென்றால் வரிசையில் நின்று பிடிக்கும் நிலை உள்ளது. பழுதான அடி குழாயை சரி செய்வதுடன், மினி பவர் பம்பு பொருத்தி தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் வினயோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேச்சியம்மாள், குடும்பத்தலைவி.வாறுகால் இல்லைதெருவில் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் செல்ல முறையான வாறுகால் வசதியில்லை. ஆங்காங்கே குப்பை கொட்டி அடைத்து வைத்துள்ளனர். சாக்கடை செல்லாமல் வீட்டின் அருகில் தேங்கி நிற்கிறது. லேசான மழை பெய்தாலும் ரோடு முழுவதும் கழிவுநீர் கலந்து நிற்கிறது. அதில் கால் வைத்து தான் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகளுக்கு தோலில் அரிப்பு ஏற்பட்டு தொற்று நோய் பரவுகிறது.ரம்யா, குடும்பத்தலைவி. நிழற்குடை வேண்டும்சாத்துார்-கோவில்பட்டி மெயின்ரோட்டில் வசிக்கிறோம். தினமும் நுாற்றுக்கு மேற்பட்டவர்கள் கோவில்பட்டி, சிவகாசி பகுதிக்கு வேலைக்கு செல்கின்றனர். ரோடு அகலப்படுத்தும் போது பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. மீண்டும் கட்டப்பட வில்லை. வெயிலில், மழையில் நின்று பஸ் ஏறிச்செல்லும் நிலையுள்ளது. பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசுக்கடியால் கடும் அவதிக்குள்ளாகிறோம். கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க வேண்டும்.மாவ்மாபீவி, குடும்பத்தலைவி.