மதுரை:'ஜல்லிக்கட்டுக்காக பலர் போராடி உரிமையை பெற்றுத்தந்த நிலையில், தற்போது போட்டியில் ஜாதிய பாகுபாடு ஏன்' என அதிருப்தியை வெளிப்படுத்திய உயர்நீதிமன்ற மதுரை கிளை, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரம் முனியசாமி, 'அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழு அமைத்து, அவனியாபுரத்தில் ஜன.,15 ல் ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டருக்கு மனு அளித்தேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.
நீதிபதி வி.பவானி சுப்பராயன்: ஜல்லிக்கட்டுக்காக மக்கள் ஜாதி, மதங்களைக் கடந்து குடும்பத்தினருடன் பலநாட்கள் போராடினர். பலர் தாக்குதலுக்குள்ளாகி, ரத்தம் சிந்தி போராடி ஜல்லிக்கட்டு நடத்த பெற்ற உரிமையை பெற்றுத் தந்துள்ளனர். ஆனால், ஜல்லிக்கட்டில் தற்போது ஜாதிய அடையாளங்களை திணித்து, சிலர் சுய கவுரவம் அடைய நினைப்பது ஏன்?
இது ஏற்புடையதல்ல. போட்டியில் பங்கேற்கும் கால்நடைகளுக்கு ஜாதி, மதத்தை பற்றி தெரியுமா? விழா நெருங்கும் நேரத்தில் மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடியுள்ளார். அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிக்க வேண்டும் என அதிருப்தியை வெளிப்படுத்தினார். மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜன.,9 க்கு ஒத்திவைத்தார்.